Doctor Vikatan: சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் சீத்தாப்பழங்கள் விற்கப்படுகின்றன. சீத்தாப்பழத்தில் அப்படி என்னதான் ஆரோக்கிய பலன்கள் உள்ளன... அதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
சுவையில் மட்டுமன்றி, ஆரோக்கிய பலன்களை அள்ளித் தருவதிலும் சீத்தாப்பழம் மிகவும் சிறந்தது. சீசனில் கிடைக்கும் அந்தப் பழத்தை எல்லோரும் தவறாமல் சாப்பிட்டு அதன் பலன்களைப் பெறலாம்.
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துகள் அபரிமிதமாக உள்ளன. இதயநலனைக் காப்பதில் பொட்டாசியம் சத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. மக்னீசியம் சத்து, செரிமானத்தை சீராக்குவதில், தூக்கத்தை வரவழைப்பதில், தசைகளை ரிலாக்ஸ் செய்வதில், மனதை அமைதிப்படுத்துவதில், மலச்சிக்கலை சரியாக்குவதில் பங்காற்றுகிறது. சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6, மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் உடல், மன அவதிகளைக் குறிக்கும் 'ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம்' பிரச்னைகளை மட்டுப்படுத்தும்.
இதிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதிலும், சரும ஆரோக்கியத்துக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகம் என்பதால், ஒட்டுமொத்த உடல்நலனுக்குமே நல்லது. இனிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற கிரேவிங் இருப்பவர்கள், சீத்தாப்பழம் சாப்பிடலாம். குடல்நலத்துக்கும் நல்லது. இந்தப் பழத்தை அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம். ஸ்மூத்தியாக செய்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக்காக செய்து கொடுத்தால் விரும்பிக் குடிப்பார்கள். எனவே, எல்லோருமே இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.