5ஜியில் உலகம் சுருங்கிகொண்டிருக்கும் இந்த வேளையில், இன்னமும் 4ஜியை கூட எட்டாமல் தட்டு தடுமாறி வருகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
4ஜி சேவை பி.எஸ்.என்.எல்லில் முற்றிலுமாக இல்லை என்று கூறிவிட முடியாது. சில பகுதிகளில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், 'கனெக்டிங் இந்தியா' என்ற டேக்லைனோடு தொலைத்தொடர்பு சகாப்தத்தின் ஆரம்ப காலத்தில், இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்புறப் பகுதிகளில் மாஸ் என்ட்ரி கொடுத்த பி.எஸ்.என்.எல்லுக்கு இந்த நிலை என்பது தான் பெரிய கவலை. ஒரு காலத்தில் லேண்ட் லைன் அல்லது போன் வைத்திருந்த பெரும்பாலான இந்தியர்களின் சாய்ஸ் பி.எஸ்.என்.எல் தான். ஆனால், இந்தத் துறைக்குள் தனியார் பிளேயர்கள் வர வர பி.எஸ்.என்.எல் பின்செல்லத் தொடங்கியது.
87 லட்சப் புது சந்தா தாரர்கள்...
ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் பிளேயர்கள் டேட்டா பேக், அன்லிமிட்டெட் போன்கால்கள் என ஆஃபர்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால், அரசின் சொந்த தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், இந்தியா முழுவதும் 4ஜி சேவையை தரவே இன்னும் தடுமாறி கொண்டிருக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் செல்வதாக ஒரு பேச்சு வேறு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த பேச்சு, இப்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வியாக மாறும்போது, "மத்திய அரசு மற்றும் பி.எஸ்.என்.எல் தொடர்ந்து வெளியிட்டு வந்த மறுமலர்ச்சி பேக்கேஜுகள் மூலம் 2020-21 நிதியாண்டில் இருந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆப்ரேஷனல் லாபத்தை பெற்றுக்கொண்டிருக்கிறது" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு ஜூன் - அக்டோபர் காலக்கட்டத்தில், பி.எஸ்.என்.எல்லில் புதியதாக 87 லட்சம் புது சந்தா தாரர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆப்ரேஷனல் லாபம் என்றால் கிடைத்த மொத்த வருமானத்தில் வட்டி, வரி ஆகியவற்றை கழிக்காமல் கிடைத்த லாபம் ஆகும்.
கடன் குறைந்துள்ளது!
பி.எஸ்.என்.எல்லுக்கு இருக்கும் கடன் பற்றி கேட்கும்போது, "மார்ச் 2022-ல் ரூ.40,400 கோடியாக இருந்த கடன் தொகை, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூ.23,297 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பி.எஸ்.என்.எல் 2019, 2022, 2023 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய மறுமலர்ச்சி திட்டங்களே" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதில்களில் ஒன்றாக, 2023-24 நிதியாண்டில் பி.எஸ்.என்.எல்லுக்கு கிடைத்த வருமானத்தில் 39 சதவிகிதம் ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் தகவலின் படி, 2023-24 நிதியாண்டில் ரூ.21,302 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
வருமானம் எவ்வளவு?
பி.எஸ்.என்.எல் வலைதள தகவலின் படி,
2018 - 2019 நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வருமானம் ரூ.18,906 கோடி, 2019 - 2020 -ல் ரூ.18,595 கோடி, 2021 - 22 - ல் ரூ.19,053 கோடி, 2022 - 23 -ல் ரூ.20,699 கோடி ஆகும். 2023-24 நிதியாண்டை விட, 2022 - 23 நிதியாண்டில் 3 சதவிகித அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
ஆக, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நிலை, ஊழியர்களுக்கான சம்பளம், கடன் சுமை ஆகியவற்றை பற்றி பி.எஸ்.என்.எல் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் செல்லப்பாவிடம் பேசியப்போது, அவர் கூறியிருப்பதாவது...
மத்திய அரசின் வழக்கம்
"பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிலையை பொறுத்தவரை, நிறுவனம் ஆப்ரேஷனல் லாபத்தை தான் பெற்று வருகிறதே தவிர, மொத்த லாபத்தை அல்ல. அதன்படி பார்க்கும்போது, நிறுவனம் நஷ்டத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறது.
பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு முக்கியமாக இரண்டு கோரிக்கைகள் இருந்து வருகிறது. ஒன்று, ஊதியம் மற்றும் பென்சன் மாற்றம். இன்னொன்று, 4ஜி, 5ஜி சேவை. ஊதியம் மற்றும் பென்சன் மாற்றம் கடைசியாக 2007-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 2017-ல் நடந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் மாற்றப்படவில்லை.
ஊதிய மாற்றம் என்றால் விலைவாசி உயர்வு மற்றும் துறையின் வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு ஊழியருக்கும் ஊதியம் உயர்த்தப்படும். இதுப்போலவே பென்சன் மாற்றமும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு துறைகளில் இப்படி ஊதியம் மாற்றப்படுவது மத்திய அரசின் வழக்கம்.
4ஜி, 5ஜி சேவைகள்...
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதும் சீக்கிரமாக 4ஜி, 5ஜி சேவைகளை தொடங்க வேண்டும். இன்னும் இவை தொடங்கப்படாததற்கு காரணம், மத்திய அரசு ஜியோவுக்கு ஆதராவாக இருப்பது தான்.
முன்பு, பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டப்போது 4ஜி ஸ்பெக்ட்ரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு தேவைப்படுகிற இயந்திரங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தவில்லை. ஆனால், தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இயந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்து அடுத்துக் கட்டத்திற்கு சென்றுவிட்டனர் . ஆனால், 'மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் தான் இயந்திரங்களை பெற வேண்டும் என்பதால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் முழுவதுமாக இன்னும் 4ஜி, 5ஜி சேவைகளில் அடி எடுத்து வைக்கவில்லை.
2020-ம் ஆண்டு வரை, இந்தியாவில் இருக்கும் எந்த நிறுவனமும் தொலைதொடர்பு சம்பந்தமான இயந்திரங்களை உற்பத்தி செய்யவில்லை. தற்போது, அந்த இயந்திரங்களின் உற்பத்தியை தொடங்கியிருக்கும் டி.சி.எஸ் நிறுவனம் தான், அவற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக சப்ளை செய்து வருகிறது.
இது செய்தால் தான்...
பி.எஸ்.என்.எல் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் 4ஜி சேவையும், அதற்கடுத்த ஆறு மாதங்களில் 5ஜி சேவையும் வழங்க உள்ளது. இது வெற்றிகரமாக நடந்துவிட்டால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கும்...எங்களுக்கும் ஊதிய மற்றும் பென்சன் மாற்றம் நடக்கும்.
பி.எஸ்.என்.எல் என்பது பொதுத் துறை நிறுவனம் ஆகும். அதனால், அதன் முக்கிய நோக்கமே சேவை தான். அதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி, 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினாலும், அதிகப்படியான விலை அல்லது விலையேற்றம் இருக்காது. மேலும், இந்தத் துறையில் வரம்பு இல்லாத விலை ஏற்றங்கள் நடப்பதற்கு செக் ஆக 4ஜி, 5ஜி சேவைகள் அமையும்.
2019-ம் ஆண்டு தொகை...
நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின் படி,
2019-ம் ஆண்டு நடந்த முதல் மறுமலர்ச்சி திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.69,000 கோடி கொடுத்துள்ளது.
அதில்...
2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஓய்வுப்பெற்ற 80,000 ஊழியர்களுக்கு ரூ.29,000 கோடியை செட்டில்மென்ட் தொகையாக கொடுக்கப்பட்டுவிட்டது.
4ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு ரூ.20,140 கோடியும், ஜி.எஸ்.டி தொகையாக 36.74 கோடியும் கொடுக்கப்பட்டது. இறையாண்மை உத்திரவாதம் என்று பணமாக அல்லாமல் அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உத்திரவாதமாக ரூ.15,000 கோடியை கொடுத்தது. இதை எல்லாம் கூட்டி பார்த்தாலே, கிட்டதட்ட ரூ.69,000 கோடி வந்துவிடும். இதில் ஒரு ரூபாய் கூட பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வரவில்லை.
2022-ம் ஆண்டு தொகை...
2022-ம் ஆண்டில், மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இறையாண்மை உத்திரவாதம் ரூ.40,399 கோடி.
அதில்...
4ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு ரூ.44,993 கோடியும், ஏ.ஜி.ஆருக்கு ரூ.33,404 கோடியும், பி.எஸ்.என்.எல்லில் டெக்னிக்கல் சம்பந்தமான ஒரு பங்கிற்கு ரூ.7,500 கோடியும் சென்றுவிட்டது. இதுப்போக, கிராமப்புற தொலைப்பேசி சேவைக்கு கொடுக்கப்பட்ட ரூ.13,789 கோடியும், மூலதன செலவு தொகை ரூ.22,471 கோடியும் தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு கையில் கிடைத்த நிதி.
2023-ம் ஆண்டு தொகை...
2023-ம் ஆண்டு மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.89,000 கோடி கொடுக்கப்பட்டது. இந்த மொத்தத் தொகையும் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு சென்றுவிட்டது.
மேலே கூறிய மூன்று மறுமலர்ச்சி திட்டத்தை வைத்து பார்க்கும்போது, 2022-ம் ஆண்டு மறுமலர்ச்சி திட்டத்தில் மட்டுமே, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நிதி கிடைத்திருக்கிறது. அதுவும் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடியில் ரூ.36,260 கோடி தான்.
ஆக, மறுமலர்ச்சி திட்டம் மூலம் கிடைத்த மீதி தொகை எல்லாம் நிதி வழங்கிய மத்திய அரசுக்கே சென்றுவிட்டது. மத்திய அரசு நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரங்களை இலவசமாக கொடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை லாபம் மற்றும் வளர்ச்சி பாதையில் திருப்பியிருக்கலாம்.
எப்படியோ, இனி வரவிருக்கும் 4ஜி, 5ஜி திட்டத்தில் தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது" என்றார்.