பாலியல் வன்கொடுமைகள், ஆசிட் வீச்சு, போக்சோ (POCSO) குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு/உயிர் பிழைத்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் நீதிபதிகள் பிரதீபா எம். சிங், அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த இந்தத் தீர்ப்பில், ``மத்திய, மாநில அரசு நிதியுதவி பெறும், பெறாத அனைத்து மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும். முதலுதவி, நோயறிதல், ஆய்வக சோதனைகள், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை, உடல் மற்றும் மனநல ஆலோசனை, உளவியல் உதவி, குடும்ப ஆலோசனை அனைத்தும் இந்த சிகிச்சையில் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அனுமதிப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் அடையாளச் சான்றுகளைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு உள்நோயாளி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலும் அவர்களிடம் கட்டணம் கேட்டு நிர்பந்தப்படுத்தக் கூடாது.
இந்த விஷயத்தில் அனைத்து மருத்துவமனைகளும், `பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு தாக்குதல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு/உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச புறநோயாளி மற்றும் உள்நோயாளி மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும்.' என்றும் போர்டு வைக்க வேண்டும். இந்தப் போர்டு, மருத்துவமனையின் நுழைவாயில், ரிசப்ஷன், கவுன்டர்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் வைக்கப்பட வேண்டும்.
இந்த விதிகளை மீறும் எவருக்கும் ஒரு வருடம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைகள் மருத்துவமனைகள் நிர்வாகத்தால் வெளியிடப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்காதது கிரிமினல் குற்றம் என்று அனைத்து மருத்துவர்கள், நிர்வாகம், அதிகாரிகள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவ்வாறு, யாரேனும் சிகிச்சையளிக்கவில்லை என்று போலீஸ் கண்டறிந்தால் அவர்கள் மீது BNS பிரிவு 200-ன் ( IPC பிரிவு 166B) கீழ் புகார் பதிவு செய்யப்படும்." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.