கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணி, ``அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி இழிவாக பேசியுள்ளார். இது, நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேருவை நேரடியாகயும், அம்பேத்கரை மறைமுகமாகவும் விமர்சனம் செய்கின்றனர். நேரடியாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி அமித் ஷா பேசி உள்ளார். அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்திற்கு எதிராக பா.ஜ.க-வினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். மனுநீதிக்கு ஆதரவான ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மையை பா.ஜ.க-வினர் ஆதரித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை மட்டும் அமித் ஷா இழிவுபடுத்தவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். அம்பேத்கர் மற்றும் அரசியல் சாசனத்தை இந்த மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துள்ளனர். அம்பேத்கரை அவமரியாதையாக பேசிய அமித் ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இது சம்பந்தமாக குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை கடிதம் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக பா.ஜ.க அரசு ஆட்சி நடத்தி வருகிறது. 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை ரத்து செய்யும் வகையில், கல்வித்துறையை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் வகையில் மாற்றம் செய்து வருகிறது. இந்தி பேசினால், படித்தால் மட்டுமே தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்குவோம் என கூறும் ஒன்றிய அரசு, தமிழ் பேசும் மக்களிடம் ஜி.எஸ்.டி வரி கேட்காமல் இருக்கலாம் அல்லவா?. எதற்காக, தமிழக மக்களின் வரிப்பணத்தை வசூல் செய்கின்றனர்?” என கேள்வி எழுப்பினார்.