BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 18 December 2024

'பழனிசாமியின் பயப்பட்டியல் ' ; `திமுக-வுக்கு பயம் வந்துவிட்டது' - முற்றும் அதிமுக, திமுக `பயம்’ வார்

'அ.தி.மு.கவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம்'

சமீபத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் கூட்டணி சரியாக அமையவில்லை என்றார்கள். கூட்டணி வரும் போகும். ஆனால் அ.தி.மு.கவின் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அ.தி.மு.கதான். கடந்த 2021-ம் ஆண்டு வெறும் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக. இன்று டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி வசூல் கிடைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவை நாள்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அ.தி.மு.கவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. இரண்டு நாட்கள் மட்டும் சட்டப்பேரவையை நடத்தியுள்ளார்கள். அதில் ஒரு நாள் மட்டும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி. அதுவும் பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு 10 நிமிடங்கள் தான் அனுமதி. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது அதனைத் துண்டிப்பார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் தி.மு.க அரசே இருந்திருக்காது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அக்கட்சியின் எம்.பி. கனிமொழி கூறுவது பகல் கனவு. 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்" என்றார்.

`கோழைசாமி’க்கு பா.ஜ.க பாசம்'

இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "பா.ஜ.கவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தி.மு.க அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்', மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என சொல்லி ’கோழைசாமி’ பா.ஜ.க பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித் ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம். இப்படி பழனிசாமியின் பயப்பட்டியல் எல்லாம் பயம் பயம் எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.

அமைச்சர் நேரு

ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு கொடுத்தார். முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என இரட்டை வேடம் போட்டார். முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-ல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தனர். மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக பா.ஜ.க நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் பதுங்கினர். நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்தவர் பழனிசாமி.

மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பா.ஜ.கவின் உன்னத தோழன் அ.தி.மு.க. இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார். அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026ல் மீண்டும் அ.தி.மு.க அரியணை ஏறும் என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி" என தெரிவித்துள்ளார்.

'அச்சம் என்ற சொல்லே எடப்பாடி அகராதியில் கிடையாது'
எஸ்.பி வேலுமணி

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி, மக்களின் குரலாக வீறுகொண்டு ஒலிப்பதைக்கண்டு அஞ்சி நடுங்கி, விடியா தி.மு.க மந்திரி நேரு பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது ஸ்டாலினின் திமுக. அச்சம் என்ற சொல்லே எடப்பாடி அகராதியில் கிடையாது. மக்களுக்காக உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்று எடப்பாடி சட்டப் பேரவையில் கர்ஜித்த போது, எதிர் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலைமையிலான மொத்த தி.மு.க கூட்டமும் பயந்து நடுங்கியதை தமிழ் நாட்டு மக்கள் பார்த்த பிறகும், எங்களைப் பார்த்து பயம் என்ற சொல்லை தி.மு.க பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், பல நூறு கோடி ரூபாய் கடன்களுக்குச் சொந்தக்காரர்களான உங்களுடைய குடும்பத்திற்கு, தற்போது அத்தனை கடனையும் அடைப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது ? மீண்டும் செல்வச் சீமானாக வலம் வருவது எப்படி என்பதை "பயம்" இல்லாமல் சொல்வாரா பம்(மிய)மல் நேரு?. உங்கள் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த, இப்போதும் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில், குறுகிய காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாயை ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சுருட்டியதாகச் சொன்னாரே யார் அவர்கள் என்று "பயம்" இல்லாமல் சொல்வாரா பம்மல் நேரு?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

இந்த 30,000 கோடி ரூபாய் உட்பட உங்களுடைய அனைத்து ஊழல்களும் அம்பலப்படும் என்பதால், ரெய்டுக்கும், வருமானவரித் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் "பயந்து" இந்தியா கூட்டணியில் இருந்தும் கூட, பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அழைத்து கருணாநிதி நாணயத்தை வெளியிட்டு, 'சூரியன்-தாமரை' கூட்டணியை தமிழ் நாட்டு மக்களுக்கு திரையிட்டுக் காட்டியவர்களே நீங்கள் தானே!. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஏன் கடிதம் எழுதவில்லை என்று மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் எழுப்பிய எக்ஸ் வலைதளக் கேள்விக்கு மதுரை, மேலூர் மக்களுக்கு பயமில்லாமல் பம்மல் நேரு பதில் அளிப்பாரா?. சிறுபான்மையினரின் காவலனாக போலி வேடமிடும் விடியா தி.மு.க அரசு எதற்காக பயந்தது போய் சென்னையில் உள்ள NIA அலுவலகத்திற்கு கூடுதலாக காவல் நிலைய அங்கீகாரம் அளித்தது? அதுமட்டுமல்லாமல், தானாக FIR பதியும் அதிகாரத்தையும் அளித்தது எந்த பயத்தின் அடிப்படையில்?

`நேருவுக்கு அருகதை இல்லை’

பயம், பயம் என்று தெனாலி திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய பம்மல் நேருவுக்கு, நானும் அதே மேற்கோளைத் தர விழைகிறேன். நீட் என்றால் பயம்! மேக்கேதாட்டூ என்றால் பயம்! மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கலைஞர் டி.வி-யில் ரெய்டு பயம்! குடையின் நிறத்தையே மாற்றி வெள்ளைக் குடை காட்டும் அளவுக்கு பயம்! பிரஸ் மீட் என்றால் பயம்! சட்டப் பேரவை என்றால் பயம்! நேரலை என்றால் இன்னும் பயம்! தற்போது டங்ஸ்டன் என்றால் பயம்! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்தாலே பயமோ பயம்! காற்றடித்தால் பயம் - துண்டுச் சீட்டு பறந்துவிடுமே என்பதால்!. அதனால்தான், 2 நாட்களில் சட்டமன்றத்தையே நடத்தும் ஸ்டாலின், எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிக்கைகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தனது அடிமை மந்திரிகள் மூலம் பதில் அளிக்கிறார் என்பதை பம்மல் நேரு பயமில்லாமல் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா?.

அன்பில் மகேஷ்

திருச்சியின் தி.மு.க. தாதா தான்தான் என்று கூறும் இந்த நபரை, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மந்திரியான அன்பில் மகேஸ் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மதிக்காத நிலைதான் உள்ளது. தங்களை சம்பாதிக்கவிடாமல், தொழில் செய்யவிடாமல் செயல்படுவதாக, சொந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள். தன் மகன் அருண் நேருவை நாடாளுமன்ற உறுப்பினராக, மாப்பிளைக்கும், வாரிசுக்கும் இவர் கால் கழுவியதை சொல்லிச் சொல்லி திருச்சி உடன்பிறப்புகள் காரி துப்புகிறார்கள். தன்மான சிங்கமாக நடைபோடும் எடப்பாடி பற்றி பேசுவதற்கு, இவருக்கு எந்த அருகதையும் இல்லை. "பயம்" மட்டுமே உருவான உண்மையான கோழை, ஸ்டாலினின் சீனியர் கொத்தடிமையாக இருந்து, மாநகராட்சி கவுன்சிலர்களின் அடிதடிகளை கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் நேருவுக்கு, அ.தி.மு.க பற்றி பேசுவதற்கு எள்ளளவும் அருகதை இல்லை" என தெரிவித்துள்ளார்.

`தமிழக மக்களுக்குதான் பயம்!’

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும் பொழுது தமிழக மக்களுக்குதான் பயமாக இருக்கிறது. திமுக, அதிமுக செய்துகொண்டிருப்பது லாவண்யா அறிக்கை அரசியல்தான். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது இருவரும் தவறு செய்திருப்பார்கள். மத்திய அரசை எதிர்த்து வலியுறுத்துகிறோம் என தீர்மானம் நிறைவேற்றிருப்பது பயம்தான். அது விவாதிக்க வேண்டிய விஷயம்தான். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எதுவுமே தமிழகத்திற்கு நன்மை செய்யவில்லை என்றுதான் சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமி சொல்லிவருகிறார்.

குபேந்திரன்

அந்த அடிப்படையில் வலிமையான தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என தி.மு.க சொல்கிறது. பதிலுக்கு அ.திமு.க வெளியிட்ட அறிக்கையில் மேகதாது, சட்டமன்றத்தை கூட்டுவது, நேரலை செய்வதில் பயம் என தெரிவித்திருந்தார்கள். இதில் சட்டமன்றத்தை குறைந்த அளவில் கூட்டுவது குறித்த அதிமுகவின் விமர்சனம் நியாயம்தான். அப்படி கூட்டினால்தான் தமிழ்நாட்டின் பிரச்னைகள் சட்டசபையில் எதிரொலிக்கும். இதை திமுக செய்யவில்லை. எனவே மக்கள் தி.மு.க, அ.தி.மு.க குறித்து ஒரு அளவுகோள் வைத்திருப்பார்கள். தேர்தல் நேரத்தில் தங்களது முடிவை வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies