மெல்பர்ன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் நடந்து வருகிறது. கடந்த டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்ட்டிலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் கடுமையாக சொதப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்ப்பதே போராட்டமாக மாறியிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் ஸ்மித் மிகச்சிறப்பாக ஆடி சதத்தை அடித்திருந்தார். கான்ஸ்டஸ், கவாஜா, லபுஷேன் என அத்தனை டாப் ஆர்டர் வீரர்களும் நன்றாக ஆடியிருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலைக்கு சென்றது.
இந்நிலையில் இரண்டாம் நாளின் இரண்டாவது செஷனிலிருந்து இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. வழக்கம்போல ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி சொதப்பவே செய்தது. ராகுலை கீழே இறக்கிவிட்டு ரோஹித் ஓப்பனிங் இறங்கினார். எந்த பலனும் இன்றி வழக்கம்போல அரைகுறையாக ஒரு ஷாட்டை ஆடி சொற்ப ரன்னில் அவுட் ஆனார். கே.எல்.ராகுலால் இந்த முறை நின்று ஆட முடியவில்லை. இருவரையுமே கம்மின்ஸ் வீழ்த்தியிருந்தார். கோலியும் ஜெய்ஸ்வாலும் நின்று ஆடினர். ஜெய்ஸ்வால் 82 ரன்களை எடுத்திருந்தார். சதத்தை நோக்கி முன்னேறுகையில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருந்தார். கோலி பொறுமையாக பந்துகளை லீவ் செய்து ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், திடீரென போலண்ட்டின் பந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு எட்ஜ் ஆகி 36 ரன்களில் அவுட். நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப்பும் போலபண்டின் பந்தில் டக் அவுட்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 164-5 என்ற நிலையில் இருந்தது.
இன்று மூன்றாம் நாளின் முதல் செஷனில் ஜடேஜாவும் பண்ட்டும் பேட்டிங்கை தொடங்கினர். இருவரும் கொஞ்ச நேரம் நின்று ஆடியிருந்தாலும் இந்திய அணி எதிர்பார்த்த பெரிய பார்ட்னஷிப் வரவில்லை. பண்ட் 28 ரன்களில் போலண்ட்டின் பந்தில் வித்தியாசமாக ஒரு ஷாட்டை ஆடுகிறேன் என ஆடி பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். ஜடேஜா 17 ரன்களில் லயனில் lbw ஆனார்.
முதல் செஷனின் முடிவில் இந்திய அணி 244 - 7 என்ற நிலையில் இருந்தது. நிதிஷ் ரெட்டி 40 ரன்களை எடுத்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களை எடுத்து இருவரும் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்கவே இன்னும் 31 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியாவுக்கு சவாலளிப்பார்கள் என நினைக்கையில் மீண்டும் ஃபாலோ ஆனை தவிர்க்கவே இந்திய அணி போராடிக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.