மனித குலத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலை வாய்ப்பை அபகரிக்கும் என்ற பொதுவான அச்சத்தைவிட பலமடங்கு பெரிது கலைத்துறையை ஏஐ கட்டுக்குள் கொண்டு வருவது.
நாம் தினசரி பார்க்கும் ரீல்ஸில் கூட பல ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு வரத் தொடங்கிவிட்டன. இதுமட்டுமல்லாமல் இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என பல விதமான கலைஞர்களை ஏஐ அச்சத்தில் தள்ளியிருக்கிறது.
இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கலைஞர்களின் படைப்புகளை ஆதாரமாகக் கொண்டுதான் ஏஐ அதன் படைப்புகளை உருவாக்கிறது. ஆனால் இப்படி நகலெடுப்பதற்கு எவ்வித சட்டக்கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த நிலையில் கலைஞர்களின் படைப்புகளை ஏஐ -க்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுவதை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டமியற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை தவறாகப் ப்யன்படுத்துவது குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதனுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரித்தனர் நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா.
மேஷ் ஆடியோ விஷுவல்ஸ் பிரைவேத் லிமிட்டட், விகாஸ் சபூ, கன்சான் நகர் ஆகியோர் அளித்துள்ள மனுவில், "செயற்கை நுண்ணறிவு தளங்கள், செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயிற்றுவிப்பதற்காக கலைஞர்களின் அசல் படைப்புகளை தரவுத் தொகுப்பாக சட்டவிரோதமாகப் பயன்படுத்துகின்றன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள படத்தில் ஒரு கவிஞரின் பாணியில் கவிதை கேட்க, அதைக் கொடுத்துள்ளது ஏஐ. இந்த கவிதையை உருவாக்க ஏஐ தொழில்நுட்பம் அவரது பிற கவிதைகளை தரவுகளாக பயன்படுத்தியிருக்கும். அப்படி பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கவிஞரிடம் அனுமதி பெறப்பட்டதா என்பதுதான் கலைஞர்கள் முன்வைக்கும் கேள்வி!
படைப்பாளிகளின் ஒப்புதலும் இல்லாமல் பதிப்புரிமை வைத்திருப்பவருக்கு நியாயமான இழப்பீடும் வழங்காமல் அவர்களின் படைப்புகளை ஏஐ நிறுவனங்கள் தரவுதொகுப்பாக பயன்படுத்துவதை கேள்விக்குட்படுத்துகிறது இந்த வழக்கு.
அப்படி அனுமதி பெறப்படவில்லை என்றால் அது, பதிப்புரிமைச் சட்டம், 1957ன் கீழ் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பதிப்புரிமைப் பாதுகாப்பை மீறுவதாக வாதத்தை முன்வைத்துள்ளனர்.
ஏஐ -ன் இந்த போக்கு, கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
புகைப்பட கலைஞர்கள் ஸ்டாக் ஃபோட்டோகிராபி வலைத்தளங்களில் பதிவேற்றும் புகைப்படங்களை எவ்வித ஒப்புதலும் இல்லாமல் அந்தந்த வலைத்தளங்களில் இருந்து தரவுகளாக பெற்றுக்கொண்டு அதேப்போன்ற புகைப்படங்களை ஏஐ தளங்கள் உருவாக்குவது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இது ஸ்டாக் ஃபோட்டோகிராபி கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
புகைப்படக்காரர்கள், எழுத்தாளர்கள், இசை தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் மாடலிங் செய்பவர்களின் புகைப்படங்கள் கூட ஏஐ -ஆல் தரவு உள்ளீடாக பயன்படுத்தப்படுகிறது. ஏஐ செயல்பாடு மற்றும் பயன்பாட்டுக்கு சரியான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டிய தருணம் இது. இதை தவறவிடும்போது வருங்காலத்தில் கலைஞர்கள் பெரும் ஆபத்தில் தள்ளப்படுவார்கள். அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்த சமூகத்தையும் பாதிக்கும்.
"நம் துணியை துவைத்தல், சமைத்தல், வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற அன்றாட வேலைகளை பார்த்துக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மலிவாக்கப்பட்டால் நாங்கள் பாடல் பாடுவதையும் கவிதை எழுதுவதையும் ஓவியங்கள் வரைவதையும், புகைப்படம் எடுப்பதையும் பார்த்துக்கொள்வோம்" என்பதே கலைஞர்களின் குரலாக இருக்கிறது.