வங்கக்கடலில் நிலவும் காற்று அழுத்த தாழ்வு மையம், இன்று ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கி நகரலாம் என்று நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியிருந்தார்.
மேலும், இன்று டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யலாம் என்று அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்திருந்தார். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக, தமிழ்நாட்டில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் மழையால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து 900 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 810 தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.