பாபாஜி குகையில் தியானம் செய்ய இமயமலைக்கு செல்லும் நடிகர் ரஜினிகாந்த் என செய்திகள் வருவதை பார்த்திருப்போம். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைத் தொடரில், துரோணகிரி என்ற உயர்ந்த மலைப்பகுதியில் குகுசீனா என்ற மலைகிராமம் உள்ளது.
அப்பகுதிக்கு அருகே அடர்ந்த மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் தான் பாபாஜி குகை அமைந்துள்ளது. மரணமில்லா அவதாரமான மஹாவதார் பாபாஜி இன்றும் கூட அந்த பகுதியில் வாழ்வதாக கூறப்படுகிறது. அந்தக் குகைக்கு சென்று தான் ரஜினிகாந்த தியானம் செய்துவிட்டு திரும்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
ராணிகேத் பகுதியில் இருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள துவாரஹட் நகரை தாண்டி குகுசீனா என்ற அழகிய கிராமத்தை அடையலாம். அங்கிருந்து 3 கி.மீ தூரம் மலையில் நடந்து சென்றால் பாபாஜி குகைக்கு சென்று அமைதியான சூழலில் தியானத்தை மேற்கொள்ள முடியும்.
இந்த குகைக்கு வரும் ரஜினிகாந்த் குகுசீனா கிராமத்தில் உள்ள டீக்கடையில் டீ, நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு தான் செல்வாராம். அந்தக் கடைக்கு சென்று நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு கடைக்குள் பார்த்தால் சுவரிலும் கதவிலும் ரஜினிகாந்தின் போட்டோக்கள் ஒட்டப்பட்டிருந்தது, மேலும் ரஜினிகாந்த் உடன் அந்தக் கடை உரிமையாளரான ஜி.சி.ஜோசி சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களும் ப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தன.
அதை பார்த்ததும் ரஜினியின் வருகை குறித்து நாம் கேட்க உற்சாகமாக நம்மிடம் பேசத் தொடங்கினார் ஜி.சி.ஜோசி.
"எங்கள் தாத்தா காலத்தில் இந்த பகுதிக்கு சாலை வசதியே இல்லை. இந்த கிராமத்தில் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் காய்கறி தோட்டங்கள் அமைத்து அருகே இருக்கும் நகருக்கு கொண்டு சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். என் அப்பா காலத்தில் இங்கு கடை அமைத்து பலசரக்கு விற்க தொடங்கினோம். பாபாஜி குகைக்கு ஆன்மிகத்தில் தியானத்தில் ஆர்வம் கொண்டவர் வந்து சென்று கொண்டிருப்பார்கள்.
என் அப்பா காலத்திற்கு பிறகு நான் கடையை நடத்தத் தொடங்கினேன். இந்நிலையில் தான் கடந்த 2000-ல் இங்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் உடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருக்கு எப்போது பாபாஜி குறித்து தெரியவந்தது. எப்போது குகுசீனா வந்தார். அவருக்கான ஆன்மிக தேடல் குறித்தெல்லாம் எதையும் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.
பாபாஜி குகைக்கு ரஜினிகாந்த தனியாகவும் வந்து செல்கிறார். மனைவி மகள்கள் என குடும்பத்துடனும் வந்திருக்கிறார். ஒரு நாள் குகைக்கு சென்று தியானத்தில் இருந்துவிட்டு அருகே உள்ள துவாராஹட்டில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்து மறுநாள் புறப்பட்டு சென்றுவிடுவார். அவருடைய வருகைக்கு பிறகு தமிழகத்தில் மட்டுமில்லாது பிறபகுதிகளை சேர்ந்த தியானம் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் பாபாஜி குகைக்கு வரத் தொடங்கிவிட்டனர்.
ஹிந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் என்றாலும் கூட எனக்கு ரஜினிகாந்தை நன்றாகவே தெரியும். அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். அவரை முதல் முறையாக பார்க்கும் போது தான் பெரிய ஸ்டார் என்ற பிம்பம் கொஞ்சம் கூட தெரியவில்லை. அவ்வளவு எளிமையாக இருந்தார், ஜாலியாக சிரித்துப் பேசினார். அவருடைய ஸ்டைலான பேச்சு உடல்மொழி எல்லோருக்கும் பிடிக்கும் இல்லையா.
அதுபோல தான் நானும் அவருடைய ரசிகர் ஆகிவிட்டேன். அதனால் தான் அவருடைய படங்களை கடைக்குள் ஒட்டி வைத்துக் கொண்டேன். அவருடைய நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். இப்போது கூட இரண்டு சூப்பர் ஸ்டார்களும் நடித்த வேட்டையன் என்ற படம் வெளியாகி இருக்கிறது எனத் தெரியும். விரைவில் அந்த படத்தையும் பார்ப்பேன்" என்றார்.