மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!
மும்பைக்கு தமிழர்கள் பிழைப்பு தேடி 100 ஆண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறினர். மும்பையில் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைத்தான் பாரம்பர்ய முறைப்படி 10 நாள்கள் கொண்டாடுவது வழக்கம். எனவே மும்பைக்கு வந்த தமிழர்கள் தங்களுக்கென ஒரு விநாயகர் கோயிலை முதன்முதலில் கட்டிக்கொண்டனர். தற்போது தாராவி கிராஸ் ரோட்டில் உயர்நிலைப் பள்ளியோடு சேர்ந்திருக்கும் கணேசர் ஆலயம் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இது தாராவி தமிழர்கள் அனைவருக்கும் ஒரே கோயிலாக விளங்கியது. அனைத்து சாதியினரும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விநாயர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். ஆனால் நாளடைவில் அந்த கோயில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான கோயிலாக மாறிவிட்டது. மற்ற சாதியினர் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனித்தனியாக கோயில்களை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை அனைத்து தமிழர்களும் ஒன்றுமையாக அதேசமயம் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி தாராவியில் கடந்த 15 ஆண்டுகளாக பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பொங்கல் விழா தாராவி 90 அடி சாலையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் இந்து யுவசேனா என்ற இந்து அமைப்பு பொங்கல் விழாவை திறந்த வெளியில் கொண்டாட முடிவு செய்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 50 பெண்களுடன் இப்பொங்கல் விழா 90 அடி சாலையில் தொடங்கப்பட்டது. பெண்கள் பொங்கலிட பானை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆனால் இன்றைக்கு தாராவியில் இந்து யுவசேனாவுடன் சேர்ந்து சக்தி விநாயகர் கோயில், நாம் தமிழர் கட்சி, விழித்தெழு இயக்கம், காங்கிரஸ் என பல தரப்பினரும் 90 அடி சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களை திரட்டி பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இப்பொங்கல் விழா வில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுகின்றனர்.
இப்பொங்கல் விழாவை காண மும்பை மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட வருவது வழக்கம். இப்பொங்கல் விழாவை நீண்ட நாட்களாக முன்னெடுத்து செய்யும் பா.ஜ.க பிரமுகர் விவேகானந்த ராஜாவிடம் இது குறித்து பேசியபோது, ''ஆரம்பத்தில் 50 பேருடன் இப்பொங்கல் விழாவை தொடங்கினோம். ஆனால் இப்போது 3 ஆயிரம் பெண்கள் வரை இதில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கரும்பு, பொங்கல் பானை, பொங்கலிடுவதற்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் நாங்களே கொடுத்துவிடுகிறோம்.
இப்பொங்கல் விழாவை காண மும்பை முழுவதும் இருந்து திரளானவர்கள் வருகின்றனர். இப்போது தாராவி 90 அடி சாலை மட்டுமல்லாது கிராஸ் ரோட்டிலும் பொங்கல் வைக்கின்றனர். இதில் இந்து பெண்கள் மட்டுமல்லாது அனைத்து மத பெண்களும் ஆர்வத்துடன் பொங்கிலிடுவது வழக்கம். தமிழர்கள் இப்பொங்கல் விழாவை காண ஒரே நேரத்தில் கூடுவதால் 90 அடி சாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இப்பொங்கல் விழாவை தொடங்கி வைக்க தமிழகத்தில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வருவது வழக்கம். இப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது'' என்றார்.
தாராவியில் தமிழர்களால் நடத்தப்படும் இரண்டு விநாயகர் கோயில்கள் இருக்கிறது. இது தவிர அம்மன் கோயில்கள், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உள்ளிட்டவை இருக்கின்றன. அனைத்து விழாக்களும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும், பொங்கல் விழா மற்றும் சித்திரை திருவிழாக்கள் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கரகாட்டம் கலைஞர்கள் மற்றும் சில பாரம்பர்ய கலைஞர்கள் தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்த கோயில்கள், பொங்கல் விழா அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இருக்குமா அல்லது தாராவியை விட்டு வெளியில் சென்று இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தாராவி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட இருக்கிறது. அதானி நிறுவனம் வழிபாட்டுத்தலங்கள், சிறுதொழில் மையங்களுக்கு மாற்று இடங்கள் எங்கு கொடுக்கப்படும் என்று உறுதியாக சொல்லவில்லை. அதானி நிறுவனம் தற்போது அனைத்து குடிசைகளுக்கும் நம்பர் மட்டும் கொடுத்திருக்கிறது. அடுத்து என்ன செய்யப்போகிறது என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர். எப்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வோம் என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.