துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி அலுவலகம் திறப்பு விழா, கல்லணை செல்லக்கண்ணு இல்லத்திருமணம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 7ம் தேதி தஞ்சாவூர் வருகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூருக்கு முதல் முறையாக வருவதால் திமுக நிர்வாகிகள் உதயநிதியை வரவேற்க விமர்சையான ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நகரப்பகுதிகளில் சாலையின் இருபுறமும் திமுக கட்சி கொடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை பந்தல் கோவிந்தராஜன் என்பவரிடம் திமுக நிர்வாகிகள் ஒப்படைத்திருந்தனர். பந்தல் கோவிந்தராஜனிடம் பணிபுரியும் ஊழியர்கள் சாலைகளில் திமுக கொடியை கட்டுவதற்காக இரும்பு கம்புகளை ஊன்றி வந்தனர். இந்தநிலையில் தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் முள்ளுக்காரத்தெருவைச் சேர்ந்த நாகராஜன்(38) என்பவர் இரும்பு கம்பு ஊன்றும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்று இருந்தது அதிலிருந்து மின் கம்பிகள் சென்றது. நாகராஜன் இரும்பு கம்பை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் பட மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
இதைபார்த்த சக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனே நாகராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்த கொடி கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. இறந்த நாகராஜனுக்கு சரியாக வாய் பேச முடியாத மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்த நாகராஜன் இறந்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகனின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளதாக அவருடன் பணி செய்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb