செங்குளம் கண்மாய்
தேனி மாவட்டம் நிர்வாகம், பெரியகுளம் அருகே 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குளம் கண்மாய் முழுவதும் சூழ்ந்திருந்த வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 400 கிணறுகள் நிரம்பியுள்ளன.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. செங்குளம் கண்மாய் கழிவுகள் நிரம்பி, வெங்காயத்தாமரையால் சூழ்ந்திருப்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் அப்பகுதியில் காய்ச்சல் பரவுகிறது. எனவே கண்மாயில் உள்ள வெங்காயத் தாமரை, குப்பையை அகற்றிக் கொடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்போதைய பெரியகுளம் சப்-கலெக்டர் முத்துமாதவனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த மே, ஜூன் மாதங்கள் சப்-கலெக்டர் முத்துமாதவன் முயற்சியில், 40 ஏக்கர் கண்மாய் தூர்வாரப்பட்டு, வெங்காயத்தாமரை, குப்பை அகற்றப்பட்டது, கரைகள் வலுபடுத்தப்பட்டுள்ளது.
இதனால் லட்சுமிபுரத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 400 கிணறுகள் நிரம்பியுள்ளன.
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது...
இதுகுறித்து நம்மிடம் பேசிய சப்-கலெக்டர் முத்துமாதவன், "கடந்த 2 மாதங்களாக கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன் பெரியகுளம் சப்-கலெக்டராக பணி செய்துவந்தேன். கடந்த மே மாதம் கலெக்டர் அறிவுறுத்தலின் படி செங்குளம் கண்மாயை ஆய்வு செய்து பணியைத் தொடங்க திட்டமிட்டோம்.
மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் 36 ஏக்கர் பரப்பு கொண்ட கருங்குளம் கண்மாய் உள்ளது. மலைகளில் இருந்து வரும் தண்ணீரால் கண்மாய் நிரம்பும். மறுகால் பாய்ந்து அருகே உள்ள செங்குளம் கண்மாய்க்கு வரும். இந்த கண்மாய் மூலம் அருகே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கண்மாயால் தான் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் கிணறு, போர்வெல்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது.
இத்தகையை முக்கியத்துவம் வாய்ந்த கண்மாய் வெங்காயத்தாமரையால் சூழ்ந்திருந்தது. அதில் குப்பை கழிவுகளும் கலந்ததால் நீர் மாசடைந்திருந்தது. எனவே கண்மாயில் உள்ள வெங்காயத்தாமரையை அகற்ற முடிவெடுத்தோம். இதற்கான ஜே.சி.பி வாகனங்கள், டிராக்டர்களை வரவழைத்து அள்ளத் தொடங்கினோம். அதில் பெரும் சிரமம் இருந்தது.
ஜே.சி.பி வாகனத்தில் அள்ளும் பகுதியில் பெரிய கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அள்ளினோம். கேரளாவில் இருந்து நீர்நிலைகளை தூய்மைப்படுத்த பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து அள்ளினோம். சுமார் 1000 லோடு வரை 15 நாள்களாக அள்ளிக்கொண்டிருந்தபோதே இந்த முறையில் தொடர்ந்து அள்ளினால் முழுமையாக வெங்காயத்தாமரையை அகற்ற முடியாது என்பதை தெரிந்து கொண்டோம்.
இவ்வாறு செய்வதன் மூலம் மீண்டும் மீண்டும் வெங்காயத்தாமரை பரடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அறிந்தோம். அதன்பிறகும் தண்ணீரை வெளியேற்றிவிட்டு தரையில் படியும் வெங்காயத்தாமரையை எடுத்தால் மீண்டும் படராது என்பதை உறுதிபடுத்தினோம். அதன்பிறகு இரண்டு பெரிய 100 ஹெச்.பி மோட்டார்களை வாங்கி கண்மாயில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினோம்.
2000- க்கும் அதிகமான மதுபாட்டில்கள்..
இதை முடித்துவிட்டு 10 ஜே.சி.பி இயந்திரங்கள், 20 டிராக்டர்களை பயன்படுத்தி தரையில் படிந்திருந்த வெங்காயத்தாமரைகளை அள்ளினோம். அதோடு கண்மாயை தூர்வாரி, கரையை வலுப்படுத்தினோம். மேலும் கண்மாய் ஷட்டர் பகுதிகளை சீரமைத்து கால்வாய் வழித்தடத்தையும் தூர்வாரினோம். அப்போது 2 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபாட்டில்களை எடுத்து அப்புறப்படுத்தினோம். மேலும் கண்மாய்க்குள் சாக்கடை கழிவுகள் செல்லாமல் தடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதற்காக மட்டும் 2 மாதங்களாக நூற்றுக்கணக்கானோர் உழைத்துள்ளார்கள்.
கிராம மக்களால் ஒரு கமிட்டி..
கிராம மக்கள் உதவியின்றி இதை செய்திருக்க முடியாது. விவசாயிகள் டிராக்டர்களை கொடுத்தார். மக்கள் வெளியூரில் இருந்து வேலை பார்க்க வந்தவர்களுக்கு தங்கவும், உணவும் கொடுத்து உபசரித்தார்கள். மேலும் தேனியில் இயங்கி வரும் மில் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து சிஎஸ்ஆர் நிதி பெற்று இந்த பணிக்கு பயன்படுத்தினோம்.
இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கரை பகுதியில் வேலி, பேவர் பிளாக் கற்கள் பதித்து, விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கண்மாயை கண்காணிக்க பராமரிக்க லட்சுமிபுரம் மக்களால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பருவமழைக்கு முன்னதாகவே இந்த பணிகளை முடித்ததால் தொடர்மழையால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கண்மாய் நிரம்பி அழகாக காட்சியளிக்கிறது. பறவைகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இதனால் மாவட்ட சுற்றுலா துறையிடம் இந்த கண்மாயை சுற்றுலாதளமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய பரிந்துரைத்திருக்கிறோம்" என்றார்.