சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் நகரம் இயல்புநிலையை இழந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருக்கிறது. சாலைகள், சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்ளன.
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்.
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என்றும், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 4 மணியளவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.
சென்னைக்கு 440 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 530 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.
தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்று காலை 7 மணி அளவில் அளித்த தகவலின்படி, சென்னையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்குநோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கிச் செல்கிறது. இதனால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம்.
மைய காற்றழுத்த தாழ்வுநிலையால் ஏற்படும் அதிகனமழை பாதிப்பு சென்னையைத் தாக்காது. கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலத்தைக் கடக்கும்போது சென்னையில் ஏற்படும் மழை சமாளிக்கக் கூடியதாக இருக்கக்கூடும்.