தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது குலமங்களம் கிராமம். இப்பகுதியில் சுமார் 300 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இந்தநிலையில் சில தினங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் கண்ணனாறு தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கும் மழை நீர் வடிகால் வழியாக வடியவும், ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததால் ஆற்றிலிருந்து தண்ணீர் வயல்களில் புகுந்தது. ஏற்கனவே மழை நீரும் தேங்கியிருந்ததால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இருபது தினங்களுக்கு முன்பு தான் இப்பகுதியில் சம்பா பயிர் நடவு செய்யப்பட்டது. இப்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து நடவு செய்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி விட்டதால் விவசாயிகள் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து குளமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம், 'தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதே போல், குலமங்களம், சமையன்குடிக்காடு பகுதிகளிலும் மழை பெய்ததது.
வடுவூர் ஏரியிலிருந்து தொடங்கும் கண்ணனாற்றில் வல்லம் வாரியின் வடிகால் தண்ணீர் குலமங்களம் அருகே வடிகிறது. இந்த கண்ணனாறு குலமங்கலம், சமையன்குடிக்காடு வழியாக மதுக்கூர், பெரியக்கோட்டை பகுதிக்கு செல்கிறது. இந்நிலையில் குலமங்களம், சமையன்குடிக்காடு பகுதி வழியாக செல்லும் கண்ணனாற்றில் வெங்காயத்தாமைரை, செடி, கொடிகள் படர்ந்துள்ளன. கண்ணன் ஆறு தூர்வாரப்படவில்லை. இதனால் மழைநீர் வடிவதிலும், ஆற்று நீர் செல்லவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
செடிகள் படர்ந்திருந்தால் தண்ணீர் மெதுவாக ஆற்றில் சென்றது. இதனால் வடிகால் வழியாக மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதில் ஆற்றை ஒட்டியுள்ள வயல்களுக்குள் ஆற்று நீர் புகுந்தது. இருபது தினங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டிருந்த ஆடுதுறை 51 ரகம் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் மற்ற வயல்களுக்குள் மழை நீர் புகுந்து விடும் என்பதால் நாங்களே கண்ணனாற்றுக்குள் இறங்கி செடி, கொடிகளை அகற்றினோம். ஆற்றில் மார்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதாலும், தண்ணீரில் வேகம் அதிகமாக இருந்ததாலும் எங்களால் முழுமையாக அகற்றமுடியவில்லை.
கண்ணனாறு கரை சேதம் அடைந்திருப்பது குறித்தும், மழை நீரால் சம்பா நெற்பயிர் பாதிக்கப்பட்டது தொடர்பாகவும் நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். மழைக்காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்துவது கண்ணனாறு பாசன பகுதிதான். எனவே, கண்ணனாற்றின் கரைகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக சீரமைக்கவும், வடிகால்களை சீரமைத்தும், ஆற்றில் உள்ள செடி கொடிகளை உரிய நேரத்தில் அகற்றி எங்களை பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்' என்றனர்.