அஜித் நடிக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். தற்போது நடிகர் அர்ஜூன் தாஸும் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இது பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அர்ஜுன் தாஸ் பதிவிட்டிருக்கிறார்.
அவர், " நடிகராக வேண்டும் என்கிற கனவுடன் சென்னைக்கு வரும்போது எனக்கு எங்கிருந்து எப்படி பயணத்தைத் தொடங்க வேண்டும் என தெரியாது. சுரேஷ் சந்திரா சார் அவருடைய குழுவில் என்னை சேர்த்துக் கொண்டார். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்தித்து வாய்ப்பு தேடுவதற்கு சுரேஷ் சந்திரா சார் அணியிலிருந்தது சிறந்த வழி. அந்த நேரத்தில் அஜித் சாருடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அவருடைய திரைப்படங்களின் படப்பிடிப்புத் தளங்களுக்கு, அவருடன் மீட்டிங்குகளுக்கு உடன் செல்வது,
அவருடைய திரைப்படங்களின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபடுவது எனப் பல விஷயங்கள் செய்திருக்கிறேன். அவருடைய படங்கள் பற்றி ரேடியோ தளங்களில் எனது குரலைக் கொடுத்திருக்கிறேன். அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் நாளன்று திரையரங்குகளுக்குப் பார்வையிட செல்வேன். இவையெல்லாம் நேற்று நிகழ்ந்தது போலவே இருக்கிறது.
`வீரம்' திரைப்படத்தின் டீசரை ஆன்லைனில் பதிவேற்றியது நான்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இத்தனை ஆண்டுகளும் அஜித் சாருடைய அந்த அன்பும் பெருந்தன்மையும் அதே போல்தான் இருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு அஜித் சார் `அர்ஜுன் நாம் சேர்ந்து பணியாற்றுவோம்' எனக் கூறியிருந்தார். அந்தக் கூற்று இறுதியாக இப்போது நடக்கப்போகிறது. அதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
அவருடன் இப்போது நடிக்கப்போகிறேன். இது கனவு நனவாகிய தருணம். அவருடைய அலுவலகத்தில் வேலை பார்த்ததில் தொடங்கி இப்போது அவர் திரைப்படத்தில் நடிக்கிறேன். அஜித் சாருக்கு எனது மனதின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். இந்த ஸ்பெஷலான ஒன்றை எண்ணி என்றும் மகிழ்ச்சியடைவேன். நான் எப்போது அஜித் சாருடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என அஜித் சாரின் ரசிகர்களின் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் ஆதிக் ப்ரதருக்கு நன்றி. அஜித் சார் இது உங்களால்தான்! உங்களுக்காகதான்!" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX