மூன்றாவது வார இறுதியில் வெளியேற்றப்படுபவர் ஓர் ஆணா அல்லது பெண்ணா? ஆண்களின் எண்ணிக்கை ஏற்கெனவே குறைவு.
அதில் ஒருவர் குறைந்தால் அந்த அணிக்குக் கூடுதல் பின்னடைவாக இருக்கும். பலவீனமான போட்டியாளரான சவுந்தர்யா தொடர்ந்து காப்பாற்றப்படுவதில் ஏதோவொரு ‘சோஷியல் மீடியா’ மர்மம் இருக்கிறது. சக போட்டியாளர்களால் பவித்ரா காப்பாற்றப்பட்ட நிலையில் தர்ஷாவின் நிலைதான் அபாயக்கட்டத்தில் இருப்பதைப் போல் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 19
வேக் அப் பாடல், இதர கொட்டாவிக் காட்சிகள் எதுவும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டார் பிக் பாஸ். நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கின் இறுதிச்சுற்று. ஏற்கெனவே இரண்டு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதால், இந்தச் சுற்றுதான் யாருக்கு ஃப்ரீ பாஸ் என்பதைத் தீர்மானிக்கும். எனவே மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
‘செம உருட்டு’ என்பது மாதிரி தண்டவாளம் போல இருக்கும் இரண்டு கயிறுகளின் வழியாக பந்தை உருட்டி பாயின்ட்டிற்குள் போட வேண்டும். எந்தப் பாயின்ட்டில் பந்து சரியாக விழுகிறதோ, அந்த மதிப்பெண் கிடைக்கும்.
அதிக பாயின்ட்டுகள் எடுத்த அணி வெற்றி. ‘யார் முதல்ல போகப் போறீங்க?” என்று பிக் பாஸ் கேட்டதும், ஆண்கள் அணி முந்திக் கொண்டு ‘நாங்க’ என்று கையைத் தூக்கியது முட்டாள்தனமோ என்று தோன்றுகிறது.
ஏனெனில் எந்தவொரு புதிய டாஸ்க்கையும் எதிர் அணி எப்படி ஆடுகிறது, அது என்னவெல்லாம் தவறு செய்கிறது என்பதை பார்த்து வைத்துக் கொண்டால், அடுத்து ஆடும் போது நமக்கு அது பாடமாக இருக்கும். இந்தக் கோணத்தை ஆண்கள் அணி யோசிக்கவில்லையா?
ஆண்கள் அணியில் இருந்து முதலில் ஆடிய அருணால் எந்தப் பாயின்ட்டும் எடுக்க முடியவில்லை. அதைப் பார்த்து கொஞ்சம் கற்றுக் கொண்ட சத்யா, சிரமப்பட்டு ஒரு பாயின்ட் எடுத்தார். அடுத்து வந்த முத்து மேலும் கற்றுக் கொண்டு இரண்டு பாயின்ட்டுகள் எடுத்தார். ஆக மொத்தம் 3 பாயின்ட்டுகள். ‘நாமே இவ்வளவு சிரமப்படுகிறோமே.. பெண்கள் அணி நிச்சயம் ஜெயிக்காது’ என்கிற மிதப்பில் ஆண்கள் அணி குதூகலமாக இருந்ததைப் போல் பட்டது.
இங்கு ஒரு நடைமுறை உண்மையைப் பற்றி யோசிக்க வேண்டும். மிகவும் பொறுமையாக செய்ய வேண்டிய வேலைகளை பெண்கள் செய்து விடுவார்கள். அந்த நிதானமும் கைத்திறனும் பெண்களுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் ஆண்கள் பொதுவாக அவசரக்குடுக்கைகள். ‘ச்சை.. இதெல்லாம் உக்காந்து யார் பண்றது?” என்று சற்று முயன்று பார்த்து விட்டு முடியாமல் உடனே விலகி விடுவார்கள். இந்த ‘உருட்டு’ விளையாட்டில் பொறுமை மிக முக்கியம். இது பெண்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டாக அமைந்தது. அது மட்டுமில்லாமல், ஆண்கள் அணி விளையாடும் போது நிகழ்ந்த தவறுகளையும் அவர்கள் பார்த்து வைத்துக் கொண்டார்கள்.
நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்ற பெண்கள் அணி
முதலில் ஆடிய பவித்ரா, இரண்டு பாயின்ட்டுகளை எடுத்து விட்டார். அடுத்து வந்த ஜாக்குலின் ஒரு பாயின்ட்டை தேற்றி விட்டார். இன்னமும் ஒரு பாயின்ட் எடுத்தால் பெண்கள் அணி வெற்றி. ஆனால் ஜாக்குலின் இன்னொரு பாயின்ட்டை போட்டு வெற்றி பெற்ற கையோடு ‘இன்னமும் ஆடுவேன்’ என்று சொல்லிக் கூடுதல் பாயின்ட்டுகளையும் பெற்று அசத்தினார். ‘இந்த வாரமும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெண்கள் அணிதான் தட்டித் தூக்கும்’ என்று முன்பு யூகித்து எழுதியிருந்தேன். அது நிஜமானது.
இரண்டாவது முறையாக நாமினேஷன் பாஸை வென்ற பெண்கள் அணிக்கு வாழ்த்து சொன்ன பிக் பாஸ், “அப்ரண்டிஸ்களா.. பார்த்துக்கங்க.. பிக் பாஸிற்கு ஒரு ராசி இருக்கு. எந்த அணி தொடர்ந்து வெற்றியடையுதோ.. அதுவே பழக்கமாகிடும். சுதாரிச்சுக்கங்க” என்பது போல் ஆண்கள் அணியை எச்சரித்து உசுப்பேற்றி விட்டார்.
‘இந்த பாஸை வெச்சு யாரைக் காப்பாத்தப் போறீங்க?” என்று பெண்கள் அணியைக் கேட்டார் பிக் பாஸ். வில்லங்கமான கேள்வி. இதுவே ஆண்களாக இருந்தால் அப்போதே முடிவு செய்து உடனே சொல்லியிருப்பார்கள். ஆனால் பெண்கள்..? ரத்தச் சிராய்ப்புகள், பிறாண்டல்கள், குடுமிப்பிடிச்சண்டைகள் இல்லாமல் முடிவு எடுக்க முடியாதே?!
எனவே சூடான விவாதம் ஆரம்பமானது. “இந்த வாரம் நான் போயிடுவேன்னு தோணுது. மதில் மேல் பூனை மாதிரி இருக்கு. போன முறை ஜாக்கிற்கு கொடுத்தீங்க. இந்த முறை என்னை கன்ஸிடர் பண்ணுங்க” என்று உருக்கத்துடன் ஆரம்பித்தார் தர்ஷா.
அடுத்தது சவுந்தர்யா. அவர் எப்படிப் பேசியிருப்பார் என்பதை விளக்கவும் வேண்டுமா? மென்று முழுங்கி வெண்டைக்காயை விளக்கெண்ணைய்யில் வதக்கியது போல் அவருக்கே நம்பிக்கையில்லாமல் பேச ஆரம்பித்தார். “நான் டீம் எஃபர்ட் எதையும் இன்னமும் போடலை” என்று சுயமாக வாக்குமூலம் தந்து சொந்த செலவு சூன்யத்தை சிறப்பாக வைத்துக் கொண்டார். ‘இனிமேதான் என்னை ப்ரூவ் பண்ணணும்’ என்பது போல் வாய்ப்பு கேட்டால் யார் தருவார்கள்? “நூத்தி ஆறு நாளும் நீ ப்ரூவ் பண்ண டிரை பண்ணிட்டே இருப்பியா?” என்று அன்ஷிதாவும் ஒரு முறை கிண்டலடித்து விட்டார்.
சவுந்தர்யாவிற்கு திறமையாக வாதாட வராது என்பது அவரே ஒப்புக் கொண்ட பலவீனம். சரி, எல்லோருமே முத்து போல திறமையாக பேச முடியாது என்பது இயல்பான விஷயம்தான். சிறப்பாக செயலாற்றுவதின் மூலம் இந்த பலவீனத்தை இட்டு நிரப்பலாம் அல்லவா? சவுந்தர்யா அதையும் சரியாக செய்யாமல் போனால் எப்படி காப்பாற்றுவார்கள்? மேலும் ஒட்டுமொத்த பெண்கள் அணியின் விரோதத்தையும் சம்பாதித்து வைத்திருக்கும் சவுந்தர்யா காப்பாற்றப்பட மாட்டார் என்பது அவருக்கே நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதற்கு பிரதான காரணம் அவரே. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒரு பக்கம் பரிதாபமாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் தோன்ற வைக்கும் பிம்பம்தான் சவுந்தர்யா.
பெண்கள் அணியால் காப்பாற்றப்பட்ட பவித்ரா
“நான் அணிக்காக நிறைய உழைப்பைப் போடறேன். ஆனா என்னை ஞாபகமே வெச்சுக்க மாட்றீங்க. ஏன் எப்பவுமே நான் அவுட் ஆஃப் போகஸ்ல போயிடறேன்?” என்பது மாதிரி சொந்த சோகத்தைப் பதிவு செய்தார் பவித்ரா. இந்த டெக்னிக் பிறகு வேலை செய்தது. “போன முறை எனக்குக் கொடுத்தீங்க. இந்த முறை எனக்கு வேணாம்” என்று ஜாக்குலின் மறுத்தது அவரது நேர்மையைக் காட்டுகிறது. ஒருவேளை இப்படி சீன் போட்டால் அதைப் பாராட்டித் தந்து விடுவார்கள் என்பது அவரது கணக்கோ என்னமோ?! ‘கொடுத்தா கொடுங்க. கொடுக்காட்டி போங்க’ என்பது மாதிரி அசால்ட்டாக பேசினார் அன்ஷிதா.
பவித்ராவிற்கு ஆதரவாகப் பேசிய ஜாக்குலின் “அவ சொல்றது கரெக்ட். எப்பவுமே அவளைப் பத்தி நாம யோசிக்கறதில்ல” என்று பந்தை அந்தப் பக்கம் தள்ள “ஒருத்தரைப் பத்தி பேசறதுல்லாம் மேட்டரே இல்ல. ரவியைப் பத்தி இங்க எல்லோரும்தான் பேசினாங்க. ஆனாலும் அவர் உடனே வெளிய போயிடலையா?” என்று ஜாக்குலினின் பாயின்ட்டை சுத்தியல் கொண்டு உடைத்தார் தர்ஷா.
நாமினேஷனில் இல்லாத பெண்கள் வெளியே சென்று கூடிக் கலந்தாலோசித்தார்கள். “மத்தவங்க எப்படியும் சேவ் ஆயிடுவாங்க. தர்ஷா இல்லைன்னா. சவுந்தர்யாவிற்கு தரலாம். அவங்கதான் டேன்ஜர் ஜோன்ல இருக்காங்க ” என்று விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் சாச்சனா. ‘பாவம் சவுந்தர்யா’ என்கிற ஃபிலீங் சாச்சானாவிற்கு இருப்பதைப் போல் தெரிகிறது. இதை மறுத்து ‘டீம் பிளேயர்க்குத்தான் தரணும்’ என்று கேட்டை உடனே சாத்தினார் ஆனந்தி. சவுந்தர்யாவின் பெயரை சுனிதா சொல்லவே மாட்டார் என்பது நமக்குத் தெரிந்த கதைதான்.
ஆக பெரும்பான்மையான விதத்தில் பவித்ராதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அப்போதே தெரிந்து விட்டது. இந்த முடிவுக்கு தர்ஷாவும் சவுந்தர்யாவும் சிறிய எதிர்ப்புக்குரலை எழுப்பிப் பார்த்தாலும் அது எடுபடவில்லை. “நான் என்னோட கம்மல், ஜிமிக்கிலாம் கூட எல்லோருக்கும் தந்திருக்கேன். அது அணிக்காக செஞ்சது இல்லையா?” என்று தர்ஷா சொன்னதெல்லாம் அபத்தமான வாதம். ஆக.. நாமினேஷன் ஃப்ரீ பாஸின் மூலம் பவித்ரா காப்பாற்றப்படுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முத்துவும் ஆனந்தியும் பெஸ்ட் பர்ஃபார்மர்ஸ்
கூட்டு விவாதத்தில் பம்மி விட்டுத் தனியாக வந்து அனத்துவது சவுந்தர்யாவின் வழக்கம். இப்போதும் அப்படித்தான் ஆயிற்று. “என்னா மச்சான் இது.. அவங்க காலை கழுவணுமா.. என் கழுத்தை வேணா அறுத்துக்கட்டுமா.. இவங்க யாரு பெஸ்ட்டு.. வொர்ஸ்ட்டுன்னுலாம் தீர்மானிக்கறதுக்கு.. வெளில இருந்து கூட ஓட்டு வாங்கிடலாம் போல.. இவங்க கிட்ட வாங்கறது ரொம்ப கஷ்டம்..’ என்றெல்லாம் ஜெஃப்ரியிடம் புலம்பிய சவுந்தர்யா பிறகு தனிமையில் அழுது கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. என்றாலும் என்ன செய்ய?
அடுத்த வில்லங்கமான விஷயத்தையும் ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கெடுத்துக் கொண்ட இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’. - ஆண்கள் அணியில் இருந்து சந்தேகமே இல்லாமல் மெஜாரிட்டியில் வெற்றி பெற்றார் முத்து. ஆனால் பெண்கள் அணியில் ஆனந்திக்கும் ஜாக்குலினுக்கும் சமமான புள்ளிகள் கிடைத்தன. மறுவாக்கெடுப்பில் ஆனந்தி வெற்றி. ஆக அடுத்த வார தலைவர் போட்டிக்காக ஆனந்தியும் முத்துவும் மோதுவார்கள்.
நல்லவேளையாக worst பங்கேற்பாளர் பற்றிய வாக்கெடுப்பு நடக்கவில்லை. பிக் பாஸ் அதை டீலில் விட்டு விட்டார். இல்லையென்றால் சவுந்தர்யாவின் அழுகை கூடியிருக்கும். “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. ஒரு சிறப்பு விருந்தினர் வரப் போகிறார். யார் வீட்டுக்கு அவர் முதல்ல வருவார்? நீங்க இம்ப்ரஸ் பண்ற விதத்துலதான் அது இருக்கு” என்று சஸ்பென்ஸ் வைத்தார் பிக் பாஸ். மக்களுக்கு இன்ப அதிர்ச்சி.
பார்டர் மார்க்கில் பாஸ் செய்தாலே பசங்க எப்போதும் குஷியாகி விடுவார்கள். “பரவால்லடா.. நம்ம டீமோட கிராஃப் ஏறிட்டே போகுதுல்ல” என்று அருணிடம் சொல்லி சுயமாக சான்றிதழ் வழங்கிக் கொண்டார் விஷால். (ஆண்கள் எப்போதுமே சுயமாக ஆறுதல் சொல்லிக் கொண்டால்தான் உண்டு!).
அமரன் திரைப்பட பிரமோஷன் - சிவகார்த்திகேயன் என்ட்ரி
பாடல் பில்டப், பட்டாசு மாய்மாலங்கள் போன்ற வரவேற்புகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். வெளியாகவிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்திற்கான புரமோஷன். இரண்டு அணியினரும் உற்சாக வரவேற்பு அளித்ததால், யார் வீட்டிற்கு முதலில் எஸ்கே செல்வார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. கோட்டின் இரண்டு பக்கமும் கால் வைத்து ஜாக்கிரதையாக நடந்து வந்தவரிடம் இரண்டு அணிகளும் பாட்டுப்பாடி இம்ப்ரஸ் செய்ய முயன்றன. “ஆண்கள் அணி பாடும் போது பெண்களும் கூட சேர்ந்து பாடினாங்க… அந்த ஒரு விஷயத்திற்காக அவங்க வீட்டுக்கு முதல்ல போறேன்” என்று இந்த சங்கடமான சூழலை எஸ்கே சமாளித்தது சமயோசிதமான விஷயம்.
“பிக் பாஸ் வீட்டு சாப்பாடு எப்படியிருக்கும்?” என்று எஸ்கே கேட்க “சூப்பரா சமைப்போம்.. அன்ஷிதா பண்ண சம்மந்தி இங்க பயங்கர ஹிட்” என்று உற்சாகத்துடன் சொன்னார் ஆனந்தி. அதனால் நடந்த கலவரத்தையும் சொல்லியிருக்கலாம். ஆண்கள் அணி மனம் கஷ்டப்படக்கூடாதே என்று அந்தப் பக்கமும் சட்டென்று நகர்ந்த எஸ்கே, “ஆண்கள் ரூம் இவ்வளவு நீட்டா இருக்கக் கூடாதே… அதானே பார்த்தேன்..
நான் கூட இப்படியொரு ரூம்ல தங்கியிருக்கும் போது யாராவது கெஸ்ட் வந்தா, எல்லாத்தையும் எடுத்து மூலைல ஒளிச்சு வெச்சிடுவோம்” என்று ‘சேம் பின்ச்’ கதையைப் பகிர்ந்து கொண்டது சுவாரசியம். விருந்தினருக்காக ஸ்பெஷல் பாயசத்தை பரபரப்பாக செய்து கொண்டிருந்தார் விஷால்.
வந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் எஸ்கே. அமரன் திரைப்படம் பற்றிய உரையாடல். “இந்தப் படம் ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பற்றியது. போர் என்பதைத் தாண்டி இது எமோஷனல் டிராமாவா இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த அன்பைப் பற்றியுமான படமாகவும் இருக்கும்’ என்று படத்தின் கருப்பொருளைப் பற்றி சுருக்கமாக சொன்னார் எஸ்கே.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமும் தியாகமும்
அறியாதவர்களுக்காக: மேஜர் முகுந்த் வரதராஜன், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர். 2014-ம் ஆண்டில், ஜம்மூ காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் வெற்றி பெற்று, மூன்று பயங்கரவாதிகளைக் கொன்று, அப்போது ஏற்பட்ட காயங்களினால் பிறகு வீரமரணம் அடைந்தவர். ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘அசோக சக்ரா’, இவரது மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமும் தியாகமும் காதலும் ‘அமரன்’ திரைப்படத்தின் வழியாக பதிவாவது சிறந்த விஷயம்.
“இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு பிக் பாஸ் வீட்லதான் துவங்குச்சு. பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிதான், அமரன் படத்தையும் இயக்குகிறார். அப்படியாக பிக் பாஸிற்கும் அமரன் படத்திற்கும் நிறைய கனெக்ஷன் இருக்கு. தயாரிப்பாளரான கமல் சார் படம் பார்த்துட்டாரு. ‘பெருமை தேடித் தரும் படமாக இருக்கும்’ன்னு அவர் சொன்னது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். ‘No compromise’ன்ற நோக்கத்துலதான் நிறைய விஷயங்களை செய்தோம். பார்த்துட்டு சொல்லுங்க” என்று சொன்ன சிவகார்த்திகேயனின் முன்னுரைக்குப் பிறகு திரையிடப்பட்ட ‘அமரன்’ டிரைய்லர் அசத்தலாக இருந்தது.
‘everything is fair in love and war-ன்னு சொல்லுவாங்க. நீங்க அதையே படமா எடுத்திருக்கீங்க ’ என்று சொல்லி டைமிங்கில் அசத்தினார் ஜாக்குலின். காட்சிகளின் மெனக்கெடல் பற்றி ரஞ்சித் வியந்த போது “முகுந்த் வரதராஜன் வேலை செஞ்ச இடத்திற்கெல்லாம் போய் படம் பிடிச்சோம். அங்க மூணு மாசத்துக்கு மேல தங்க வேண்டியதா இருந்தது. அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது. ‘இவரு பிக் பாஸ் டைரக்ட் பண்ணவருல்ல.. அதான் நூத்தியாரு நாட்களுக்கு போட்டு அடைச்சிட்டாரு’ என்று விளையாட்டாக கனெக்ட் செய்து அசத்தினார் எஸ்கே.
‘உங்க டிரான்ஸ்பர்மேஷன் பத்தி சொல்லுங்க” என்று முத்து கேட்ட போது ‘மிமிக்ரி செய்துக்கிட்டு இருந்த பையன் கையில இப்போ மிஷின் கன் இருக்கு. எனக்கே இந்த வளர்ச்சி ஆச்சரியமா இருக்கு. முகுந்த் வரதராஜன் பத்தி விவரங்கள் சேகரிக்கும் போது பல ஆச்சரியங்கள் இருந்தது. அவர் ஒரு நல்ல லீடரா இருந்திருக்கார். சண்டைல ஜெயிக்கறது கூட அப்புறம். முதல்ல யாருக்கும் அடிபடக்கூடாதுன்றதுல கவனமா இருப்பாராம்” என்று வியந்தார் எஸ்கே.
அன்ஷிதாவிடம் மலையாளத்தில் ‘சம்சரிக்க’ முயன்ற எஸ்கேவிற்கு நினைவுப்பரிசுகளும் கேக்கும் வழங்கப்பட்டது. (இந்தச் சமயத்தில் அனைவரின் மார்பு பகுதியிலும் இருந்த ஏதோ ஒரு விஷயம், தொழில்நுட்பத்தின் மூலம் மங்கலாக்கப்பட்டிருந்தது. அது தேசியக் கொடி போல தெரிந்தது. ஏன் அதை மறைக்க வேண்டும் என்று புரியவில்லை!). அமரன் திரைப்படத்திற்கு வாழ்த்து சொன்ன பிக் பாஸ், ‘let’s salute for major’ என்றது உணர்ச்சிகரமான தருணம். அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார் எஸ்கே.
சவுந்தர்யாவிற்காக பரிதாபப்படும் ஜெஃப்ரி - சாச்சனாவின் புறணிகள்
பெண்கள் அணியால் சவுந்தர்யா ஒதுக்கப்படுவது குறித்த பரிதாபம் ஜெஃப்ரிக்கு இருக்கிறது. எனவே அது பற்றி சத்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். ‘அந்தப் பொண்ணை அவங்க கார்னர் பண்ற மாதிரி தெரியுது. பாவம்’ என்று விஷாலும் இதை வழிமொழிந்தார்.
ஆச்சா.. அந்தப் பக்கம் சாச்சனாவும் ஜாக்குலினும் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘சவுந்தர்யா கூட ரொம்ப க்ளோசா போகாத. அவங்களுக்கு ஆல்லெடி பாய் பிரெண்டு இருக்குன்னு ஜெஃப்ரி கிட்ட சொல்றேன். சரி விடு.. அப்படியாவது நான் ஃபேமஸ் ஆவறேன்னு அவன் சொல்றான்” என்று சாச்சனா கொளுத்திப் போட ‘பயபுள்ள அப்படியா சொன்னான்?” என்று ஆச்சரியப்பட்டார் ஜாக்.
சாச்சனாவின் பட்டாசு விளையாட்டு அத்துடன் முடியவில்லை. “அன்ஷிதாவும் சுனிதாவும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டாங்க. அன்ஷிதாவிற்கு ஒண்ணுன்னா சுனிதா ஓவர் ரியாக்ஷன் தராங்க” என்று சாச்சனா சொன்னது உண்மைதான். வெளிப்படையாக பேசி விடும் சுனிதாவின் குணாதிசயம் பாராட்டத்தக்கது என்றாலும் பல சமயங்களில் எரிச்சலூட்டுவது போல நடந்து கொள்கிறார்.
சாச்சனாவின் புறணி புராணம் இன்னமும் முடியவில்லை. “நான் எப்பவுமே பெண்கள் அணியின் விசுவாசிதான். ஆனா எதிர் டீம்ல இருக்கறப்ப சூதானமா இருக்க வேண்டியிருக்கு. மாட்டிக்காமத்தான் சில விஷயங்கள் செய்யணும். ஆனா சுனிதாவிற்கு இது புரியலை. ‘ஏன் இதைச் சரியா பண்ணலை’ன்னு கேட்டு இம்சை பண்றாங்க” என்று சலித்துக் கொண்டார் சாச்சனா. திரைப்படத் தலைப்புகளை கண்டுபிடிக்கும் போட்டியில் ஒரு கேள்விக்கு ‘பரதேசி’ என்று விடை சரியாகத் தெரிந்தும், சாச்சனா அதைச் சொல்லாமல் ஆண்கள் அணி பாயின்ட் எடுக்காமல் பார்த்துக் கொண்டாராம்!. (வெஷம்.. வெஷம்).
இந்தப் புறணிகளுக்குப் பிறகு ஒரு ஃபேஷன் ஷோ நடந்தது. ஆடை பிராண்டிற்கான பிரமோஷன். ஸ்டைலான ஒப்பனையில் மக்கள் ரேம்ப் வாக் செய்தார்கள். இதில் பவித்ராவும் விஷாலும் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த வாரத்தில் வெளியேற்றப்படுபவராக யார் இருப்பார்? யார் இருக்க வேண்டும்?.. கமென்ட்டில் வந்து சொல்லுங்கள் மக்களே..