இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்!
அரண்மனை 5 டேக் ஆஃப்?
சுந்தர். சி இயக்கத்தில் சமீபத்தில் `அரண்மனை 4' திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இந்தத் திரைப்படம் வெற்றியடைந்தால் அடுத்தடுத்த பாகங்களுக்குத் திட்டமிடலாம் என `அரண்மனை 4' திரைப்படத்தின் புரோமோஷன் சமயங்களில் இயக்குநர் சுந்தர். சி கூறியிருந்தார். தற்போது `அரண்மனை 5' திரைப்படம் டேக் ஆஃப் ஆகவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் குஷ்பு. `அரண்மனை 5 திரைப்படம் தயாராவதாக வரும் போஸ்டர்களெல்லாம் உண்மை கிடையாது. 5-ம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டால் சுந்தர்.சியிடமிருந்தும், அவ்னி தயாரிப்பு நிறுவனத்திலிருந்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்!' எனப் பதிவிட்டிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்க தற்போது `கேங்கர்ஸ்' திரைப்படத்தின் பணிகளும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ரஜினியின் பாராட்டு!
ஒரு திரைப்படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றாலோ அல்லது அத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலோ அத்திரைப்படத்தைப் பார்த்து படக்குழுவை ரஜினிகாந்த் பாராட்டிவிடுவார். அப்படி பல இயக்குநர்களையும், நடிகர்களையும் அழைத்துப் பாராட்டி ஊக்கம் கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைக்க வேண்டும் எனப் பல இயக்குநர்களும் திரைப்பட ரிலீஸுக்குப் பிறகு காத்திருப்பார்களாம். தற்போது `நந்தன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சசிக்குமாரையும் இயக்குநர் இரா. சரவணனையும் பாராட்டியிருக்கிறார் ரஜினி. இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சசிக்குமார், " நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!' எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஹரீஷ் கல்யாணும் சிம்புவும்!
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான `லப்பர் பந்து' திரைப்படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் உட்பட பல இயக்குநர்களும், நடிகர்களும் படக்குழுவை அழைத்துப் பாராட்டியிருந்தார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் சிம்புவும் `லப்பர் பந்து' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். தீபாவளி ஸ்பெஷலாக இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
புஷ்பா - 2 ரிலீஸ்!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் உருவான `புஷ்பா 1' திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதையெல்லாம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவித்திருந்தார்கள். அதன்படி இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என முன்பு படக்குழு அறிவித்தது. அதன் பிறகு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் டிசம்பர் 6-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். தற்போது அதிலிருந்து ஒரு நாளைக்கு முன்பாகவே ... அதாவது டிசம்பர் 5-ம் தேதியே`புஷ்பா 2' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
துல்கர் சல்மான் லைன் அப்!
துல்கர் சல்மான் நடித்திருக்கும் `லக்கி பாஸ்கர்' திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவிருக்கிறது. வெங்கி அத்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் `RDX' திரைப்படத்தின் இயக்குநரான நகாஸ் ஹிதயத் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறாராம். இதுமட்டுமல்ல , நடிகர் செளபின் சாஹிர் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் துல்கர் நடிக்கவிருக்கிறார். செளபின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்து 2021-ம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அத்திரைப்படத்திற்கு `ஒதிரம் கடகம்' என பெயரிட்டிருந்தார்கள். அதன் பிறகு அத்திரைப்படம் பற்றிய எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இத்திரைப்படம் மீண்டும் டேக் ஆஃப் ஆகவிருப்பதாக `லக்கி பாஸ்கர்' படத்தின் புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார் துல்கர். செளபின் சாஹிர் தமிழில் தற்போது `கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX