சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்டவை உள்ளன. இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் வனப்பகுதியில் போலீசாருக்கு மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது. இதில், 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். நாராயண்பூர்- தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் திடீரென அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து அபுஜ்மாத் வனப்பகுதியில் அதிரடி படையினரும், போலீசாரும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது போலீசார் மீது மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் நடந்த இந்த தாக்குதலில் 36 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. வனப்பகுதிக்குள் படையினர் முன்னேறியதும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கை முடிந்த பிறகு, என்கவுன்ட்டர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கரில் இந்த ஆண்டு மட்டும் 185 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அரசு தரவுகளின்படி, டிசம்பர் 2023 முதல் இதுவரை 723 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...