உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் மத்தியில் எதிரொலிக்கும் பிரபல தென் கொரிய இசைக்குழுவான 'BTS' -ன் உறுப்பினர் பெயர் 'பார்க் ஜிமின்'.
அக்டோபர் 13, 1995 இல், தென் கொரியாவின் பூசானில் பிறந்த ஜிமின், சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளி காலங்களில் வகுப்பிலேயே முதல் மாணவராகவும் இருந்திருக்கிறார். இருப்பினும், அவரது குடும்பம் கலை, இசையை நேசிக்கும் குடும்பமாக இருந்தது. இசை மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பது, கலைநிகழ்ச்சிகளுக்குக் கூட்டிச் செல்வது என ஜிமினின் மனதில் நடனம் மற்றும் இசையின் மீதான காதலை விதைத்தது அவரது குடும்பம்தான். பூசானின் ஹோடாங் தொடக்கப் பள்ளியிலும், பூசான் உயர்நிலைக் கலைப் பள்ளியிலும் ஜிமின் படித்தது அவரது கலைத் திறைமையை வளர்க்க அடித்தளமாக அமைந்தது. பள்ளி காலத்திலேயே பாரம்பர்ய கொரிய நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றார். இது அவருக்கு ஒரு தனித்துவமான நளினத்தையும் திறமையையும் கொடுத்து, பின்னாளில் ஜிமின் தனித்துவத்துடன் ஜொலிக்கக் காரணமாக அமைந்தது.
2011 ஆம் ஆண்டில், ஜிமின் 'பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனத்தின் ஆடிஷனில் பங்குபெற நினைத்தபோது, அவரின் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தான் ஜிமினை ஊக்குவித்து பங்கேற்கச் செய்தார். அவரது ஆடிஷன் பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை, அதில் கடுமையானப் போட்டியை எதிர்கொண்டார். ஆனால், இறுதியில் தேர்வாகி அந்நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சியாளர்களுடன் சேர்ந்து கடுமையான பயிற்சியைத் தொடங்கி தனது திறமையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். ஜிமினின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு அவரை ஒரு தனித்துவமிக்கக் கலைஞராக உருவாக்கியது.
இவர் தனக்கு மேடைப் பெயராக 'பேபி ஜே' மற்றும் 'யங் கிட்' என்பதை ஆரம்பத்தில் வைத்திருந்தார். பின்னர் தன் பெயரான 'ஜிமின்' என்பதையே தனக்குப் பிடித்தமானப் பெயராக வைத்துக் கொண்டார். 'ஜிமின்' என்ற பெயரின் அர்த்தம் 'உன் பேரும் புகழும் வானத்தை விட உயரும்' என்பதாகும். இந்தப் பெயரை எதற்காக அவருக்கு வைத்தனர் எனத் தெரியவில்லை. ஆனால், ஜிமின் தனது பெயருக்கேற்றபடி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறார்.
ஜூன் 2013 இல், BTS '2 கூல் 4 ஸ்கூல்' என்ற ஒற்றை ஆல்பத்துடன் அறிமுகமானது. ஜிமின் 'நோ மோர் ட்ரீம்' மற்றும் 'பாய் இன் லவ்' போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானார். ஜிமின், முன்னணி பாடகர் மற்றும் முக்கிய நடனக் கலைஞராக, குறுதிய காலத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 'BTS' சர்வதேச அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கியதும், ஜிமின் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமடையத் தொடங்கினார். 'கே-பாப்' துறையில் ஒரு மிகப் பிரபலமான ஒருவராக மாறினார்.
ஜிமினின் கலை வாழ்க்கையில் முக்கியமானத் தருணங்களில் ஒன்று, 2016 இல் 'விங்ஸ்' ஆல்பத்திலிருந்து 'லை' பாடல் வெளியானதுதான். அவரது குரல் வளத்தை மட்டுமல்ல, நடனம் மற்றும் நடிப்பு மூலம் கதை சொல்லும் திறனையும் வெளிப்படுத்தியது அப்பாடல். நடனத்தின் மீதான ஜிமினின் காதல் அவரின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது. இது உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து 'லை' பாடலின் வெற்றி அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.
ஜிமின் இன்று கே-பாப் உலகில் உள்ள பிரபல பாடகர் மற்றும் நடனக் கலைஞர். இந்த இடத்தை சாதாரணமாகப் பிடித்துவிடவில்லை ஜிமின். அதற்காக அவர் பல ஆண்டுகளாக தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார். ஜிமின் ஒரு பெர்ஃப்பெக்சனலிஸ்ட். எதையும் மிகச் சரியாக செய்ய நினைப்பவர். தான் நடனம் ஆடும் போது அதை மிகச் சரியாக ஆடும் வரை பயிற்சி எடுத்துக் கொள்வார்.
அதற்காக எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, சரியாக ஆடிய பிறகு தான் உறங்கச் செல்வார். மேடையில் பெர்ஃபார்ம் செய்யும் போது சின்ன தவறு செய்தால் கூட அன்றைய நாள் முழுவதும் வருத்தமாக இருப்பாராம். அவரது நடனம் ஒரு கதையைச் சொல்கிறது, வலிமையையும் கருணையையும் சரியான இணக்கத்துடன் சொல்கிறது. அவரது குரல் அழுத்தமாக எதிரொலிக்கும் ஒரு இனிமையான மெல்லிசை.