மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே மும்பை மாகிம் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல் முறையாக தேர்தல் களம் காணும் அமித் தாக்கரேயிக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலகும்படி தற்போது மாகிம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதா சர்வான்கரிடம் சிவசேனா(ஷிண்டே) கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் போட்டியில் இருந்து விலக மறுத்துவிட்டார். அதோடு, `தனக்கு அநீதி இழைக்கவேண்டாம்’ என்று ராஜ் தாக்கரேயிடம் சதா சர்வான்கர் உணர்ச்சிப்பூர்வமாக கேட்டுக்கொண்டார்.
வரும் 4-ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசிநாளாகும். அன்றைக்கு வேட்பு மனுவை சர்வான்கர் வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ் தாக்கரேயும் தனது மகனுக்கு ஆதரவு திரட்டும் வேலையில் ராஜ்தாக்கரே ஈடுபட்டுள்ளார். அவர் பா.ஜ.கவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து தனது மகனுக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், ''முதல்வர் கூட மாகிம் தொகுதியில் தனது கட்சி போட்டியிட வேண்டாம் என்றுதான் நினைக்கிறார். அதில் சில சிக்கல்கள் இருக்கிறது. சிவசேனா(உத்தவ்)விற்கு தொண்டர்கள் வாக்களிப்பதை தவிர்க்க ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம். பா.ஜ.கவை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே நவநிர்மாண் கேட்கும் ஒரு தொகுதியில் ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்திருந்தோம். எனவே மாகிம் தொகுதியில் அக்கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறோம். அனைத்து கட்சியிலும் அதிருப்தி வேட்பாளர்கள் இருக்கின்றனர். எங்களது கட்சியில் இருக்கும் அனைத்து அதிருப்தி வேட்பாளர்களை வாபஸ் பெறவைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.''என்றார்.
ராஜ்தாக்கரே தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், ''சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நவநிர்மாண் சேனாவின் ஆதரவோடு பா.ஜ.கவை சேர்ந்தவர் முதல்வராவார். 2029ம் ஆண்டு தேர்தலில் நவநிர்மாண் சேனாவை சேர்ந்தவர் முதல்வராவார். நான் சிவசேனாவை விட்டு விலகிவிட்டேன். அந்த கட்சியை நான் உடைக்கவில்லை. நான் கட்சியில் இருந்து வெளியேறும்போது என்னுடன் எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று இருக்கமுடியும். நான் அப்படி செய்யவில்லை. சிவசேனாவை உடைக்கவேண்டும் என்று மனதில் கூட நினைக்கவில்லை. கட்சிகளை உடைத்து அதன் மூலம் எனக்கு அதிகாரம் தேவையில்லை''என்றார்.
இதே போன்று சிவ்ரி தொகுதியிலும் நவநிர்மாண் சேனா வேட்பாளர் பாலா சந்த்காவ்கருக்கு ஆதரவாக ஆளும் மஹாயுதி கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவிற்கு தற்போது ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே இருக்கிறது. கல்யான் ரூரல் தொகுதியில் ராஜு பாட்டீல் எம்.எல்.ஏவாக இருக்கிறார். அந்த தொகுதியில் சிவசேனா(ஷிண்டே) ராஜேஷ் மோரே என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. மும்பையில் பா.ஜ.கவை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த பலர் அதிருப்தி வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். ராஜ் புரோஹித், அதுல் ஷா போன்ற சிலரிடம் பேசி அவர்கள் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்வதை பா.ஜ.க தடுத்துவிட்டது. பா.ஜ.க மூத்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு எதிராக மற்றொரு பா.ஜ.க தலைவர் அமோல் பால்வட்கர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரின் மைத்துனர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இதையடுத்து சந்திரகாந்த் பாட்டீலுக்கு தனது ஆதரவு என்று அமோல் தெரிவித்துவிட்டார்.
சுயேச்சை வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக தங்களது தொகுதியில் வேலை செய்து மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர் என்று அரசியல் ஆய்வாளர் அஜய் வைத்தியா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இம்முறை 6 பிரதான கட்சிகளும், வஞ்சித் பகுஜன் அகாடி போன்ற சிறிய கட்சிகளும் போட்டியிடுவதால் வெற்றிக்கான ஓட்டு சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb