கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளிகளும் பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி அனில் அன்சாரி என்பவர் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி பெயர் நசீரான்.
இவரும் கணவருடன் இணைந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு அப்சரா என்ற நான்கு வயது மகள் உள்ளார்.
இவர்கள் கடந்த ஓராண்டாக ஊசி மலையில் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை மதியம் சிறுமி தன் அம்மாவுடன் இருந்துள்ளார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை வாயில் கவ்வி காட்டு பகுதிக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. அம்மாவின் கூச்சல் சத்தம் கேட்டு வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்ததில், சிறுமியின் உடல் சடலமாக கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், நேற்று மதியம் நசீரான் தன் மகள் அப்சராவை அழைத்துக் கொண்டு எஸ்டேட் பகுதியில் காய்கறி பறிக்க சென்றுள்ளார். அப்சராவை ஒரு இடத்தில் அமர சொல்லிவிட்டு நசீரான் சென்றுள்ளார். அப்போதுதான் சிறுத்தை திடீரென்று வந்து தாக்கியுள்ளது.
அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டது. சிறுத்தையை கண்காணிக்க கேமராக்கள் அமைத்தும், தனிப்படை உருவாக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளதாக வனத்துறை கூறியுள்ளது.