தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற கோவி.செழியன் கடந்த 29-ம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு முதன்முறையாக திருச்சி வழியாக தஞ்சாவூ வந்தார். இந்த தகவல் முன்பே தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சொல்லப்பட்டது. அமைச்சர் வருகிறார் என்றதும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா விடுமுறை நாளாக இருந்தும் முக்கிய அதிகாரிகளை கலெக்டர் அலுவலகம் வர உத்தரவிட்டார்.
இதனால் பலரும் அவரச அவசரமாக அலுவலகம் வந்து சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அசோக்குமார், அண்ணாதுரை, ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கோவி.செழியனை வரவேற்க கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தனர். கோவி.செழியனுக்கு இணையாக அமைச்சராகப் போகிறார் என துரை.சந்திரசேகரன் பெயர் அடிப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் அவர் தனி ஆளாக கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அவரை வரவேற்கவோ அல்லது அவர் பின்னாலோ கட்சி நிர்வாகிகள் யாரும் வராதது குறித்து அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். எம்.எல்.ஏக்கள், கலெக்டர் உட்பட ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் வந்து சேர்ந்தார் கோவி.செழியன். பின்னர் துரை.சந்திரசேகரன் அவருக்கு வேட்டி கொடுத்து மரியாதை செய்தார். அப்போது ஆரத்தழுவி கட்டிக்கொண்டு இருவரும் ரொம்ப நேரம் சிரித்தப்படி பேசிக்கொண்டே இருந்தனர். அதன் பின்னர் ஒவ்வொருவராக வேட்டி கொடுத்து வரவேற்று மரியாதை செலுத்தினர்.
அப்போது அண்ணாதுரை எம்.எல்.ஏ வேட்டி கொடுத்து விட்டு கோவி.செழியன் தோளில் கைப்போட்டார். உடனே அண்ணாதுரை கையை எடுத்து விட்டார் செழியன். அமைச்சர் ஆனவர் மேல் போடலாமா என சிலர் பேசிக்கொண்டனர். ``நாளை தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்திக்கிறேன் அப்புறம் எதற்கு இந்த ஃபார்மாலிட்டீஸ்" என கோவி.செழியன் கேட்டுள்ளார். கலெக்டர் பிரியங்காதான் பலருக்கும் தகவல் கொடுத்து வரவேற்பு கொடுக்க வர வைத்ததாக அலுவலகத்தில் இருந்த சிலர் பேசிக்கொண்டனர். அமைச்சர் ஆகி முதல்முறை வரும்போதே குறித்த நேரத்தில் வராமல் கோவி.செழியன் தாமதமாக வந்ததை பலரும் முணுமுணுத்ததாகத் தெரிவித்தனர்.