`தன்னைப் பற்றி அவதூறு தகவலை பரப்பியதாக' வீடியோ பதிவுசெய்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பிரகாஷுக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. சில நாள்கள் வெளியூர் சவாரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மதுரை அச்சம்பத்திலுள்ள மெக்கானிக் ஷெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் தெரிந்து அங்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸார் அவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தான் வசித்த பகுதியில் தன்னைப் பற்றி தவறான தகவல்களை ராஜா என்பவர் பரப்பி வருவதாகவும், தன் தற்கொலைக்கு அவர்தான் காரணம் எனவும் பிரகாஷ் வீடியோவில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் பிரகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீஸாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உடலை வாங்கிச் சென்றனர்.