பிரதமர் நரேந்திர மோடி நேற்று மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திட்டங்களை திறந்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார். முதலில் வாசிம் மாவட்டத்தில் கால்நடைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார். மொத்தம் 23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மும்பை வந்தார். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த நிகழ்ச்சியில் ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா வரை பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியை திறந்து வைத்தார். அதோடு மெட்ரோ ரயிலில் சாந்தாகுரூஸ் வரை பயணம் செய்தார். இப்பயணத்தின் போது பிரதமருடன் லடிகி பெஹ்ன் திட்டத்தில் பயனடைந்த பெண்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்து கொண்டு கலந்துரையாடினர். மும்பையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்ய ஏதுவாக புதிய மொபைல் ஆப் ஒன்றையும் திறந்து வைத்த பிரதமர், செம்பூர் செட்டாநகரில் இருந்து தானே ஆனந்த் நகர் வரை ப்ரீவே சாலை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
ரூ.3,310 கோடி ரூபாயில் இச்சாலை முழுக்க முழுக்க பூமிக்கு மேலே கட்டப்படும். ஏற்கனவே கிழக்கு ப்ரீவே சாலை தென்மும்பையில் இருந்து செம்பூர் வரை இருக்கிறது. அந்த சாலையுடன் இணைக்கும் விதமாக புதிய சாலை கட்டப்படுகிறது. இதன் மூலம் தானேயில் இருந்து தென்மும்பைக்கு குறுகிய நேரத்தில் செல்ல முடியும். மும்பையில் திறக்கப்பட்டுள்ள பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் மெட்ரோ ரயில் திட்டம் 12.44 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மன், இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் நிபுணர்களின் துணையோடு ஜப்பான் நிதியில் கட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ஜப்பான் 60 சதவீத நிதியை கடனாக வழங்கி இருக்கிறது. இத்திட்டம் மொத்தம் 33.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தென்மும்பை வரை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டுதான் முழுமையாக கட்டி முடிக்கப்படும். 7 ஆண்டுகளுக்கு முன்பு இப்பணிகள் தொடங்கப்பட்டு இப்போதுதான் அதன் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமையில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும். இதற்கு கட்டணம் ரூ.10-லிருந்து 50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சொந்த ஊரான தானேவிற்கு சென்றார்.
அங்கு ரூ.12 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட இருக்கும் ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இது தவிர 700 கோடியில் கட்டப்பட இருக்கும் தானே மாநகராட்சி தலைமை கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் 56 ஆயிரம் கோடியிலான திட்டங்களை தொடங்கி வைத்தது மற்றும் பூமி பூஜை போட்டது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடி தேசவளர்ச்சிக்கு எதிரானது. அடல் சேது திட்டத்தை எதிர்த்தார்கள். அவர்களது ஆட்சியில் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராக சதி செய்து தடுக்கப்பார்த்தார்கள். மும்பையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்றாவது மெட்ரோ திட்டத்தை அவர்கள் தடுத்ததால் திட்டச்செலவு 14 ஆயிரம் கோடி கூடுதலானது. வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் குடிநீர் தொடர்பான திட்டங்களைக்கூட தடுத்தனர். அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களை காங்கிரஸ் போதையில் தள்ளியது. டெல்லியில் பலகோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி. போதைப்பொருள் பணத்தை காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்துகிறது.
இது மிகவும் ஆபத்தானது. இதில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். காங்கிரஸ் மிகவும் ஊழல் மிகுந்த கட்சி. எங்கிருந்தாலும் அவர்கள் மாறப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலுக்கு பிறகு ஊழல் செய்ய புதிய வழிகளை கண்டுபிடித்து வரி விதிப்பார்கள். விவசாயிகளுக்காக மத்திய அரசு பணம் அனுப்பும். அதனை அவர்கள் எடுத்துக்கொண்டு விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்தனர். நாங்கள் இந்தியாவை அனைவருக்காவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பிரிக்க பார்க்கிறார்கள். நமது ஒற்றுமை அவர்களை தோற்கடிக்கும்'' என்று பேசினார்.