மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவரது சகோதரர் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்துக்கொண்டு தனி அணியாக சென்று பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்துள்ளார். இப்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அஜித் பவார் தலைமையிலான அணியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்து இருக்கிறது. அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகளை மட்டும் கொடுக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று அஜித் பவார் நிர்ப்பந்தம் செய்து வருகிறார்.
அஜித் பவார் ஆதரவாளர்கள் வசம் இருக்கும் தொகுதிகளைக்கூட பா.ஜ.க தங்களது தலைவர்களுக்காக பிடுங்கிக்கொண்டதாக பேச்சுவார்த்தையில் தெரிய வந்துள்ளது. இதனால் அஜித் பவாரிடமிருந்து தலைவர்கள் விலக ஆரம்பித்துள்ளனர். அஜித் பவார் அணியில் இருந்தால் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் மீண்டும் சரத் பவாரிடமே செல்லத்தொடங்கி இருக்கின்றனர். சட்டமேலவையில் தலைவராக இருந்த ராம் ராஜே நிம்பல்கர் இது வரை அஜித் பவார் கட்சியில் தான் இருந்தார். ஆனால் இப்போது அவர் சரத் பவார் அணிக்கு மாற முடிவு செய்துள்ளார். சதாராவில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை ராம் ராஜே நிம்பல்கர் கூட்டி இருக்கிறார். இக்கூட்டத்தில் சரத் பவார் அணியில் சேருவது குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார்.
இது குறித்து நிம்பல்கர் கூறுகையில், ''நான் இன்னும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து முடிவு செய்யவில்லை. எங்களது கட்சி தொண்டர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது'' என்றார். நிம்பல்கரோடு சேர்ந்து எம்.எல்.ஏ தீபக் சவானும் சரத் பவார் அணிக்கே திரும்ப இருக்கிறார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைவர்களில் ஒருவரிடம் பேசியபோது, ''எங்களது கட்சியினர் போட்டியிட நினைக்கும் தொகுதிகள் பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கும் தலைவர்கள் அணி மாறி வருகின்றனர்''என்று தெரிவித்தார். அஜித் பவாரின் தீவிர ஆதரவாளரான மாதா தொகுதி எம்.எல்.ஏ பாபன் ஷிண்டே தனது மகனோடு சரத் பவார் அணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். மாதா தொகுதியில் பாபன் ஷிண்டே அல்லது அவரது மகனை நிறுத்த சரத் பவார் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே புனே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கணிசமான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித் பவாரிடமிருந்து விலகி சரத் பவார் அணியில் சேர்ந்துவிட்டனர்.
அஜித் பவாருக்கு மட்டுமல்லாது பா.ஜ.க-விற்கும் சரத்பவார் நெருக்கடி கொடுத்து வருகிறார். பா.ஜ.க-வின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமான சமர்ஜீத் தற்போது சரத் பவார் அணியில் சேர்ந்திருக்கிறார். அவரை மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் ஹசன் முஸ்ரீப்பிற்கு எதிராக நிறுத்த சரத் பவார் திட்டமிட்டுள்ளார். தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமான மற்றொரு பா.ஜ.க தலைவர் ஹர்ஸ்வர்தன் பாட்டீலும் பா.ஜ.க-வில் இருந்து விலகிவிட்டார். அவரும் சரத் பவார் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். இது தேவேந்திர பட்னாவிஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அஜித் பவாரை சரத் பவார் மன்னிப்பார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்த அஜித் பவாரை சரத்பவார் மன்னிப்பார் என்று அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸிடம், சரத் பவாரிடம் அஜித் பவார் மன்னிப்பு கேட்டால் அவரை சரத் பவார் மன்னிப்பாரா என்று கேட்டதற்கு, ''பவார் குடும்பத்திற்கு சரத் பவார் தலைவர். எனவே அவர் அஜித் பவாரை மன்னிக்கலாம். இவ்விவகாரத்தில் யாரது நெருக்கடிக்கும் பணிந்து சரத் பவார் முடிவு எடுக்கமாட்டார்.
அரசியலையும், தனிப்பட்ட உறவுகளையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ளமாட்டார். தீபாவளியை கொண்டாட பவார் குடும்பம் பாராமதியில் ஒன்று சேர இருக்கிறது'' என்றார். பாராமதியில் அஜித் பவார் மீண்டும் போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, ''போட்டியிடுவார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அஜித் பவார் ஒன்று சொன்னால் அதில் உறுதியாக இருப்பார்'' என்றார். உங்களது மகன் யுகேந்திரா பாராமதி தொகுதியில் போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, ``சரத் பவார்தான் அது குறித்து முடிவு எடுக்கவேண்டும். பாராமதியில் ஐந்து ஆண்டுகளாக யுகேந்திரா பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளான் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் பிரிந்த பிறகு பவார் குடும்பத்திலும் பிரிவு ஏற்பட்டது. பவார் குடும்பத்தில் அஜித் பவார் சகோதரர் உட்பட பெரும்பாலானவர்கள் சரத் பவாருக்கு ஆதரவாக இருந்தனர். அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் மகன் யுகேந்திரா மக்களவை தேர்தலில் சுப்ரியா சுலேயின் வெற்றிக்காக பாடுபட்டார்.