மும்பையில் 1970லிருந்து 30 ஆண்டுகள் மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. டான்ஸ் பார், வீடியோ கேம் கிளப், பாலியல் விடுதி, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்றவை மாஃபியா கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே இதற்கு போலீஸார் முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்தனர். கடந்த 20 ஆண்டுகளாக மாஃபியாக்களின் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும் மும்பைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் மூலம் புதிய அச்சுறுத்தல் உருவாகி இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் கடந்த 12-ம் தேதி, பாலிவுட் பிரபலங்களிடையே மிகவும் பிரபலமான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மும்பையில் சரமாரியாக சுட்டுக்கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் மாஃபியாவை மீண்டும் மும்பையில் உயிர்பெறச்செய்வது போன்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
ஏற்கனவே அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக நடிகர் சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டி வருகிறான். இதற்காக சல்மான் கானுக்கு தொடர்ந்து பல முறை கொலை மிரட்டல் விடுத்துள்ளான். அதோடு சல்மான் கானை கொலை செய்யவும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் முயற்சி மேற்கொண்டனர். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது கடத்தல் வழக்கில் குஜராத் சபர்மதி சிறையில் இருக்கிறான். சிறையில் இருந்து கொண்டு சர்வ சாதாரணமாக தனது கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, இமாச்சல பிரதேசம் என 5 மாநிலங்களில் இருக்கின்றனர். அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் சொல்லும் வேலைகளை செய்து வருகின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் அனைவரும் இளம் வாலிபர்கள் ஆவர்.
அவர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மேற்கத்திய நாடுகள் மற்றும் கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக சோசியல் மீடியா மூலம் தங்களது கூட்டத்தில் சேர்த்துக்கொள்கின்றனர். கூட்டத்திற்குள் வந்த பிறகு பணத்தாசையை காட்டி அவர்களை கிரிமினல் காரியங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
லாரன்ஸ் பிஷ்னோயிக்கு கனடா, அமெரிக்காவில் கூட அடியாட்கள் இருக்கின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளின் பிரதான தொழில் மிரட்டி பணம் பறித்தல், அரசியல் கொலை, ஆயுதம் மற்றும் சாராயம் கடத்துதல் போன்றவை. பஞ்சாப் பாடகர்கள், சாராய மாபியாக்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியமான ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் திகார் சிறையில் இருந்தாலும், குஜராத் சிறையில் இருந்தாலும் அவனது செயல்பாடுகளை அவனது நெருங்கிய கூட்டாளிகளான கோல்டி பிரர் மற்றும் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகியோர் வெளி நாடுகளில் இருந்து கொண்டு தேவையான உதவிகளை செய்து கொடுத்து செயல்படுத்துகின்றனர் என்கிறார்கள். ஆயுதம் சப்ளை, ஆட்களை ஏற்பாடு செய்வது போன்ற வேலைகளை இவர்கள் செய்து கொடுக்கின்றனர். இது தவிர லாரன்ஸ் பிஷ்னோய் சில காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டுள்ளான் என்கிறது போலீஸ் தரப்பினர்.
கூட்டத்தை நடத்துவது எப்படி?
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சிறைக்கு புதிதாக வரும் குற்றவாளிகளை மூளைச்சலவை செய்து தங்களது கூட்டத்தில் இணைத்துக்கொள்கின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்து கொண்டு மொபைல் போனை பயன்படுத்தி தனது கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்கிறான். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளின் மொபைல் போனில் உயர்தொழில் நுட்பம் கொண்ட வி.பி.என் நெட்ஒர்க் பொருத்தி ஐ.பி முகவரியை மறைத்து கூட்டாளிகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறான். லாரன்ஸ் பிஷ்னோய் இதற்காக சிக்னல், டெலகிராம் போன்ற மொபைல் செயலிகளையும் பயன்படுத்துகிறான் என்பது தகவல். அதோடு இதற்காக டப்பா காலிங் எனப்படும் புதிய முறையையும் பின்பற்றுகிறான். இந்த முறையில் சட்டவிரோத எஞ்ஸ்சேஞ்ச் மூலம் போன் செல்லாம். ஆனால் அது வழக்கமான மொபைல் நெட்ஒர்க்கில் தெரியாது என்கிறார்கள். போலீசாராலும் லாரன்ஸ் பிஷனாயின் செயல்பாடுகளை தடுக்க முடிவதில்லை. ஏற்கனவே சொன்னது போல் சிறைக்கு வெளியேயும் 700க்கும் ஏற்பட்ட நபர்கள் ஆயுதப் பயிற்சியோடு லாரன்ஸ் பிஷனாய் டீமில் இருப்பதால் போலீஸாரும் சிறையில் லாரன்ஸ் பிஷ்னாய் செயல்பாடுகளில் பெரிதாக தலையிடுவதில்லை என்கிறார்கள்.
லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் ஒவ்வொரு பகுதியிலும் செயல்படும் உள்ளூர் கேங்க்கை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தங்களது கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்கின்றனர். அவ்வாறு சேர்க்கப்படும் கூட்டாளிகளுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு பணம் கொடுத்து, வேண்டாதவர்களை கொலை செய்கின்றனர். குறிப்பாக ஏழைகள், சிறார்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்படி சேரும் நபர்கள் யாருக்காக வேலை செய்கிறோம் என்ற தகவலைக்கூட தெரிந்து கொள்ளாமல் வேலை செய்கின்றனர். கார்ப்ரேட் கம்பெனி போன்று தாவூத் இப்ராகிமின் டி கம்பெனியை போல் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் செயல்பட்டு வருகிறது.
அயுதம் ஏற்பாடு செய்வது, ஆயுதங்களை கடத்தி வருவது, பணம் பட்டுவாடா, கூலிப்படையை நியமிப்பது என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரிவுகளை லாரன்ஸ் பிஷ்னோய் வைத்திருக்கிறான். சிறையில் இருந்து வெளியில் வந்தால் ஆபத்து என்பதை உணர்ந்து ஜாமீன் வாங்காமல் சிறையில் இருந்துகொண்டே அனைத்தையும் செய்யும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது தனது கிரிமினல் வேலைகளை ஆரம்பித்தான். சிறையில் இருந்தாலும் லாரன்ஸ் பிஷ்னோய் தனது கூட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அதோடு மற்ற கிரிமினல் கூட்டத்தோடும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுகிறான்.
கடந்த டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் வலதுசாரித்தலைவர் சுக்தேவ் சிங், கடந்த மாதம் டெல்லியில் ஜிம் பயிற்சியாளர் படுகொலை, பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா, மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது. சிறைக்குள் இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் செய்யும் லாரன்ஸ் பிஷ்னோயை போலீஸாரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பது சோகம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs