திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாள்கள் கோலாகலமாக நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா `சக்ர ஸ்நானம்’ எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது.
சக்கரத்தாழ்வாருக்கு வேத பண்டிதர்கள் சாஸ்திர முறைப்படி திருமஞ்சனம் செய்தனர். பின்னர் புஷ்கரணியில் புனித நீராடினர். ஒன்பது நாள்களிலும் பிரமாண்ட நாயகன் ஸ்ரீவேங்கடமுடையான் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியருளினார். தீர்த்தவாரிக்குப் பிறகு பிரம்மோற்சவ கொடியும் இறக்கப்பட்டது.
இந்த நிலையில், "பிரம்மோற்சவ திருவிழாவில் முதல் 8 நாள்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. மேலும், உண்டியல் காணிக்கையாக ரூ.26 கோடி வந்துள்ளது" என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பிரம்மோற்சவம் தொடங்கிய கடந்த 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற வாகன சேவையில் 15 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 8-ம் தேதி இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமகா விஷ்ணுவை தரிசனம் செய்ய மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இவர்களுக்காக ஆந்திர அரசுப் பேருந்துகள் 2,800 நடை இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.