"பாலிஷ் போட்டு பாலிஷ் போட்டு சக்கையான அரிசியில் சத்தெங்கே இருக்கும், சுகர்தான் மிச்சமிருக்கும்" என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நமது பாரம்பரிய ரக அரிசி வகைகளே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை, கால அளவு உள்ளிட்ட காரணங்களைக் கூறி அவற்றை விளைவிக்கத் தயக்கம் காட்டி வருகின்றனர் விவசாயிகள்.
இத்தகையைச் சூழலில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பூண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் மலை நெல்லை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீன்ஸ் வகைகள் எனப் பணப் பயிர் விளைக்கும் பூமியில் மலை நெல்லை விளைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் காரணம் என்ன எனப் பூண்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டியிடம் கேட்டோம்.
அதற்கு அவர், "சிறு வயதில் தந்தையை இழந்த நான் எனது 12 வயது முதல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் மட்டுமே எங்கள் பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அதையே நாங்களும் செய்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மலை நெல்லை மீண்டும் விளைவிக்க ஆர்வம் காட்டினர். எங்கள் கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது சம்பிரதாயத்திற்காக மலை நெல் பயன்படுத்தி வருகிறோம். அதற்காகச் சிறிதளவு மட்டும் பாரம்பரியமான மலை நெல் விளைவிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு வைத்திருந்த சிறிதளவு நெல்லை விதை நெல்லாகப் பயன்படுத்தி அதிகமாகப் பயிரிடத் திட்டமிட்டோம்.
முதல்கட்டமாக எங்கள் நிலத்தில் 10 சென்ட் அளவுக்குப் பயிரிட்டோம். தற்போது 3 மாதங்களில் அறுவடை செய்யும் வகையான நெல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மலை நெல் விளைய 9 மாதங்கள் ஆகும். மேலும் 5 முதல் 6 அடி வரை வளரக் கூடியது. தோலானது கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்திலும் அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும்.
ஆயுளைக் கூட்டும் மலை நெல்
இந்தப் பாரம்பரிய நெல்லைத்தான் எங்கள் முன்னோர் அதிகளவில் பயிரிட்டு வந்துள்ளனர். காலப்போக்கில் தண்ணீர் பற்றாக்குறை, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணப்பயிரைப் பயிரிடத் தொடங்கினர்.
இதனால் மலை நெல் என்பதையே எங்கள் பகுதி விவசாயிகள் மறந்து போய்விட்டனர். இந்த அரிசியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றை வரவிடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. இதனால் ஆயுள் அதிகமாகும். எங்கள் முன்னோர்கள் பெரும்பாலும் 100 வயதை அடைந்தவர்கள்.
தற்போது இந்த அரிசியை மறந்ததால் சர்க்கரை நோய் இளைஞர்களுக்கே வந்து கொண்டிருக்கிறது. இதனால் மலை நெல்லை அதிகமாக விளைவித்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதற்காகக் கோவை தோட்டக்கலைத் துறையிடம் ஆய்வுக்காக இந்த நெல்லை வழங்கியுள்ளோம்.
குறுகிய காலத்தில் பயிரிட்டு அதிக லாபம் அடைய முடியவில்லை என்று தெரிந்தபோதிலும், பாரம்பரிய மலை நெல்லை மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் இப்பகுதி இளைஞர்களுக்குப் பாராட்டு குவிகிறது.
அவர்களோ தங்களுக்குப் பாராட்டுத் தேவையில்லை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிர்கள் பயிர்களைச் சேதப்படுத்தாமல் இருக்க வனத்துறையினரும், போதிய தண்ணீர் வசதியைச் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.