வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். இந்த வாரத்துக்கான நாணயம் விகடன் அட்டையை கம்ப்யூட்டர் திரையில் உற்றுநோக்கியவர், ‘‘சூப்பர், வாசகர் களுக்கு மிகச் சரியான தீபாவளிப் பரிசு...’’ எனப் பாராட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, தயாராக இருந்த மஸ்ரூம் சூப்பை கப்பில் ஊற்றித் தந்தோம். பருகிக்கொண்டே நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
சோனா பி.எல்.டபிள்யூ பிரிசிஷன் ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை உயர்ந்துள்ளதே?
‘‘சோனா பி.எல்.டபிள்யூ பிரிசிஷன் நிறுவனம், எஸ்கார்ட்ஸ் குபோட்டா நிறுவனத்தின் ரயில்வே உபகரணங்கள் உற்பத்தி தொழிலைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது. எஸ்கார்ட்ஸ் குபோட்டா நிறுவனம் ரயில்வே துறைக்குத் தேவை யான பிரேக், கப்ளர், சஸ்பென்ஷன் உட்பட பல்வேறு பாகங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இதுபோக, ரயில்வே துறைக்குத் தேவையான புதிய நவீன உபகரணங் களையும் ஆர்&டி பிரிவில் உருவாக்கி வருகிறது. இந்தத் தொழிலை எஸ்கார்ட்ஸ் குபோட்டா நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு சோனா பி.எல்.டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அக்டோபர் 24-ம் தேதி வர்த்தகத்தில் சோனா பி.எல்.டபிள்யூ பிரிசிஷன் பங்கு விலை 15 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதேசமயம், எஸ்கார்ட்ஸ் குபோட்டா பங்கு விலை சுமார் 10 சதவிகிதம் குறைந்து வர்த்தக மானது.’’
இந்துஸ்தான் யுனிலீவர் பங்கு விலை இறங்கிவிட்டதே?
‘‘ஏற்கெனவே இந்திய நிறுவனங்களுக்கு செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சரியில்லை. இந்த நிலையில், முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருவாய் கடந்த ஆண்டை விட 2 சதவிகிதம் மட்டுமே உயர்ந்து, 15,319 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 4 சதவிகிதம் குறைந்து, 2,612 கோடி ரூபாயாக உள்ளது. விற்பனை வளர்ச்சி 3 சதவிகிதமாக உள்ளது. எபிட்டா 1.3 சதவிகிதம் குறைந்து, 3,647 கோடி ரூபாயாக உள்ளது.எபிட்டா மார்ஜின் 0.80% குறைந்து, 23.8 சதவிகிதமாக உள்ளது.
இதுபோக, ஐஸ்க்ரீம் பிசினஸை தனியாகப் பிரிப்பதற்கும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த மாக, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு ரிசல்ட் சந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அக்டோபர் 24-ம் தேதி வர்த்தகத்தில் இந்துஸ்தான் யுனிலீவர் பங்கு விலை கிட்டத் தட்ட 8 சதவிகிதம் இறங்கிவிட்டது.’’
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிய என்ன காரணம்?
‘‘இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 24-ம் தேதி வரை சென்செக்ஸ் 5 சதவிகிதத்துக்கு மேல் இறங்கியுள்ளது. உச்சத்திலிருந்து 7% இறங்கியுள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இரான் - இஸ்ரேல் போரால் மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் இன்னும் தணியவில்லை. மேலும், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உஷாராகிவிட்டனர்.
அமெரிக்க கடன் பத்திரங்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. இதற்கிடையே இந்தியா - கனடா உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனை பிரச்னைகள் இருப்பதால்தான் இந்திய பங்குச் சந்தை சரிவுப் பாதையில் இருந்தது. செப்டம்பர் காலாண்டு முடிவு களாவது காப்பாற்றும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், காலாண்டு முடிவுகள் மிக மோசமாக இருக்கின்றன. இதனால், சந்தை மேலும் அடி வாங்கியுள்ளது. அக்டோபர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் 80,000 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர். இதனால்தான், இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் காணப்படுகிறது.
இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி நல்ல நிறுவனப் பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.’’
ஆம்பர் என்டர்பிரைசஸ் பங்கு விலை அட்டகாசமாக உயர்ந்துள்ளதே?
‘‘ஆம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 82 சதவிகிதம் உயர்ந்து, 1,685 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 19.24 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஆம்பர் நிறுவனம் 6.94 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த நிலை யில், இந்த ஆண்டு லாபகரமாக மாறி யுள்ளது. இந்த நிறுவனத்தின் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் பிரிவின் வருவாய் 95 சத விகிதம் வளர்ந்துள்ளது. எலெக்ட் ரானிக்ஸ் பிரிவில் வருவாய் 98 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ரயில்வே பிரிவில் வருவாய் 6 சத விகிதம் குறைந்துள்ளது. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் பிரிவில் டவர் ஏ.சி உட்பட பல்வேறு புதிய தயாரிப்புகளுக்கு ஆம்பர் நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் நிறைய ஆர்டர்களும் கைவசம் இருக்கின்றன.
மொத்தமாக, ஆம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருப்பதால், அக்டோபர் 23, 24 ஆகிய இரண்டே நாள்களில் அதன் பங்கு விலை சுமார் 26 சதவிகிதம் எகிறிவிட்டது.’’
பேடிஎம் பங்கு விலை ஏற்றம் கண்டுள்ளதே?
‘‘பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் புதிய யு.பி.ஐ பயனர்களைச் சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தடையை நீக்கும்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பேடிஎம் நிறுவனத்தின் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மா கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு பேடிஎம் நிறுவனம் புதிய யு.பி.ஐ பயனர்களைச் சேர்ப்பதற்கு தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 23, 24 ஆகிய இரண்டு நாள்களில் பேடிஎம் பங்கு விலை சுமார் 15 சதவிகிதம் உயர்ந் துள்ளது. ஆனாலும், இன்னும் பேடிஎம் பங்கு அதன் ஐ.பி.ஓ விலையைவிட மிகக் குறைவான விலையில்தான் வர்த்தகமாகி வருகிறது.
மேலும், கடந்த செப்டம்பர் காலாண்டில் பேடிஎம் நிறுவனம் 930 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந் துள்ளது. ஆனால், இந்த லாபத்துக்கு முக்கியமான காரணம், சினிமா மற்றும் பொழுதுபோக்கு டிக்கெட் விற்பனை பிசினஸை பேடிஎம் நிறுவனம் 1,345 கோடி ரூபாய்க்கு விற்றதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.’’
சிட்டி யூனியன் பேங்க் பங்கு விலை உயர்ந்துள்ளதே?
‘‘கும்பகோணத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு இயங்கிவரும் சிட்டி யூனியன் பேங்க், செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. லாபம், நிகர வட்டி வருமானம் எனப் பல்வேறு விஷயங் களில் நல்ல வளர்ச்சி இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 8 சதவிகிதம் உயர்ந்து, 582 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி மார்ஜின் 3.54 சத விகிதத்திலிருந்து, 3.67 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
வரிக்குப் பிந்தைய லாபம் 281 கோடி ரூபாயில் இருந்து, 285 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையெல்லாம்விட முக்கியமாக, வாராக்கடன்களின் விகிதம் சிறப்பாகவே குறைந்துள்ளது.
மொத்த வாராக் கடன் விகிதம் 4.66 சதவிகிதத்திலிருந்து 3.54 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் 2.34 சதவிகிதத்தில் இருந்து 1.62 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
ரிசல்ட் சிறப்பாக இருப்பதால் சிட்டி யூனியன் வங்கிக்கு மெக்யூரி, இன்வெஸ்டெக் போன்ற தரகு நிறுவனங்கள் பாசிட்டிவ்வான ரேட்டிங் கொடுத்துள்ளன. இதனால், அக்டோபர் 22-ம் தேதி வர்த்தகத்தில் சிட்டி யூனியன் பேங்க் பங்கு விலை சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தது.’’
பிரமல் ஃபார்மா பங்கு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதே?
‘‘பிரமல் ஃபார்மா நிறுவனம் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரமல் ஃபார்மாவின் வருவாய் 17 சதவிகிதம் உயர்ந்து, 2,242 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் அதிரடியாக சுமார் 350 சதவிகிதம் உயர்ந்து, 23 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 5 கோடி ரூபாய் லாபம் பெற்றது. எபிட்டா 28 சதவிகிதம் உயர்ந்து, 403 கோடி ரூபாயாக உள்ளது. எபிட்டா மார்ஜின் 16 சதவிகிதத்தில் இருந்து 18 சத விகிதமாக உயர்ந்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் லெக்ஸிங்டனில் உள்ள ஆலையை 80 மில்லியன் டாலர் செலவில் விரிவாக்கம் செய்யப்போவதாகவும் பிரமல் ஃபார்மா அறிவித்துள்ளது. 2029-30 நிதி ஆண்டுக்குள் 2 பில்லியன் டாலர் வருவாய் இலக்கைத் தொடுவதற்கு நீண்டகால திட்டங்களுடன் செயல்பட்டு வருவதாக பிரமல் ஃபார்மா நிறுவனம் தெரிவித் துள்ளது.
காலாண்டு ரிசல்ட் திருப்தி அளிப்பதால், அக்டோபர் 24-ம் தேதி வர்த்தகத்தில் பிரமல் ஃபார்மா பங்கு விலை சுமார் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.’’
பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் பங்கு விலை சிறப்பாக உயர்ந்துள்ளதே?
‘‘பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஒரு வளர்ந்து வரும் ஐ.டி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருவாய் 20.13 சதவிகிதம் உயர்ந்து, 2,897 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 23.44 சதவிகிதம் உயர்ந்து, 324.9 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் காலாண்டில் பெரிய ஐ.டி நிறுவனங்களை விட நடுத்தர மற்றும் சிறிய ஐ.டி நிறுவனங் களுக்கே ஓரளவுக்குப் புதிய ஆர்டர்கள் வந்திருக்கின்றன.
அவ்வகையில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் போன்ற நடுத்தர ஐ.டி நிறுவனங்களின் ரிசல்ட் பரவாயில்லை. அந்த வகையில், பங்குத் தரகு நிறுவனங்களும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ரிசல்ட்டை பாராட்டி நல்ல ரேட்டிங் கொடுத்திருக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், நுவாமா போன்ற பங்குத் தரகு நிறுவனங்கள் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் பங்குகளை வாங்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளன. இதனால், அக்டோபர்23-ம் தேதி பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் பங்கு விலை 12 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்தது.’’
தேஜஸ் நெட்வொர்க்ஸ் பங்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளதே?
‘‘டாடா குழுமத்தைச் சேர்ந்த தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் டெலிகாம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது.
அதன்படி, வருவாய் 6 மடங்கு உயர்ந்து, 2,811 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டில் வருவாய் 396 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல கடந்த ஆண்டில் 13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 275 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.
வருவாய் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தனியார் துறையில் இருந்து கிடைத்த பங்களிப்புதான். மொத்த வருவாயில் தனியார் துறைக்கு மட்டும் 93 சதவிகித பங்கு இருக்கிறது.
மேலும், இந்த நிறுவனத்திடம் 4,845 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் நிலுவையில் இருக்கின்றன. கூடுதலாக ரயில்வே துறையிலும் பாதுகாப்பு தொடர்பான ஆர்டர்களைப் பெறுவதற்கு தேஜஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால், அக்டோபர் 21-ம் தேதி வர்த்தகத்தில் தேஜஸ் நெட்வொர்க்ஸ் பங்கு விலை 20 சதவிகிதம் உயர்ந்து விட்டது.’’
அசோக் லேலண்ட் பங்கு விலை உயர்ந்திருக்கிறதே?
‘‘சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் கனரக வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 500 தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகளை விற்பனை செய் வதற்கான ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதில் 400 பேருந்துகள் ஏ.சி வசதி இல்லாதவையாகவும், 100 பேருந்துகள் ஏ.சி வசதி கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
இந்த எலெக்ட்ரிக் பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தொலை வுக்குப் பயணிக்கும் திறன்கொண்டவை. பேருந்துகளை சார்ஜ் செய்வதற்காக பெரம்பூர், பெரும்பாக்கம், பூந்தமல்லி, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கே.கே நகர் ஆகிய டெப்போக்களில் சார்ஜிங் வசதிகள் கொண்டு வரப்படும் எனவும் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஆர்டர் பற்றிய தகவல் வெளியானபின், அக்டோபர் 24-ம் தேதி வர்த்தகத்தில் அசோக் லேலண்ட் பங்கு விலை 2 சதவிகிதம் உயர்ந்தது. மேலும், நமது சென்னைக்கு எலெக்ட்ரிக் பேருந்துகள் வருவது கூடுதல் போனஸ்!’’ என்ற ஷேர்லக், ‘‘நாணயம் விகடன் வாசகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள். வளம் பெருகட்டும்’’ என வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
தேசிய பொழுதுபோக்காக மாறிய எஃப்&ஓ டிரேடிங்!
இந்தியர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் என்ற காலம் மலையேறி, இப்போது அதிக ரிஸ்க் உள்ள இடங்களில்தான் பணத்தையே போடுகின்றனர். அந்த வகையில், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியர்கள் எஃப்&ஓ வர்த்தகத்துக்கு அடிமையாகிவிட்டனர் என்பதே உண்மை. இதில் சிறு வர்த்தகர்கள் 93 சதவிகிதத்தினர் நஷ்டம்தான் அடைகின்றனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்து விளையாடிக்கொண்டிருப்பதாக செபி ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.
இந்த நிலையில், 14-ம் மார்னிங்ஸ்டார் முதலீட்டு மாநாட்டில் செபியின் முழுநேர உறுப்பினரான அஷ்வனி பாத்தியா பேசியபோது, “எஃப்&ஓ வர்த்தகம் தேசிய பொழுதுபோக்காக இருக்கக் கூடாது. நாட்டில் உருவாக்கப்படும் செல்வத்தில் பங்கேற்க நேரடியாகப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாக நாம் சீரியஸாக முதலீடு செய்ய வேண்டும். உலகின் ஒட்டுமொத்த எஃப்&ஓ வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் பங்கு இருக்கிறது. ஆனால், இந்தப் பெருமை நமக்குத் தேவை இல்லாதது. நாம் செழிப்பாக இருப்பது மட்டுமல்லாமல் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். இந்த தீபாவளியில் இருந்தாவது, எஃப்&ஓ சூதாட்டங்களை விட்டுவிட்டு, ரியல் முதலீட்டில் செல்வத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்தலாமே!