விருதுநகர் மாவட்டத்தில், வங்கி வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடி செய்த வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 3 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 'தாய்கோ' வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளையில் கடந்த 2008ம் ஆண்டு மேலாளராகப் பணிபுரிந்தவர் சாத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் பதவியிலிருந்த காலகட்டத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாய்கோ வங்கி கிளையில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரணை நடத்தினர். காவல்துறையின் விசாரணையில், வங்கி கிளை வாடிக்கையாளர்கள் பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து ரூ.46 லட்சத்து 5 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த கையாடலில், வங்கி கணக்கர் குலாம் அகமத், உதவியாளர் சாரதா, கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், ராஜபாளையம் அன்னை இந்திரா காந்தி நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி சுந்தரி, ராஜபாளையம் அரசுப் போக்குவரத்து கிளை பணியாளர் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், முத்துராமன், முரளிதரன், முத்துசாமி மாரியம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராம்குமார், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சரவணன், வத்திராயிருப்பைச் சேர்ந்த கற்பகவள்ளி உள்பட 14 பேருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வங்கி பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக வங்கி மேலாளர் ராமச்சந்திரன் உள்பட 14 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து வந்தார். பல்வேறு அமர்வுகளில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 246 ஆவணங்கள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கிளை மேலாளர் ராமச்சந்திரன், குலாம் அகமத், ஜோதி சுந்தரி, முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோர் குற்றவாளிகள் எனக் நீதிமன்றம் தீர்மானம் செய்தது. இந்தநிலையில் இந்த வழக்குத் தீர்ப்புக்காக நேற்று (அக்டோபர் 25) எடுத்துக்கொள்ளப்பட்டதில், முன்னாள் வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, தலைமை ஆசிரியை ஜோதி சுந்தரி ஆகிய மூன்று பேருக்கும் தலா 7 வருடக் கடுங்காவல் தண்டனையும், தலா 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து, வங்கி உதவியாளர் சாரதா, முத்துராமன், மாரியம்மாள், கற்பகவள்ளி ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆறுமுகம், சரவணன், முருகானந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs