திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பூங்கா தெருவில் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனி தரப்பிலிருந்து வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரம் சமூகவலைத்தளத்தில் பரவியது. அதைப்பார்த்த பெண்கள், மாணவிகள் சம்பந்தப்பட்ட கம்பெனியை அணுகினர். அப்போது கம்பெனி தரப்பில் பேசியவர்கள், ``நீங்கள் 10,800 ரூபாயை டெபாசிட்டாக செலுத்தி, எங்கள் கம்பெனியில் உறுப்பினராக வேண்டும். நீங்கள் செலுத்தும் பணத்துக்கு உங்களுக்கு சத்துமாவு, பற்பசை, தலைக்கு தேய்க்கும் ஆயில், தேன், ஆம்லா ஜூஸ் ஆகியவற்றை வழங்குவோம். பின்னர் டெபாசிட் செய்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை எங்கள் கம்பெனியில் உறுப்பினராக சேர்த்துவிட்டால், அதற்கேற்ப உங்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுவதோடு டீம் லீடராக்கப்படுவீர்கள். இதன்மூலம் வீட்டிலிருந்தப்படி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
இந்தத் தகவல் திருத்தணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதும் ஏராளமானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை டெபாசிட் செய்து டீம் லீடராகியுள்ளனர். இதையடுத்து டீம் லீடர்களின் வங்கி கணக்குகள் பெறப்பட்டு அவர்களின் அக்கவுண்ட்களில் பணமும் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மகிழ்ச்சியடைந்தவர்கள், பலரை இந்தக் கம்பெனியில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். சில மாதங்களிலேயே கம்பெனி தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதுகுறித்து கம்பெனியில் கேட்டபோதும் சரிவர பதில் இல்லை. அதனால் ஏராளமான பெண்கள், கம்பெனி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் திருத்தணி டி.எஸ்.பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோருக்கு தெரியவந்ததும் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மாணவிகள், கம்பெனியின் மேனேஜர் ரகு, அவரின் மனைவி சத்யா, கம்பெனியில் வேலை செய்யும் நந்தினி ஆகியோரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான் அங்கு லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த சக்தி என்ற மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரகு, அவரின் மனைவி சத்யா, அங்கு வேலை செய்த நந்தினி என மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
பணம் கொடுத்து ஏமாந்த திருத்தணியைச் சேர்ந்த மாணவி திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு கடந்த 17.6.2024-ம் தேதி வேலை வாய்ப்பு நோட்டீஸ் என ஒரு நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது. அதனால் மெசேஜ் வந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு நான் பேசிய போது எதிரில் பேசியவர் தன்னை நந்தினி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். பின்னர் நந்தினி என்னை அலுவலகம் வரச் சொன்னார். அதன்படி நானும் அங்குச் சென்று பார்த்தபோது பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார். மேலும், வேலை வேண்டும் என்றால் தங்களின் கம்பெனியில் உறுப்பினராக சேரும்படியும் அதற்கு 10,800 ரூபாய் செலுத்தும்படியும் கூறினார். இதையடுத்து நானும் என்னுடைய பெற்றோரிடம் பணத்தை வாங்கி நந்தியினிடம் கடந்த 31.7.2024-ல் கொடுத்தேன். இதையடுத்து பணம் செலுத்தியதற்கான ரசீதுடன், 9 கண்டிஷன்களை கூறி, ஒரு பேப்பரில் என்னிடம் கையெழுத்து வாங்கினார் நந்தினி.
அடுத்து 13 பொருள்களை என்னிடம் கொடுத்த நந்தினி, அதை என்னையே பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார். பின்னர் 12 இலக்க ஐ.டி ஒன்றையும் 6 இலக்க பாஸ்வேர்டையும் என்னிடம் நந்தினி தெரிவித்தார். இதையடுத்து எனக்கு கீழ் கட்டாயம் இரண்டு பேரை பணம் செலுத்தி கம்பெனியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்து விட்டால் வருமானம் வரும் என்று நந்தினி கூறினார்.
இதையடுத்து செலுத்திய பணத்தை திரும்ப பெறும் கட்டாய நோக்கத்தில் 10 பேரை நான் சேர்த்துவிட்டேன். நான் சேர்த்து விட்டவர்களிடமும் தலா 10800 ரூபாயை நந்தினியும் கம்பெனியில் மேனேஜர் ரகுவும் வாங்கினார்கள். தற்போது எனக்கு கீழ் 65 பேர் உள்ளனர். அதில் சிலருக்கு பொருள்களும் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுக்கவில்லை. இதுகுறித்து கம்பெனியில் நான் தெரிவித்தபோது சிலர் என் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்தார்கள்.
இதற்கிடையில் கம்பெனியிலிருந்து கொடுத்த ஆம்லா ஜூஸ் குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது. என்னுடைய வங்கி கணக்கில் இதுவரை வருமானமாக 15,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. என்னுடைய குழுவினருக்காக மேனேஜர் ரகு, நந்தினியிடம் பேசியதால் என்னை மிரட்டியதோடு எனக்கு வர வேண்டிய வருமானத்தை இருவரும் தடுத்தனர். மேலும் எனக்குத் தெரியாமலேயே என்னுடைய வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவை எனக்கு வழங்கப்பட்ட ஐடியிலிருந்து நீக்கப்பட்டது. இதை போல எனக்கு மேல் உள்ள லீடர் திலகவதியின் வங்கி அக்கவுண்ட் நம்பர், ஆதார் எண் நீக்கப்பட்டது. எனவே எனக்கும் மற்றும் என்னைப் போன்றவர்கள் செலுத்திய பணத்தை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து திருத்தணி போலீஸார் கூறுகையில், `` பகுதி நேர வேலை, முழு நேர வேலை எனக் கூறி இந்த மோசடி நடந்திருக்கிறது. இந்தக் கம்பெனியில் 10800 ரூபாய் செலுத்திய பெண்கள், மாணவிகளுக்கு தேங்காய் எண்ணெய், தேன் பாட்டில், சர்க்கரை, பி.பி என சில வியாதிகளைக் குணமாக்க கூடிய கிழங்கு மாவு, டூத் பேஸ்ட், நெல்லிக்காய் ஜூஸ் என பொருள்களை கொடுத்திருக்கிறார்கள். பணம் செலுத்தியவர்களை மூளைச் சலவை செய்ய மீட்டிங்கும் நடத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியில் அந்தக் கம்பெனியின் மேனேஜர் ரகு, அவரின் மனைவி சத்யா, அசைன்மென்ட் மேனேஜர் நந்தினி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர்களை கைது செய்திருக்கிறோம். இந்தக் கம்பெனியின் கிளைகள் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆந்திராவிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மோசடி தொகையும் லட்சத்திலிருந்து கோடி ரூபாயாகலாம். எனவே இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட வாய்பபுள்ளது. இந்தக் கம்பெனியில் நடந்துள்ள மோசடியில் மாணவிகளும் குடும்பத்தலைவிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் கூறுகையில், ``நாங்கள் செலுத்திய 10800 ரூபாய்க்கு 2500 ரூபாய் மதிப்பிலான கிழங்கு மாவு என்று கூறி ஒரு பாக்கெட்டை எங்களிடம் கொடுத்தார்கள். அதை சாப்பிட்டால், சர்க்கரை நோய், பி.பி. என நோயும் வராது என்று கம்பெனி மேனேஜர் ரகுவும் நந்தினியும் கூறினார்கள். அதைப் போல பற்கள் பாதுகாப்பு எனக் கூறி ஒரு டூத் பேஸ்ட்டை தந்தார்கள். அதன்விலை 1500 ரூபாயாகும். தேன்பாட்டிலின் விலை 500, தலைமுடி கொட்டாத தேங்காய் எண்ணெய் எனக் கூறி 1200 ரூபாய்க்கு ஒரு பாட்டிலைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டனர். கம்மல், செயின். மூக்குத்தி என நகைகளை விற்றும் கடன் வாங்கியும் பணத்தை செலுத்தி ஏமாந்து நிற்கிறோம்" என்றனர் கண்ணீர் மல்க!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY