உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து, 2 கிலோ மனித முடி அகற்றப்பட்டிருக்கும் சம்பவம், பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் உள்ள கர்கைனா என்ற ஊரில் வசித்து வரும் 21 வயதே ஆன இளம்பெண் ஒருவருக்கு கடந்த 5 வருடங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்த நிலையில், எந்த ஒரு மருத்துவமனை சிகிச்சையிலும் காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான், பரேலி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட CT ஸ்கேனில் அதிக அளவு மனித முடி அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது.
கடந்த மாதம் செப்டம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், அறுவை சிகிச்சையின் மூலமாக வயிற்றினுள் இருந்த 2 கிலோ மனித முடியினை அகற்றப்பெற்று இப்பொழுது நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் அவர் தனது முடியினை கடந்த 16 வருடங்களாக உண்ணும் பழக்கத்தில் இருந்துள்ளார். இந்தத் தகவலை மனநல மருத்துவரிடம் அவர் பேசியபோது, கூறியுள்ளார். இந்தப் பழக்கத்திற்கு பெயர் " டிரிக்கோடில்லோமேனியா" (Trichotillomania). இது ஒரு வகை மன நோய். இது மீண்டும் தொடராமல் இருக்க அந்தப் பெண்ணிற்கு சில மாதங்களுக்கு மனநல ஆலோசனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.