குனிஞ்சு டக்குன்னு நிமிர்ந்தா, மயக்கம் வர்ற மாதிரி ஒரு சுழட்டு சுழட்டும். ஒரு பக்கம் பார்த்துட்டே இருந்துட்டு, சடார்னு இன்னொரு பக்கம் திரும்பி பார்க்கிறப்போ மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். படுக்கையில இருந்து எழுந்திருக்கிறப்போ, உலகமே சுற்றி வர்ற மாதிரி இருக்கும். இந்தப் பிரச்னையோட பேரு வெர்டிகோ. இது எதனால வருது, வராம தடுக்க முடியுமா, வந்தா எப்படி சரி செய்யலாம் என, இயற்கை மருத்துவர் யோ. தீபா அவர்களிடம் கேட்டோம்.
''வெர்டிகோவுல பெரிபெரல், சென்ட்ரல்னு 2 வகைகள் இருக்கு. முதல் வகை காதுகள்ல இருக்கிற பிரச்னைகளால வரக்கூடியது. அதாவது, காதுல ஏதாவது தொற்று இருந்தாலோ, அதிகமா அழுக்கு சேர்ந்திருந்தாலோ காதுக்குள் அழுத்தம் மாறுபடும். இதனால வர்றது பெரிபெரல் வெர்டிகோ.
தலையில அடிபட்டிருந்தாலோ, தலையில் இருக்கிற ரத்தக்குழாய்கள்ல அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி இருந்தாலோ, கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்பட்டு அது அங்கிருக்கும் நரம்புகளை அழுத்தினாலோ வரக்கூடியது சென்ட்ரல் வெர்டிகோ.
இந்தப் பிரச்னை இருந்தா நடக்குறப்போ, ரோடை கிராஸ் பண்றப்போ, வண்டி ஓட்டுறப்போ ரொம்ப கஷ்டப்படுவாங்க; பயப்படவும் செய்வாங்க. இந்தப் பிரச்னை இருக்கிறவங்க உடனடியா மருத்துவரைப் பார்த்து 'எதனால அவங்களுக்கு வெர்டிகோ வந்திருக்கு'ன்னு தெரிஞ்சுக்கிட்டு சிகிச்சை எடுக்க ஆரம்பிக்கலாம்.''
சரி, இந்த வெர்டிகோ வராம தடுக்கிறதுக்கு இயற்கை மருத்துவத்துல வழிகள் இருக்கான்னு கேட்டா, இருக்குன்னு சொல்றார் டாக்டர் தீபா.
''உட்காரும்போது உங்களுடைய முதுகுத்தண்டு நேராக இருக்கணும். சேர்ல உட்கார்ந்திருந்தீங்கன்னா, உங்க கால்கள் தரையில படணும். உங்க போஸ்ச்சர் (posture) சரியா இருந்தாலே வெர்டிகோ வராம தடுக்கலாம்.
படுக்கையில இருந்து எழுந்திருக்கும்போது, வேகமா எழுந்து நிக்கக்கூடாது. முதல்ல ஒருக்களிச்சு திரும்பணும். அப்புறம் தலையை நிமிர்த்தணும். பிறகு எழுந்து அப்படியே சில நொடிகள் உட்காரந்து இருக்கணும். அதுக்குப்பிறகுதான் எழுந்து நிக்கணும்.
குனிஞ்சிட்டிருந்தீங்கன்னா, வேகமா நிமிரக்கூடாது. அந்த நேரம் யாராவது கூப்பிட்டா, வேகமா திரும்பிப்பார்க்கவும் கூடாது.
காதுகள்ல தொற்று ஏற்படாத அளவுக்கு முறையா பராமரிக்கணும்.
ஒருவேளை வெர்டிகோ வந்துட்டாலும் சரி செய்ய முடியும்.
காதுல பிரச்னை இருக்கிறதால வெர்ட்டிகோ வந்திருந்தா, தொற்றையும் அழுக்கையும் முதல்ல சரி செஞ்சுட்டு, பிறகு பிராமரி பிராணாயாமம் பண்ண ஆரம்பிங்க. இதனால, காதுக்குள்ள அழுத்தம் சமநிலைக்கு வரும். கூடவே, ஒற்றைத்தலைவலியையும் கன்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்திடலாம்.
பெப்பர்மின்ட் ஆயில், லேவண்டர் ஆயில், லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் கலந்து, அதில் இரண்டு துளிகளை கர்சீஃபில் தெளித்து நுகர்ந்து வந்தால், அடிக்கடி வருகிற வெர்ட்டிகோ படிப்படியா எப்போதாவது என மாறும். இதே அரோமோ ஆயில்களால் தலையில் மசாஜ் செய்து வந்தாலும் வெர்ட்டிகோ அடிக்கடி வருவது கன்ட்ரோலுக்குள் வரும். 2015-ல் நடந்த ஆய்வு ஒன்று இதை நிரூபணமும் செஞ்சிருக்கு.
கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்பட்டு அது அங்கிருக்கும் நரம்புகளை அழுத்துறதால வர்ற வெர்ட்டிகோவுக்கு, இயற்கை மருத்துவத்துல இருக்கிற 'கைரோ பிராக்டீஸ் (Kairo Practice) சிகிச்சை கொடுத்து, படிப்படியா சரி செஞ்சிடலாம். மொத்தத்துல வெர்ட்டிகோ வந்தா பயந்துடாதீங்க'' என்கிறார் டாக்டர் தீபா.