இங்கிலாந்து நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் குற்றத் தடுப்புத்துறை அமைச்சர் டயானா ஜான்சன் (Diana Johnson), திருட்டைப் பற்றி ஒரு மாநாட்டில் பேசும்போது எதிர்பாராதவிதமாக அவருடைய பணப்பையையே ஒருவர் திருடிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவமானது, செப்டம்பர் 10-ம் தேதி வார்விக்ஷயரில் (Warwickshire) உள்ள கேணில்ஒர்த் என்ற ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்திர போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கம் (PSA) மாநாட்டில் அரங்கேறியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதை டயானா ஜான்சனின் உள்துறை அலுவலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதுவும், ``சமூகத்துக்கு எதிரான நடத்தை, திருட்டு மற்றும் கடைகளில் நடத்தப்படும் திருட்டு ஆகிய இவையெல்லாம் தொற்றுநோயாக மாறிவிட்டது. பொது மக்களுக்கு காவல்துறையின் மீதிருந்த நம்பிக்கையைத் திரும்பப்பெற சட்ட அமலாக்கத்தில் காவல்துறை இருப்பை அதிகப்படுத்துவது மற்றும் சமூக ஆதரவு முயற்சிகளை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறோம்" என டயானா ஜான்சன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திருட்டு நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், காலை 11 மணி முதல் பகல் 1:15 மணிக்குள் திருட்டு நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், கோவென்ட்ரியைச் சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்கவர் இதைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விசாரணை காரணமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குற்றத்தடுப்பு துறை அமைச்சரிடமே இந்த திருட்டு நடந்திருப்பதால் தற்போது இது பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும், ஒரு அறை முழுக்க சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இருக்கும்போதே திருட்டு சம்பவம் நடந்திருக்கிறதென்றால் மக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்புகளை எப்படி நாட்டில் கையாள்வார்கள் எனப் பலரும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.