ஏன் பல மடங்கு அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிதின் கட்கரியிடம் ஒரு இடத்தில் சாலை அமைக்க 1,900 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என்ற போது 8,000 கோடி ரூபாய் வரை சுங்கச் சாவடி கட்டணமாக வசூலிக்கப்படுகிறதே ஏன்? இதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, "ஒரே நாளில் அனைத்து சுங்கச்சாவடி கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
சுங்கச்சாவடி கட்டணம் அமைப்பதற்கு முன்பு பின்பு என்று இரண்டு வகையில் செலவுகள் உள்ளன. அதை எல்லாம் அரசுதான் ஏற்க வேண்டி இருக்கிறது" என்று கூறிய நிதின் கட்கரி, மேலும் ஒரு உதாரணத்துடன் விளக்கி இருக்கிறார்.
" நீங்கள் ஒரு கார் அல்லது வீட்டை ரொக்கமாக வாங்கினால் அதன் விலை 2.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதே பொருளை 10 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றால், அதன் விலை 5.5 முதல் 6 லட்ச ரூபாயாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் வட்டியும் கட்ட வேண்டும். நமது நாட்டில் பல நேரங்களில் கடன் வாங்கியே நெடுஞ்சாலைகளை அமைக்கிறோம். இதன் காரணமாகவே சுங்கக் கட்டணம் அதிகம் வசூலிக்கிறோம்" என்று விளக்கமளித்திருக்கிறார்.
சமீபத்தில், டெல்லி- ஜெய்பூர் நெடுஞ்சாலை குறித்து ஆர்டிஐ-இல் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதில் மனோகர்பூர் டோல் பிளாசாவில் இருந்து சுமார் 8,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகப் பதில் கூறப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலை அமைக்க சுமார் 1,900 கோடி ரூபாய் மட்டுமே செலவான நிலையில் 8,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதை முன்னிட்டுதான் நிதின் கட்கரியிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.