‛‛இப்போ எங்க பார்த்தாலும் ட்ரையம்ப் பைக்காவே இருக்கே அண்ணே… புல்லட்லாம் எங்க?’’ என்றார் ஒரு நண்பர். நிஜம்தான்; இப்போது ட்ரையம்ப் ஷோரூம்களில் கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்கிறது.
இதற்கு 2 காரணங்களைச் சொல்லலாம். இந்திய நிறுவனமான பஜாஜின் பார்ட்னர்ஷிப் என்பதால், பிரிட்டிஷ் நிறுவனத்தின் காஸ்ட்லி பிராண்ட் என்கிற இமேஜிலிருந்து வெளியே வந்து, நம் ஊர் பதத்தை அனுபவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இன்னொன்று - விலையில் கொஞ்சம் கையைக் கடிக்காமல் வருகின்றன ட்ரையம்ப் பைக்குகள்.
ஏற்கெனவே ட்ரையம்ப்பில் ஸ்பீடு 400 என்கிற பைக் இருக்கும்வேளையில், இப்போது ஸ்பீடு பைக்கின் அப்டேட்டட் வெர்ஷனாக, Speed T4 என்கிற பைக்கைக் கொண்டு வந்திருக்கிறது ட்ரையம்ப். அதுவும் 2.17 லட்சம் விலையில்! இது எக்ஸ் ஷோரூம் விலைதான் என்றாலும், யமஹா நிறுவனத்தின் 150 சிசி பைக் ஒன்று - 2 லட்சம் விலைக்கு லேட்டஸ்ட்டாக லாஞ்ச் ஆனது நினைவுக்கு வருகிறது.
ஓகே! இப்போது ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்குக்கும், T4 பைக்குக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம்.
இரண்டு பைக்குகளுமே ட்யூபுலர் ஃப்ரேம் சேஸியில்தான் உருவாகி இருக்கின்றன. இரண்டிலும் இருப்பதுமே 390 சிசி, லிக்விட் கூல்டு செட்அப்தான். இதற்குப் பெயர் TR சீரிஸ். இந்த ட்ரையம்ப்பின் பிக்-அப் வேற லெவலில் இருக்கும். காரணம் - 2,500rpm-க்குள்ளாகவே 85% டார்க்கும் கிடைத்துவிடும். அதனால், லோ எண்டில் செமையாக இருக்கும் இந்த பைக்குகள். இரண்டிலுமே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான்.
இரண்டு பைக்குகளுக்குமே வீல்களின் அளவு 17 இன்ச்தான். பிரேக்குகளும்தான்; 320/270 மிமீ அளவு. இப்படி டிசைன் மொழியின்படி பார்த்தால், இரண்டுக்குமே பெரிய வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடியாது. அட, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் - ஸ்விட்ச் கியர்களும்கூட இரண்டுக்குமே ஒன்றுதான்!
முன்பக்க சஸ்பென்ஷனில் இருந்து வித்தியாசம் தொடங்குகிறது. ஸ்பீடு 400-ல் இருப்பது தடிமனான தங்கநிற USD (Upside Down Forks). T4-ல் இருப்பதோ, சாதாரணமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள். இதனால், ஓட்டுதல் தரம் ஸ்பீடு 400 அளவுக்கு T4-ல் எதிர்பார்க்க முடியாது. அதேபோல், ஸ்பீடு 400-ல் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்களைக் கை வலிப்பதற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால், T4-ல் அட்ஜஸ்டபிள் லீவர்கள் இல்லை. ஸ்டைலிஷ் ஆன ஹேண்டில்பாரின் கடைசியில் முடியும் Bar-End மிரர்களும் மிஸ்ஸிங்.
பெர்ஃபாமன்ஸிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். காரணம் அதே TR சீரிஸ் இன்ஜின்தான் என்றாலும், T4-ல் ஸ்பீடு 400-யை விடக் குறைந்த பவரும் டார்க்கும்தான் இருக்கும். இதனால் பிக்அப்பும் வேகமும் ஸ்பீடு 400-யை விடக் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் T4-ல். ஸ்பீடு 400-ல் இருப்பது 40bhp பவரும் 37.5Nm டார்க்கும் என்றால், T4-ல் இருப்பது 30.6bhp-யும், 36Nm டார்க்கும்தான். அதற்காக ரொம்பவெல்லாம் டம்மியாக இருந்துவிடாது T4. அந்த லோ எண்ட் பெர்ஃபாமன்ஸ் இதில் எப்படி இருக்கும் என்று ஓட்டிப் பார்த்தால்தான் தெரியும்!
அதேபோல், பின் பக்க செயின் ஸ்ப்ராக்கெட் இருக்கிறதில்லையா? அந்த பற்களின் அளவையும் குறைத்துள்ளார்கள். 43-ல் இருந்து 39 பற்களாக மாறியிருக்கிறது T4-ல். அதனால், ஸ்பீடு 400-யை விட Tall Gearing செட்அப் கிடைக்கும். இந்த பவர் குறைபாட்டால், ஸ்பீடு 400-ல் இருந்த ரைடு பை வொயர் டெக்னாலஜியை எடுத்துவிட்டு, வழக்கமான கேபிள் ஆப்பரேட்டட் த்ராட்டில் சென்சாரைக் கொடுத்திருக்கிறது பஜாஜ். அதேபோல், ஸ்பீடு 400-யைவிட 1 கிலோ கூடியிருக்கிறது T4.
ஸ்பீடு 400-ல் இருப்பது Vredestein நிறுவனத்தின் சூப்பரான ரேடியல் டயர்கள். இந்த T4-ல் இருப்பதோ நம் MRF நிறுவனத்தின் Zapper Bias-Ply டயர்கள்தான். இதில் ஸ்பீடு 400-யை ஒப்பிடும்போது டயர்களின் சைடு வாலும் குறைந்திருப்பதால், ஓட்டுதலில் T4 வித்தியாசப்படும்.
ஸ்பீடு 400 பைக்கின் விலை 2.40 லட்சம் என்றால், இந்த T4 பைக்கின் விலை 2.17 லட்சம். அதாவது எக்ஸ் ஷோரூமில் 23,000 ரூபாய் குறைகிறது. அப்படியென்றால், ஆன்ரோட்டில் சுமார் 50,000 வித்தியாசம் வரலாம்.
இதைவிட பல்ஸர் NS400Z, ஹீரோ மேவ்ரிக் 440 போன்ற பைக்குகளெல்லாம் 2 லட்சத்துக்குக் கீழே (Ex Showroom) இருக்கின்றனதான். இருந்தாலும் என்னைக் கேட்டால், இந்த 2.17 லட்சம் விலைக்கு ஒரு 400 சிசி பைக்கான T4, மார்க்கெட்டில் மதிப்பு என்றுதான் சொல்வேன்.