Doctor Vikatan: கோவிட் தொற்று முடிந்துவிட்டதாக கடந்த சில வருடங்களாகத்தான் ஓரளவு நிம்மதியாக இருக்கிறோம். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேரியன்ட் பரவ ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதுவரை பார்த்ததிலேயே இந்த உருமாற்றம் சற்றே தீவிரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்களே... அது உண்மையா... ஏற்கெனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் இந்தத் தொற்றுக்கு எதிராகப் போராட உதவாதா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
நீங்கள் கேள்விப்பட்ட தகவல் நூறு சதவிகிதம் உண்மைதான். கோவிட் 19 தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே, அதன் உருமாற்றங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவற்றில் ஒமிக்ரான் (Omicron) என்ற உருமாற்றம் மிக முக்கியமானதாக இருந்ததையும் அறிவோம்.
கோவிட் தொற்றின் இரண்டாவது அலை முடிந்ததும் ஒமிக்ரான் பரவல் ஆரம்பித்தது. SARS-CoV-2 என்பதன் உருமாற்றம்தான் ஒமிக்ரான். அதற்கடுத்து பல உருமாற்றங்கள் வந்தன. ஆனால், அவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. சில உருமாற்றங்கள் லேசான அறிகுறிகளைக் காட்டி, தானாக மறைந்தன. 'ஃப்ளு லைக் இல்னெஸ்' (Influenza-like illness) என்று சொல்லக்கூடிய லேசான இருமல், சளி, காய்ச்சலுடன் அவை நம்மைக் கடந்து போயின.
ஆனால், இப்போது பரவத் தொடங்கியிருப்பது XEC எனும் உருமாற்றம். சார்ஸ் கோவிட்-2 வேரியன்ட்டின் இந்தப் பரவல், முக்கியமான உருமாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதன் பரவல் மிகவும் தீவிரமாக இருப்பது தெரிகிறது. அதாவது ஏற்கெனவே கோவிட் தொற்று தடுப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் இந்தப் பரவல் தீவிரமாகத் தாக்குவதைப் பார்க்க முடிகிறது.
இந்தப் புதிய வகை வேரியன்ட்டானது அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியிருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தியாவிலும் தொற்றுப் பரவலுக்கான அறிகுறிகளைக் கேள்விப்படுகிறோம். இந்தத் தொற்றானது நடுத்தர வயதினரையே அதிகம் தாக்குகிறது. மிகவும் கடுமையான தலைவலி, தீவிரமான தொண்டைவலி, அதிக காய்ச்சல், கூடவே இருமல், சளி, அதீத சோர்வு, உடல் வலி, தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம்... இன்னும் சிலருக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இந்தத் தொற்றானது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தெரிய வந்திருக்கிறது.
இதே நிலை நீடித்தால் இந்தப் பரவல் அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து மீண்டும் ஓர் அவசர நிலையை ஏற்படுத்தலாமோ என்பதுதான் இப்போதைய அச்சமாக உள்ளது. அப்படி மீண்டும் ஒரு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் அதற்கு நம்முடைய சுகாதார கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும். தற்சமயம் 25-க்கும் அதிகமான நாடுகளில் இதன் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோரும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படும் ரிஸ்க் அதிகமாக இருக்கிறது.
கோவிட் தொற்றை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிற மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன். மாஸ்க் அணிவதையும், ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்துவதையும் மக்கள் உடனடியாகத் தொடங்க, தொடர வேண்டும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதும், தனிமைப்படுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியம். அறிகுறிகள் தென்படுவோரிடமிருந்து விலகி இருக்க வேண்டியதும் அவசியம்.
ஒருவேளை இந்தப் பரவல் மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தாமலும் போகலாம். ஆனால், இதன் பரவலையும் அதன் தீவிரத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது முந்தைய வேரியன்ட்டுகளை விட மிகவும் மோசமானதாகவே தெரிகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தெளிவான விளக்கங்களைக் கொடுக்க வேண்டும்.
இதற்கு முன்பு வந்த தொற்றுப் பரவல்களில் 'சார்ஸ்' (Severe acute respiratory syndrome (SARS) எனப்படும் தீவிர சுவாச பாதிப்பை நாம் பார்க்கவில்லை. ஆனால், XEC உருமாற்றம், தீவிர சுவாச பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. அதுதான் இதில் மோசமான விஷயமே. இதன் பரவலும் தீவிரமும் முந்தைய வேரியன்ட்டுகளைவிடவும் மோசமாக இருப்பதால், இப்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. வருமுன் காப்போம் என்பதை இந்த முறை மிக மிக கவனமாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.