பிரிட்டிஷ் ஜோடியான பீட்டர் ஸ்காட் மற்றும் கிறிஸ்டைன் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காகச் சட்ட ரீதியாக தன்னார்வாளர்களின் உதவியுடன் தற்கொலை செய்ய சுவிட்சர்லாந்து செல்லவிருக்கின்றனர்.
80 வயதான கிறிஸ்டைன் ஒரு ஓய்வுபெற்ற செவிலியர். இவருக்கு ஆரம்ப நிலை வாஸ்குலர் டிமென்ஷியா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவரது கணவர் ஸ்காட் (வயது 86, ஓய்வுபெற்ற ஏரோஸ்பேஸ் இஞ்சினியர்) தன்னுடைய மனைவி இல்லாமல் வாழ முடியாது எனக் கூறி, இந்த முடிவை எடுத்துள்ளார்.
1941 முதல் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வமாகத் தன்னார்வ உதவியுடன் தற்கொலை செய்ய முடியும். சுவிட்சர்லாந்தில் உள்ள தி லாஸ்ஃப் ரிசார்ட் என்ற நிறுவனம், சவப்பெட்டி போன்ற ஒரு வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது. இதற்கு சர்கோ போட் என்று பெயர். இது கருணை கொலை செய்யப் பயன்படுகிறது. இதில் தற்கொலை செய்பவர் படுத்ததும் மூடி, அதை நைட்ரஜனால் நிரப்பி விடுவர். இதனால் சில நொடிகளில் மரணம் நிகழும்.
2019ம் ஆண்டு இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை எளிதாகப் பயன்படுத்த முடியாது. பல விதிமுறைகளும் வழிமுறைகளும் உள்ளன.
"நாங்கள் நிறைவான நீண்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். ஆனால் இப்போது வயதாகிவிட்டது. வயோதிகம் உங்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்யாது. எனது உடல் பலவீனமடைந்து வருவதற்கு இணையாக கிறிஸின் மன திறன்கள் மெதுவாக அழிவதைப் பார்க்கும் எண்ணமே என்னைப் பயமுறுத்துகிறது." என்கிறார் ஸ்காட்.
மேலும், "என்னால் முடிந்த அளவுக்கு நான் அவளைக் கவனித்துக்கொள்வேன். ஆனால், தன் வாழ்க்கையில் அவள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட பலரைக் கவனித்துக்கொண்டாள். அவள் தன்னையும் தன் வாழ்க்கையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறாள். அசிஸ்டெட் டையிங் அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது, அவள் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை.
நாங்கள் விரும்புவது தேர்ந்தெடுக்கும் உரிமை. இங்கிலாந்தில் நாங்கள் அதைச் செய்ய முடியாது என்பது மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது." என்றார்.
இந்த தம்பதி சுவிட்சர்லாந்து சென்றதும், ஆல்ஃப் மலையில் நடைப்பயணம் செய்யவும் கடைசியாக வைன் அருந்தவும் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களின் முடிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்டில் தெரிவியுங்கள்...