BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 10 September 2024

`பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் ஆய்வு' மத்திய அரசின் ஒப்புதலும்... நகர்வுகளும்..!

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. மேலும், அதற்கான ஆய்வு எல்லை வரையறைகளையும் வகுத்து கொடுத்திருக்கிறது. இதனால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

பரந்தூர் மக்கள் போராட்டம்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலங்கள் தேர்வுசெய்யப்பட்டு இறுதிசெய்யப்பட்டன. இதனால் வீடுகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் என சுமார் 5,476 ஏக்கர் பரப்பளவு நிலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு தங்களின் வாழ்விடங்கள் முற்றிலும் பறிக்கப்படும் என்பதால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் 777 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய மாநில அரசுகள் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்காமல் அடுத்தடுத்து நில கையகப்படுத்துவதற்காக முதற்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமான `டிட்கோ'(TIDCO) முன்மொழிந்திருக்கும் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதி மற்றும் வரையறையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருக்கிறது. அந்த வரையறையில்,

``விமான நிலைய கட்டடம், விமான ஓடுபாதை, வாகன நிறுத்துமிடம், பசுமை பகுதி உள்ளிட்டவற்றின் வரைபட விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் தொல்லியல் சார்ந்த பகுதிகள் இருக்கின்றனவா என்ற விரிவான ஆய்வை நடத்தவேண்டும். அதன்படி, இந்திய தொல்லியல் துறையின் தடையில்லா சான்றிதழையும் பெறவேண்டும்.

மத்திய அரசின் அனுமதி

ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் நீரியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக மாநில வனத்துறையின் ஆலோசனையுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதேபோல, சதுப்பு நிலம் பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, மாநில அரசின் சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.

மேலும், வலசைப் பறவைகள், நீர் நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒப்புதல் பெறவேண்டும். போக்குவரத்து மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டம் தொடர்பான விரிவான அறிக்கைகளை தயாரிக்க வேண்டும்.

பரந்தூர் மக்கள்

இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம், மாற்று இடம் வழங்குவது தொடர்பான சமூக தாக்க ஆய்வு நடவடிக்கைகளை விரிவாக ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். திட்ட முடிவின்போது திட்ட மதிப்பீட்டு அறிக்கையை கொடுக்கவேண்டும்" உள்ளிட்டப் பல்வேறு வரையறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, பூவுலகின் நண்பர் அமைப்பு, ``பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை வழங்கியிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், பரந்தூர் விமான நிலையப் பகுதிகளின் நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையைப் பகிர தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மறுப்பு தெரிவித்திருகிறது. இந்தத் தகவல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அரசு உயர்மட்டக் குழுவின் அறிக்கையைப் பகிர மறுத்து ஆர்.டி.ஐ-யில் பதிலளித்திருக்கிறது. அப்படியெனில் இத்திட்டத்தால் நீர்நிலைகளுக்குப் பாதிப்பு அதிகம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா? தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் உயர்மட்டக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதுதான் நோக்கம் எனில் உயர் மட்டக் குழுவின் அறிக்கையைப் பொதுவில் பகிர மறுப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியிருக்கிறது.

பூவுலகின் நண்பர்கள்

அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் முன்மொழிந்துள்ள திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான வரையறையை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த ஆய்வு வரையறையினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து 775 நாள்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் ஏகனாபுரம் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் ஒன்றிய-மாநில அரசுகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைப்பது, மக்களாட்சி மாண்பினைக் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.

சீமான்

தமிழ்நாட்டில் இராம்சார் தளங்களை (Ramsar Sites) அறிவித்ததற்குப் பெருமைகொள்ளும் நாட்டின் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களின் அதே அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் ஈர நிலங்கள் மற்றும் வேளாண் பகுதிகளைக் கையகப்படுத்தி வானூர்தி நிலையம் அமைக்க அனைத்து வழிகளையும் அமைத்துத் தருவது பாஜக அரசின் உண்மை முகத்தைக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் வளங்களை அழிக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வரும் ஒன்றிய அரசினை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிப்பதில் வியப்பேதுமில்லை. இனியும் இப்போக்கினைத் தொடராமல், இத்திட்டத்திற்கான முன்னெடுப்புகளையும் அனுமதிகளையும் கைவிட்டு, பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினருடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து செயற்பட வேண்டும் என்று ஒன்றிய-மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி |

இந்தநிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``அரசு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி பரந்தூர் மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகாண வேண்டும். மக்களின் பிரச்னைகள் என்ன, கோரிக்கைகள் என்னென்ன என்பதையெல்லாம் ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலம் தீர்வு காண வேண்டும்!" என அறிவுறுத்தியிருக்கிறார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies