இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கிறார் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க. பூகோள அரசியல்ரீதியாக முக்கிய இடத்தில் இலங்கை இருக்கிறது. சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா என அத்தனை பெரிய நாடுகளும் இலங்கையையும் அங்கே நிகழும் மாற்றங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் இடதுசாரி தலைவராக அதிபராகியிருக்கும் அநுரவை இந்தியா எப்படி பார்க்கிறது? அவர் சீனாவின் பக்கம் நிற்கப்போகிறாரா இந்தியாவின் பக்கம் நிற்கப்போகிறாரா?
ரோஹன விஜேவீரா ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியை தொடங்கிய காலத்திலிருந்தே அந்த கட்சி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் பெரும்பாலான சமயங்களில் இருந்திருக்கிறது. ஆயுதமேந்திய கிளர்ச்சியின் மீது அந்த கட்சி நம்பிக்கைக் கொண்டிருந்தது. அந்தக் கட்சியின் தொடக்கக்காலத்தில் அதன் உறுப்பினர்களுக்கு அவர்களின் கொள்கை சார்ந்த பாடங்களை வகுப்பாக எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். Indian Expansionism என்ற பெயரில் ஒரு பாடத்தை கூர்மையாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். சிக்கிமை இந்தியா தனதாக்கிக் கொண்டதை போல அண்டை நாடுகளை இந்தியா சூறையாட நினைக்கலாம் எனக்கூறி அதற்கு எதிராக தங்களின் தொண்டர்களை தயார்ப்படுத்தியிருக்கின்றனர்.
1980 களில் ஈழத்தமிழர் பிரச்சனை உச்சத்தை எட்டியது. அந்த சமயத்தில் ராஜீவ் காந்திக்கும் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்திய இராணுவத்தின் அமைதிப்படை ஒன்று இலங்கையில் இறங்கியது. அந்த ஒப்பந்தத்துக்கும் இந்திய இராணுவத்துக்கும் எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா தீவிரமாக போராடியது. தேசப்பிரேமி ஜனதா வியாபரயா என்ற ஜனதா விமுக்தியின் ஆயுதமேந்திய குழு இந்திய இராணுவத்துக்கு எதிராக தாக்குதலிலும் இறங்கியது. இந்த கலவரத்தில் எக்கச்சக்கமான மக்களும் கொல்லப்பட்டனர்.
இந்த காலக்கட்டத்தில்தான் அந்த கட்சியின் தலைவராக இருந்த ரோஹன விஜேவீராவும் கொல்லப்பட்டார். இந்த கலவரம் 1989 இல் முடிகிறது. முரணாக ஜனதா விமுக்தி பெரமுனாவின் பொலிட் பியூரோவை சேர்ந்த சோமவன்ச அமரசிங்கே என்பவர் இலங்கையிலிருந்து இந்தியா வழியாக பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். 12 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு திரும்பியவர் இந்தியாவுக்கு நன்றியும் கூறியிருந்தார். ஐ.நாவின் அறிவுறுத்தலின் படி 2004 சுனாமி காலக்கட்டத்தில் போரை நிறுத்தி விடுதலைப் புலிகளோடு இணைந்து வடகிழக்கு பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட இலங்கை அரசு முயன்ற போது அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வேளாண்துறை அமைச்சராக இருந்த இதே அநுர குமார திசாநாயக்க தன்னுடைய அமைச்சர் பதவியையும் இதற்காக ராஜினாமா செய்திருந்தார்.
சமீபத்தில் இலங்கையில் அதானியின் முதலீடுகளை எதிர்த்தும் ஜனதா விமுக்தி தீவிரமாக போராடியிருந்தது. இந்நிலையில்தான் அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வென்றிருக்கிறார்.
2022 இல் இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. அந்த நெருக்கடிக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் பலவற்றிலுமே அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனாதான் வெல்லும் என முடிவுகள் வெளியானது. இந்த சமயத்தில்தான் இந்தியாவும் ஜனதா விமுக்தியுடன் தங்களின் உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வேலையில் இறங்கியது. கடந்த பிப்ரவரியில் அநுரவுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு விடுத்தனர். அவரும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய் சங்கரையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலையும் சந்தித்திருந்தார்.
'இருதரப்பு உறவையும் தேசப்பாதுகாப்பையும் வலுப்படுத்தும் வகையிலான சந்திப்பு.' என இந்தியா சார்பிலும் அநுர சார்பிலும் கூறப்பட்டது. 'எந்த முதலாளிக்கும் எந்த நாட்டுக்கும் இலங்கையை விற்றுவிடமாட்டோம்.' என இலங்கையில் இறங்கி அநுர பேட்டி கொடுத்திருந்தார்.
இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இந்தியாதான் இலங்கைக்கு முதல் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறது. இலங்கைக்கான இந்தியாவின் ஆணையர் சந்தோஷ் ஜா முதல் பூங்கொத்தை அநுராவுக்கு கொடுத்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். இருதரப்பின் உறவை வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பயணிக்க தயார் என மோடியின் வாழ்த்துக்கு நன்றியும் சொல்லி கைகோத்திருக்கிறார் அநுர.
இந்தியா - இலங்கை உறவில் அநுர அதிபர் ஆகியிருக்கும் நிகழ்வு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன், ''ஈழத்தமிழர்களுக்கு எதிரான பல போராட்டங்களில் இந்த ஜனதா விமுக்தி பெரமுனா ஈடுபட்டிருக்கிறது. சுனாமி சமயத்தில் வடகிழக்கு பகுதிகளில் மறுசீரமைப்பு முயற்சிகளை எடுக்கையில் தீவிரவாத அமைப்புடன் கைகோர்ப்பதா எனக் கேட்டு சந்திரிகா பிரதமராக இருந்தபோது அமைச்சரவையிலிருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து வெளியே வந்தவர்தான் அநுர குமாரா. இதனால் அநுராவை தொடக்கத்திலிருந்தே வடகிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்து வந்தனர்.
தேர்தல் முடிவுகளிலுமே அது பிரதிபலித்திருக்கிறது. வடகிழக்கு பகுதிகளில் அநுர மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறார். இப்போதைக்கு அவர் சிங்களர்களின் ஜனாதிபதியாக மட்டுமே பார்க்கப்படுகிறார். அவர் கடந்த இரண்டு நாட்களாக தன்னை அனைவருக்குமான ஜனாதிபதியாக செயல்படுவேன் என பேசிவருகிறார். அது நம்பிக்கையை அளிக்கிறது. ஆயினும், அவரின் செயல்பாடுகளைப் பொறுத்தே எதையும் தீர்மானிக்க முடியும். அநுர சீனாவுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்தான். சீனாவுக்கு பல முறை நேரில் சென்றிருக்கிறார். சீன தூதரே கூட அநுரவுக்கு ஆதரவாக இலங்கையுள்ள பல அரசியல் கட்சிகளிடமும் பேசியிருக்கிறார். சீனா அநுரவை தங்களுடைய ஆளாகவே பார்க்கிறது. இந்தியாவுடன் அநுரவுக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. சமீபத்தில்தான் இந்தியாவின் அழைப்பின் பேரில் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை சந்தித்துவிட்டு சென்றார். இலங்கை சீனாவுக்கு ஆதரவாக இருந்தாலுமே கூட இந்தியாவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது. இலங்கையும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது.
சில வணிக விஷயங்களுக்கு சீனாவை விட இந்தியாவை இலங்கை சார்ந்திருப்பதுதான் அவர்களுக்கு லாபமாக இருக்கும். அதனால் இருநாடுகளுமே ஆரோக்கியமான உரையாடலை வளர்த்துக்கொள்ளவே விரும்பும். இப்போதைக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை பெற வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கும். சில மாதங்களுக்கு அவரின் செயல்பாடுகளை பொறுத்துதான் அவரை மதிப்பிட முடியும்.' என்கிறார்.
இந்தியா, சீனா, அமெரிக்கா என எல்லா பக்கமும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவோம் என அநுர வாழ்த்துகளுக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் யார் பக்கம் நிற்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb