காலா பானி சிறைச்சாலை என்று அறியப்படும் கொடூர சிறைச்சாலை அந்தமானின் போர்ட் பிளேயர் (ஸ்ரீ விஜயபுரம்) பகுதியில் உள்ளது.
பிரிட்டிஷ் காலத்தில் இந்தச் சிறைக்கு வரும் கைதிகள் மிகக் கடுமையாக நடத்தப்பட்டனர். மிகக் குறைந்த வசதிகளே இருந்தது. கைதிகளுக்கு கொடிய சித்ரவதைகள் நடைபெற்றன. நோய்கள் தாக்கின.
ஆங்கிலேயே அரசு சிறைச்சாலை என்பதைத் தாண்டி, வதைக்கூடமாகவே செல்லுலார் சிறையைப் பயன்படுத்தியது. இங்கு தண்டனை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிருந்து நோய்கள் தாக்கியும் மனநல பிரச்னைகள் ஏற்பட்டும் இறந்து போகாமல் இருந்தவர்கள், தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் இந்தியா சென்று சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள் மிகக் குறைவே. ஏனெனில், அவமானப்படுத்துதல் மூலம் போராளிகளின் மன உறுதியைத் தகர்ப்பதே அந்தச் சிறைச்சாலையின் முதன்மை நோக்கம்.
சுதந்திர போராட்ட வீரர்கள் தாய் நாட்டிலேயே தண்டனையை அனுபவித்தால் சிறைகளைக்கூட விடுதலை போராட்டத்தை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்வர் என்ற காரணத்தால்தான் செல்லுலார் சிறை அந்தமானில் கட்டப்பட்டது.
சிறைச்சாலைக் கட்டப்படும் முன்...
சிறைச்சாலை கட்டப்படும் முன்னே அந்தமானுக்கு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
அப்போது அந்தப் பகுதி சேறு நிறைந்திருந்தது. கொசுக்கள், ஆபத்தான பாம்புகள், தேள்கள், அட்டைகள், வகை வகையான விஷப் பூச்சிகள் ராஜ்ஜியம் செய்தன.
நான்கு பக்கமும் சூழ்ந்திருந்த கடல்தான் சிறை. அதைத் தாண்டினால் நீண்ட நெடிய நீள வானம்.
ஆங்கிலேய அதிகாரிகள் வசதியான கூடாரங்களில் தங்கினர். இந்தியர்களோ தொழுவங்கள் மற்றும் கொட்டகைகளில் இருந்தனர். அங்கிருந்த பழங்குடிகளும்கூட இந்தியர்களை விரோதிகளாகப் பார்த்தனர்.
அந்தமானின் காற்றில்கூட விஷம் கலந்திருந்தது. பல நோய்கள் இந்தியர்களின் உயிரைக் குடித்தன. விஷப் பூச்சிகள் மிரட்டின. இந்தியர்களுக்கு மருத்துவ வசதிகள் எல்லாம் கிடையாது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை வதைத்தனர். தினசரி ஒரு வேளை உணவு மட்டுமே கிடைத்தது. அது அவர்கள் உயிரைப் பிடித்து வைத்துக்கொள்ள மட்டுமே உதவியது. ஆனால் தினமும் கொடுக்கப்பட்ட வேலைகளில் அவர்கள் நொந்து போயினர். இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு ஈவு இரக்கமின்றி மரண தண்டனை கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த வதைகளில் இருந்து மீள கைதிகள் மரணத்தை வேண்டினர். மரணம் மட்டுமே இவற்றிலிருந்து விடுவிக்கக் கூடியதாக இருந்தது.
பிரிட்டிஷ் உள்துறை செயலர் சார்லஸ் ஜேம்ஸ் லாயல் அந்தமானின் தண்டனை பற்றிய ஆய்வு செய்து, நாடு கடத்தும் தண்டனைக்கான நோக்கத்தை அந்தமான் நிறைவு செய்யவில்லை என அறிவித்தார்.
அவரது அறிக்கையில் நாடு கடத்தப்படும் தண்டனையில் ஒரு தண்டனை காலம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கைதிகள் வந்துசேர்ந்தவுடனே கடுமையான தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. இது செல்லுலார் சிறை கட்டட உருவாக்கத்துக்கு அடித்தளமாக இருந்தது.
செல்லுலார் சிறை
1896-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை இந்தச் சிறையின் கட்டுமான பணிகள் நடைபெற்றன. சிறையில் தண்டனை அனுபவிக்கப் போகும் கைதிகளே அதனை கட்டினர். அப்போது அதன் செலவீனம் 5 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்தச் சிறைச்சாலையில் 690 சிறைகள் இருந்தன. 13.5 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட அறைகள். காற்றுக்கூட புக முடியாத படி கட்டப்பட்டன.
சிறையின் நடுவே ஒரு பெரிய தூணிலிருந்து ஆங்கிலேய வீரர்களால் இந்தச் சிறைகள் கண்காணிக்கப்பட்டன. சிறுநீர், மலம் கழித்தலுக்கு காலையும் மாலையும் நேரம் ஒதுக்கப்பட்டது. மற்ற நேரங்களில் ஆங்கிலேய அதிகாரிகளை கேட்டால் அடி உதைதான் வழங்கப்படும்.
சில கைதிகளுக்கு அறையில் இரண்டு தட்டுகளும் ஒரு அலுமினிய டம்ளரும் வழங்கப்பட்டது. அதில் ஒன்றில் உண்ணவும் ஒன்றில் மலம் கழிக்கவும் செய்தனர். சில சமயங்களில் கைதிகள் அறையின் ஒரு மூலையில் மலம் கழிக்க வேண்டியிருந்தது. பின் அதே அறையில் தூங்கவும் செய்தனர்.
இந்த இருண்ட வாழ்வு நிரந்தரமானதல்ல, ஏனெனில் எப்போதும் யாரும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலைதான் அங்கு இருந்தது. இதற்காக கட்டுமானத்தின்போதே தூக்கு மேடைகளும் கட்டப்பட்டன.
விநோத தண்டனைகள்
1909 - 1931 இடையில் டேவிட் பெர்ரி என்ற பிரிட்டிஷ் அதிகாரி ஜெயிலராக இருந்தார். மாவு இயந்திரங்களை இயக்குவது, எண்ணெய் ஆட்டுவது, கற்களை உடைப்பது, மரம் வெட்டுவது, ஒருவாரம் வரை கைவிலங்கு கால்விலங்கு பூட்டி நிற்கவைப்பது, தனிமை சிறை, நான்கு நாள்கள்வரை பட்டினிப் போடுவது என வினோதமான முறைகளில் தண்டனைகள் வழங்கினார் அவர். புதிய வழிகளில் சித்ரவதைகள் செய்வது, கைதிகளை அவமானப்படுத்துவது, விசித்திரமாக மரண தண்டனை அளிப்பது ஆகியவற்றில் அவர் நிபுணராக கருதப்பட்டார்.
அந்த காலத்தில்தான் சாவர்க்கர் அங்கு தண்டனைப் பெற்றார். அவர் அங்கிருந்து விடுதலை அடைந்த பிறகு, தனது அனுபவங்களை எழுதினார். "சிறையின் கதவுகள் மூடப்பட்டவுடன், தாங்கள் 'மரணத்தின் வாய்க்குள்' சென்றுவிட்டதாக கைதிகள் உணர்ந்தார்கள்." என்று அதில் சில வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிருந்த பல கைதிகளுக்கு பைத்தியம் பிடித்தது. பலர் மரண தண்டனைக்கு ஆளாகினர். சிலர் தற்கொலைகூட செய்து கொண்டனர்.
செல்லுலார் சிறையின் முடிவு
1942-ம் ஆண்டு அந்தமான் ஜப்பான் கைவசம் சென்றது. பின்னர் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஜப்பானியர்கள் காலத்தில் கொடூரத்தின் உச்சங்கள் அங்கு அரங்கேறியது.
1945-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தண்டனைக்காக தொடங்கப்பட்ட இந்தச் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
1860-ம் ஆண்டு முதல் அதுவரை சுமார் 80 ஆயிரம் கைதிகள் அங்கு தண்டனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சுதந்திர போராட்டத்தின் பொருட்டு இந்த வதைகளை அனுபவித்தவர்களை நினைவு கூறுவதற்காக 1979 பிப்ரவரி 11ம் தேதி அப்போதைய பிரதமர் மொரார்ஜி செல்லுலார் சிறையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். யுனஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக சேர்க்கப்படுவதற்காக இதன் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.