காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தீவிர போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேல் - லெபனான் நாட்டின் எல்லையில் தினசரி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரான் நாட்டிற்கும் பாலஸ்தீன குழுவிற்கும் லெபனான் ஆதரவு தெரிவிப்பதால், இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் தகவல் தொடர்புக்காக லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா குழுவினர் பயன்படுத்தும் கையடக்க பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறின.
இதில் ஒரு சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா குழுவினர் மற்றும் மருத்துவர்கள் உட்பட 2,800 பேர் காயமடைந்தனர். லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானியும் இந்த பேஜர் வெடிப்புச் சம்பவத்தில் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா குழுவினர் தகவல் தொடர்புக்காக செல்போன் போன்ற கருவிகளை பயன்படுத்துவதில்லை. மாறாக இவர்கள் பேஜர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அறிந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா குழுவினர் பயன்படுத்தும் பேஜர் கருவிகளில் சில சிக்னல்களை மறித்து, அந்தக் கருவிகளை வெடிக்கச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
லெபனான் முழுவதும், குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில், பல பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறின. இந்த வெடிப்புச் சம்பவம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா குழுவினர் இந்த பேஜர் வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் இஸ்ரேல்தான் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பேஜர் வெடிப்புச் சம்பவம், சர்வதேச அரங்கில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.