ரத்தசோகை போலவே பெண்களை பாதிக்கும் இன்னொரு பிரச்னை கால்சியம் குறைபாடு. கால்சியம் நம் உடலின் செயல்பாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அது குறையும்போது சுயமாக கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் வரக்கூடிய பிரச்னைகள் பற்றியும் விளக்குகிறார் பொது மருத்துவர் ராஜேஷ்.
‘‘கால்சியம் என்றாலே அது எலும்புகளை வலுவாக வைத்திருக்க மட்டுமே என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம் உடலின் 99 சதவிகித கால்சியம், எலும்புகளில் கால்சியம் பாஸ் பேட்டாகத் திட வடிவில் இருந்தாலும் ரத்தத்தில் இருக்கிற ஒரு சதவிகித கால்சியம்தான் நுரையீரல் தசைகள், இதய தசைகள் உள்ளிட்ட நம் உடலின் மொத்த தசைகளையும் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. உடலின் ரத்த உறைவுக்கும் கால்சியம் அவசியம். அதனால்தான் நம் உடலில் தாது உப்புகளிலேயே கால்சியம்தான் அதிகமாக இருக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, கால்சிடோனின், ஈஸ்ட்ரோ ஜென், வைட்ட மின் டி உள்ளிட்ட பல விஷயங்கள் உடலில் கால்சியம் சத்து அதிகமாகாமலும் குறையாமலும் பார்த்துக்கொள்கின்றன. இவற்றில் ஒன்றில் பிரச்னை வந்தாலும் பெண்களுக்கு கால்சியம் சத்துக் குறைபாடு வரும்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ரத்தத்தில் கால்சியம் சத்து குறையவே குறையாது. நம் உடலானது ரத்தத்தில் கால்சியத்தின் அளவை 8.5 - 10.5 மில்லி கிராம் என்ற அளவில் தொடர்ந்து மெயின்டெய்ன் செய்துகொண்டே இருக்கும். ஒருவேளை குறைந்தால், எலும்புகளிடமிருந்து எடுத்துக்கொள்ளும். அதிகமானால், எலும்பிலேயே சேர்த்துவிடும். தொடர்ந்து பலகாலம் உங்களுடைய உணவில் கால்சியம் சத்து குறைவாகவே இருந்தால், ரத்தமானது எலும்புகளிலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்காமல் பலவீனமடைய ஆரம்பிக்கும். மெனோபாஸ் நேரத்தில் ஈஸ்ட்ரோஜென் குறைய ஆரம்பிப்பதால் கால்சியம் சத்தை கிரகிக்க முடியாமல் எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில்தான் ஆஸ்டியோபீனியா, ஆஸ்டியோ பொரோசிஸ் போன்ற பிரச்னைகள் வர ஆரம்பிக்கும்.
உடலில் போதுமான அளவு ‘வைட்டமின் டி’ இருந்தால்தான் உடலால் உணவிலிருக்கிற கால்சியம் சத்தை கிரகிக்க முடியும். இந்த கிரகித்தல் நிகழ்வு சிறுகுடலின் ஆரம்பப் பகுதி யான `டியோடின'த்தில் (Duodenum) நிகழும். ஒருவேளை உடலில் போதுமான அளவு ‘வைட்டமின் டி’யும் இல்லை; கால்சியம் சத்தும் இல்லை. அப்போதும் நம் உடலால் உணவிலிருக்கிற கால்சியம் சத்தை கிரகிக்க முடியாதா என்றால், ‘முடியும்’ என்பதுதான் மருத்துவ உண்மை. சிறுகுடலின் முடிவுப் பகுதியான `டெர்மினல் இலியம்' (Terminal Ileum), இந்த வேலையைச் செய்யும். மனித உடலின் மெக்கானிசம் அந்த அளவுக்கு கால்சியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு இருக்க வேண்டும்?
100 மில்லி ரத்தத்தில் 8.5 - 10.5 மில்லி கிராம் கால்சியம் இருந்தாலே போதும். தினமும் உணவில் பால் பொருள்களைச் சேர்த்துக் கொண்டாலே உடம்புக்குத் தேவையான கால்சியத்தில் 70 சதவிகிதம் கிடைத்துவிடும். மீதத்துக்குக் கீரை, காய்கறி, பழங்கள் போதும். நம் சமையலில் வாசனைக்குச் சேர்க்கிற கறிவேப்பிலையில்கூட கால்சியம் இருப்பதை மறக்கக்கூடாது.
எத்தனை மில்லி கிராம் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளலாம்?
ஒரு நாளைக்கு 500 மில்லி கிராம் முதல் 1,200 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், இந்த அளவின் மீது நிறைய விவாதங்களும் இருக்கின்றன. அதனால், கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் சராசரியாக 700 மில்லி கிராம் வரை சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். டாக்டர் பரிந்துரைத்த அளவுக்கு சப்ளிமென்ட் எடுத்துக் கொண்டால் உடலில் கால்சியம் அதிகம் சேராது. ஒருவேளை சேர்ந்தாலும்கூட, சிறுநீர் மற்றும் மலம் வழியாக வெளியேற்ற முடிந்த அளவுக்குத்தான் இருக்கும். டாக்டர் பரிந்துரைத்த மில்லி கிராமை தாண்டியோ, பரிந்துரைத்த கால அளவைத் தாண்டியோ தொடர்ந்து கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளும்போதுதான், உடலால் அதை வெளியேற்ற முடியாமல் போகும். அந்த நேரத்தில்தான் அது சிறுநீரகக் கல்லாக மாறவோ, இதய ரத்தக் குழாய்களில் படியவோ செய்யலாம்.
எப்படிப் படிய ஆரம்பிக்கும்?
உயர் ரத்த அழுத்தம், கட்டுப்படாத நீரிழிவு, உழைப்பில்லாத வாழ்க்கை முறை, பருமன், பரம்பரைத் தன்மை (சிலருக்கு பரம்பரையாகவே ‘பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி’ இருக்கும்) போன்ற பிரச்னைகள் இருக்கும்போது, இதயத்தின் ரத்தக் குழாய்களுக்குள் கெட்ட கொழுப்பு மெல்லிய படிமமாகப் படிய ஆரம்பிக்கும். காலப் போக்கில் இது லேசான மேடாக மாற ஆரம்பிக்கும். அதனால் அந்த இடத்தில் வீக்கம் வர ஆரம்பிக் கும். இதை ‘பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி’ (Atherosclerosis) என்போம். இந்த வீக்கத்தின் மீது கால்சியமும் படிய ஆரம்பித்தால், அந்தப் பகுதி கடினமாகும். அந்த வழியாகச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகச் செல்ல முடியாமல் உறைவதற்கும் வாய்ப்பிருப்பதால் ஹார்ட் அட்டாக் வரலாம். சிறுநீரகங்களிலும் சிறுநீர்க்குழாய் மென்மையாக இருக்கிறவரை கால்சியம் படியாது. குழாய்க்குள் ஏதாவது ஒரு பகுதி சொரசொரப்பாக இருந்தால் அந்த இடத்தில் கால்சியம் உப்பு படிய ஆரம்பிக்கும்.
இந்த மருந்துகளுடன் சாப்பிடும்போது கவனம் தேவை!
`டிஜாக்ஸின்' (Digoxin), `டெட்ராசைக்ளின்' (Tetracycline) போன்ற சில மருந்துகளைச் சாப்பிடும்போது கால்சியம் சப்ளிமென்ட்டையும் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் கால்சியத்தை கிரகிப்பதில் மாறுதல் நிகழலாம். சிறுநீரகக் கல் இருப்பவர்களுக்கு கால்சியம் குறைபாடும் இருந்தால், கால்சியம் சப்ளிமென்ட் தராமல் எலும்புகளிலிருக்கிற கால்சியம் கரையாமல் இருப்பதற்கான மருத்துவத்தைப் பரிந்துரைப்போம். அதனால், மருத்துவர் பரிந்துரைத்த அளவைத் தாண்டியும் காலத்தைத் தாண்டியும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே இதயத்துக்கும் சிறுநீரகங்களுக்கும் நல்லது. கூடவே, நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வராதபடிக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.