Doctor Vikatan: சிலருக்கு திடீரென காரணமே இல்லாமல் காய்ச்சல் வருகிறது. அடுத்தடுத்த நாள்களில் ஏதோ முக்கிய வேலைகள் இருக்கும் பட்சத்தில் காய்ச்சல் அந்த வேலைகளுக்குத் தடையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் காய்ச்சல் வந்தால் அதை உடனே சரியாக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.
'நாளைக்கொரு இன்டர்வியூ போகணும்... இன்னிக்கு திடீர்னு ஜுரம் அடிக்குது.... உடனே சரியாக்க ஏதாவது செய்யுங்க...' என்கிற மாதிரி கேட்கும் பலரை எங்கள் அனுபவத்தில் பார்க்கிறோம்.
முதலில் காய்ச்சல் ஏன் வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படி காய்ச்சல் வந்தால் அது உடனடியாக சரியாகிவிட வேண்டுமா என்றும் தெரிந்துகொள்ளுங்கள். நம் உடலில், மூளையில் ஹைப்போதலாமஸ் என்றோர் உறுப்பு இருக்கிறது. இது நம் உடலின் வெப்பநிலையை குறுகிய ரேஞ்சுக்குள் வைக்கச் செய்யும். அதனால்தான் நம்மால் உயிருடன் இருக்க முடிகிறது.
சில நேரங்களில் இந்த ரேஞ்ச் ரீசெட் ஆகும். அதை 'தெர்மோஸ்டாட் ரீசெட்டிங்' (thermostat resetting) என்று சொல்வோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். குளிரெடுக்கும்.
நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள் உடலில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யவே, இப்படி உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அதைத்தான் நாம் காய்ச்சல் என்பதாக உணர்கிறோம். காய்ச்சல் வருகிறது என்றால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சிலவகை காய்ச்சல் ஒரே நாளில் சரியாகிவிடும். அதுவே டைபாய்டு போன்ற காய்ச்சல் என்றால், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுக்க ஆரம்பித்த பிறகும் ஐந்து நாள்களுக்கு காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சலில் 3-4 நாள்கள் வரை ஜுரம் தொடரலாம். அதையெல்லாம் உடனடியாக சரிசெய்வதெல்லாம் சாத்தியமே இல்லை.
டெம்பரேச்சரை குறைக்க பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் வந்துவிட்டதை நினைத்து பயப்படத் தேவையில்லை. வெறும் காய்ச்சலால் யாருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. காய்ச்சலுக்கு காரணமான விஷயத்தால்தான் பிரச்னை வரும். அதைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.