Doctor Vikatan: என் வயது 34. எந்த சோப் உபயோகித்தாலும் திருப்தியாக இருப்பதில்லை. என் சருமத்துக்கேற்ற சரியான சோப்பை எப்படித் தேர்ந்தெடுப்பது? சோப்பில் எந்தெந்த விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
சோப் வாங்கும்போது அதன் விலை முதல் வாசனை வரை பல விஷயங்களையும் பார்த்து வாங்குவோம். ஆனால், அவற்றை எல்லாம் விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் டி.எஃப்.எம் (TFM) அதாவது ‘டோட்டல் ஃபேட்டி மேட்டர்’. இதுதான் சோப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது.
சோப் உறையின் மீது டி.எஃப்.எம் (TFM) அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அது 80 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், முதல்தர சோப் என்று அர்த்தம். 60 முதல் 80 சதவிகிதம் என்றால், இரண்டாம் தரம். ஆனால், அவையும் குளிக்க ஏற்றவையே. டி.எஃப்.எம் அளவு குறிப்பிடப்படாத சோப்புகளை வாங்க வேண்டாம்.
இந்திய தர நிர்ணய அமைவனம் சோப்புகளை இரண்டாக வகைப்படுத்தியிருக்கிறது. டாய்லெட் சோப் மற்றும் பாத்திங் பார் (Bathing Bar). டாய்லெட் சோப்பில் மூன்று கிரேடுகள் இருக்கின்றன. கிரேடு ஒன்றில் டி.எஃப்.எம் 76 சதவிகிதத்துக்கும் மேலும், கிரேடு இரண்டில் 70 முதல் 76 சதவிகிதமும், கிரேடு மூன்றில் 70 சதவிகிதத்துக்கும் குறைவாகவும் இருக்கும்.
பாத்திங் பார் என்பது 60 சதவிகிதத்துக்கும் குறைவான டி.எஃப்.எம் கொண்டது. அவற்றை உபயோகிப்பது சிறந்ததல்ல.
கிளிசரின் சோப், ஆயுர்வேதிக் சோப் போன்று சோப்பில் நிறைய வகைகள் உள்ளன. எந்த சோப்பை வாங்கும்போதும் டி.எஃப்.எம் அளவைப் பார்த்து வாங்குவது சிறந்தது. இவை தவிர சருமப் பிரச்னைகளுக்கேற்பவும் சோப்புகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, பருக்கள் இருப்போருக்கு பென்ஸாயில் பெராக்சைடு உள்ள சோப், வறண்ட சருமம் மற்றும் எக்ஸிமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஓட்ஸ், தேன், பால் கலந்த சோப், பூஞ்சைத் தொற்று உள்ளவர்களுக்கு ஆன்டி ஃபங்கல் சோப், பாக்டீரியா தொற்று உள்ளவர்களுக்கு ஆன்டி பாக்டீரியல் சோப்... இப்படி நிறைய சோப் உள்ளது.
ரொம்பவும் வறண்ட சருமத்துக்கு மாயிஸ்ச்சரைசர் அதிகமுள்ள சோப் உபயோகிக்கலாம். கோஜிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் உள்ள சோப்புகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை. சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இவற்றை உபயோகிக்கலாம். மெடிக்கேட்டடு சோப்புகளை நீங்களாக வாங்கிப் பயன்படுத்த வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.