Doctor Vikatan: ஒரு மருத்துவர் உண்மையானவரா, போலி மருத்துவரா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது...? பொதுமக்கள் அதைத் தெரிந்துகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?
பதில் சொல்கிறார், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனின் தமிழ்நாடு மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு
ஒரு மருத்துவமனையோ, கிளினிக்கோ... அது பதிவு செய்யப்பட்டதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள தனியார் கிளினிக்குகள், மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள் என எல்லாமே 'தமிழ்நாடு கிளினிகல் எஸ்டாபிளிஷ்மென்ட் ஆக்ட்' (Tamil Nadu Clinical Establishment Act, 1997)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அரசாங்க அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து, மருத்துவர்களின் தகுதிகளை ஆராய்ந்த பிறகுதான் மருத்துவமனைக்கோ, கிளினிக்கிற்கோ லைசென்ஸ் கொடுக்கப்படும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ப்ரிஸ்கிரிப்ஷன் கொடுக்கும் எந்த மருத்துவரும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பதிவு எண்ணை ப்ரிஸ்கிரிப்ஷனில் குறிப்பிட்டிருப்பார்கள்.
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் இணையதளத்தில் அந்த எண்ணை வைத்து அந்த எண்ணுக்கான மருத்துவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கலாம். அதில் அந்த மருத்துவரின் இளநிலை, முதுகலை கல்வித் தகுதிகள் எல்லாமே தெரிந்துவிடும். அதே சமயம், எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களுக்கு அடிப்படை பயிற்சி இருப்பதால், அவர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எமர்ஜென்சி சிகிச்சை என எல்லாவற்றுக்கும் மருத்துவம் பார்க்கலாம்.
ஒவ்வொரு மருத்துவரும் அவர்களது பதிவுச் சான்றிதழை கிளினிக் அல்லது மருத்துவமனையில் டிஸ்பிளே செய்திருக்க வேண்டும். ஒரு மருத்துவர் ப்ரிஸ்கிரிப்ஷன் கொடுக்கும்போது அதில் அவரது பதிவு எண் இல்லாத பட்சத்தில் அந்த எண்ணைக் கேட்கும் உரிமை நோயாளிக்கு உண்டு. அதைக் கொடுக்க மாட்டேன் என்று மருத்துவர் சொல்ல முடியாது. ஒருவேளை அந்த மருத்துவர் கொடுக்க மறுத்தாலே அதில் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம். அவர் நம்பகமான மருத்துவர்தானா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியாது.
தமிழ்நாட்டில் ஒரு மருத்துவருக்கு கொடுக்கப்பட்ட அதே பதிவு எண், ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ வேறு ஒரு மருத்துவருக்கும் இருக்கலாம். அது பிரச்னையில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவரின் பதிவு எண்ணை அந்தந்த மாநிலத்தின் மெடிக்கல் கவுன்சிலில்தான் செக் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் டிஎன்எம்சி (TNMC) எனக் குறிப்பிடப்பட்டு, கூடவே பதிவு எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து அவர் குறித்த தகவல்களைக் கண்டுபிடிக்கலாம். சில காலத்துக்கு முன்பு மருத்துவர்கள் குறித்த தகவல்களோடு அவர்களின் தொலைபேசி எண்கள்கூட அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக சில மருத்துவர்கள் தொலைபேசி எண்ணை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன் பிறகு பாதுகாப்பு கருதி, மருத்துவர்களின் தொடர்பு எண்களை நீக்கினார்கள்.
இதையும் தாண்டி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஐஎம்ஏ (Indian Medical Association) அலுவலகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை நிச்சயம் செய்வார்கள். மருத்துவரின் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை இருக்கிறது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.