தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் சங்கர் - பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 21.07.2024 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பணத்திற்காக சங்கர் பெற்ற குழந்தையை விற்றுவிட்டதாக, அப்பகுதி மக்கள் அவசர அழைப்பு எண் 100-க்கு புகார் அளித்தனர். பின்னர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக வீரபாண்டி காவல் நிலையத்தில் சங்கர் - பாண்டீஸ்வரி தம்பதியரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பராமரிக்க இயலாததால் மதுரையில் உள்ள தனது சகோதரர் மோகன் என்பவரிடம் கொடுத்ததாக சங்கர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரான மோகன் என்பவர் யார்... அவரிடம்தான் குழந்தை உள்ளதா என்று விசாரிப்பதற்காக தனிப்படை அமைத்த போலீஸார், குழந்தையை மீட்க மதுரைக்கு இரவோடு இரவாக விரைந்தனர்.
அங்கு மோகனிடம் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியதில், குழந்தை அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை சங்கரிடம் மீண்டும் போலீஸார் விசாரணை நடத்தியதில், போடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஹோட்டல் நடத்தி வரும் சிவக்குமார் மற்றும் அவர் மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்ததாகக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து போடி சென்ற போலீஸார் தம்பதி சிவக்குமார் - உமாமகேஷ்வரியிடம் இருந்த குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தையின் பெற்றோர் சங்கர் மற்றும் பாண்டீஸ்வரி மற்றும் குழந்தையை வாங்கிய சிவக்குமார் - உமாமகேஸ்வரி ஆகியோரை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமாரின் தங்கைக்கு குழந்தை இல்லாததன் காரணமாக சங்கரின் குழந்தையை ஒரு லட்சத்திற்கு வாங்கியது தெரியவந்தது.
இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை விற்பனை செய்த தந்தை சங்கர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய போடி தம்பதி சிவக்குமார் - உமாமகேஸ்வரி ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.