BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 12 September 2024

``மதுவாத ஆற்றலோடு கூட்டணியில இருந்துட்டு, மது ஒழிப்பு மாநாடா?" - சீமான் கடும் விமர்சனம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து சீமான், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறுகிறார்.

மதுவை ஒழிக்க வேண்டும் என கூறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனாலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் கட்சிகளுடனும், மதுவை ஒழிக்கும் கட்சிகளுடனும் மட்டும்தான் கூட்டணி என இருவரும் சொல்லவில்லை.

திருமாவளவன்

மதுஒழிப்பு மாநாடு..

இதை செய்யாத கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவர்களுக்கு வலிமை வழங்கிவிட்டு மதுக்கடையை மூட சொன்னால் அது எப்படி நடக்கும். அருந்ததியர், இஸ்லாமியர், வன்னியர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிந்த மாநில கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் ஏன் இல்லாமல் போனது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அ.தி.மு.க.வை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பதை வரவேற்கிறேன். பா.ஜ.க. வராது, ஏனென்றால் அது மதவாத ஆற்றல் என்று திருமாவளவன் தெரிவிக்கிறார். ஆனால் அவர் தற்போது கூட்டணி வைத்திருப்பது மதுவாத ஆற்றல். கடந்த 2021ம் ஆண்டு மரக்காணத்தில் 19 பேர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தனர். 2024ம் ஆண்டு மதுஒழிப்பு மாநாடு நடத்துவதன் அவசியம் என்ன. அந்தநேரமே நடத்தி இருக்கலாம். மதுஒழிப்பு மாநாடு நடத்துவதில் திருமாவளவன் காலம் தாழ்த்திவிட்டார்.

சந்திப்பு

ஸ்மார்ட் வில்லேஜ் என சொல்வதில்லை...

சாதிய ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு சமூக முன்னேற்ற மேம்பாடு என்று பேசுவது மலக்குழியின் மேல் அமைக்கும் மல்லிகை பந்தல். தற்போது கல்வியே சமமானதாக இல்லை. ராஜபாளையத்தில் உள்ள கல்விக்கும் சென்னையில் உள்ள கல்விக்கும் வேறுபாடு இருக்கிறது. கேந்திரா வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் உங்களிடம் இல்லை. முதல்தர ஆசிரியர் நகர்ப்புறங்களில் பணியமடுத்தப்படுகிறார். மூன்றாவது தர ஆசிரியர் கிராமப்புறங்களில் பணியமர்த்தப்படுகிறார். ஸ்மார்ட் சிட்டி என்றுதான் சொல்கிறார்களே தவிர ஸ்மார்ட் வில்லேஜ் என சொல்வதில்லை. நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை. எந்தவொரு அடிப்படை வசதியும் கிராமங்களில் போதுமானதாக இல்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாடத்திட்டம் சமமாக இருக்கிறதே தவிர கல்வி கற்பிப்பதில் கல்வி கற்பதற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வசதியில் சமச்சீர் இல்லை. இதேநிலைதான் சமத்துவப்புரத்திலும் தொடர்கிறது. விடுதலை பெற்ற நாட்டில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை. தாழ்த்தப்பட்ட தலைவரின் கையில் இருந்து மிட்டாய்களை கூட வாங்காமல் மாணவர்கள் கலைந்து செல்கின்றனர். அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் சாதிய வன்மம் புகுத்தப்பட்டுள்ளது.

சிவகாசியில் பட்டாசு விபத்தை தடுப்பதற்கான திட்டம் நம்மிடம் இல்லை. இது பெரிய சீர்கேடு. இதனால் தான் ஆண்டுதோறும் பேரிடரில் பல தொழிலாளர்களை பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வேலைவாய்ப்பை பெருக்கி வாழ்விடத்திலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளை முன்னெடுப்பதை தவிர வேறு வழி இல்லை.

சீமான்

வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை..

தக்காளி விலை உயர்ந்ததும் கவலைப்படும் மக்கள், தக்காளியை விளைவிக்க முயல்வதில்லை. வெங்காயத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயங்கள் நிலமும், வளமும், மனித ஆற்றலும் உள்ள இந்தியாவில் வெங்காயத்தை ஏன் விளைவிக்க முடியவில்லை. இந்தியா உலகத்திலே மாட்டிறைச்சி அதிக ஏற்றுமதி செய்யும் நாடு. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் டன் ஏற்றுமதி செய்கிறது. அதிகமாக அந்நிய செலாவணி ஈட்டும் தொழிலை பாதுகாக்க மாடு வளர்ப்பதை ஏன் செய்வதில்லை.

பால் ஏற்றுமதியில் பிரேசிலை முந்தி இந்தியா முன்னுக்கு வருகிறது. மாடு வளர்ப்பதில் என்ன பிரச்சனை. பால் உற்பத்தி ஏன் செய்யவில்லை. இன்னும் 11 மாதம் கொடுத்தால் மேய்ச்சல் நிலம் உருவாக்கப்படும். பெட்ரோல் டீசல் விலையின் மூலப்பொருள் குறைந்தாலும் விற்பனை விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் தான். அதற்கு ஜி.எஸ்.டி.யும் கிடையாது.

ராஜபாளையத்தில்

முதலாளிகளுக்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்து சட்ட வரைவுகளை கொண்டு வரும்போது பாதிப்பு ஏற்படுகிறது. முதலாளிகளின் லாபத்திற்காக உருவாக்கப்பட்ட பொருளாதார கொள்கையின் விளைவு இது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்கிறது. காய்கறி விலை போக்குவரத்து செலவு காரணமாக இரண்டு மடங்காக உயர்கிறது. இதனால் மக்கள் வாழ முடியாத நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர்" என கூறினார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies