பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஐ.க-வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் நல்ல திட்டங்களை மாநிலத்திற்குக் கொண்டுவர முடியும்.
அது பா.ஜ.க-வினால் தான் முடியும். பதவியேற்று 100 நாள்களில் பாரத பிரதமர் மோடி 15 லட்சம் கோடி ரூபாய்க்கு நாட்டிற்கான நல திட்டங்களை கொண்டு வந்தார்.
அதில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி கோயில் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம், மக்களின் உணர்வுகளை மிகவும் பாதித்துள்ளது. ஊழல் நடத்துவதற்காகவே இது போன்ற கலப்படங்கள் நடைபெற்றுள்ளன. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல தமிழக கோயில்களில்கூட நம்பிக்கையாளர்கள் தான் அந்தப் பணிகளில் இருக்க வேண்டும்" என்றார்.