``தென்மாவட்டம் எப்பவுமே அதிமுக கோட்டை.."
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள்ளிக்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, "தென் மாவட்டத்தில் எஃகு கோட்டையாக அதிமுக உள்ளது. 1972-ல் இந்த இயக்கம் தோற்றுவித்தபோது தென்பகுதியில் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் அருப்புக்கோட்டையில் வெற்றி பெற்று அதன் மூலம் தமிழகத்தின் முதலமைச்சரானார். அதனைத் தொடர்ந்து அம்மாவும் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
அதனால்தான் சொல்கிறேன், தென்மாவட்டம் எப்பவுமே அதிமுக கோட்டை. எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் வெற்றிநடை போட்டு வருகிறது.
எம்ஜிஆர் இருந்த காலத்தில் இந்த இயக்கத்தை அழிக்க கருணாநிதி பல திட்டங்களை போட்டார். எதுவுமே நிறைவேறவில்லை, 11 வருடம் கருணாநிதியால் கோட்டை பக்கமே வர முடியவில்லை.
``நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம்.."
இந்த இயக்கத்தின் வயது 52, இது பக்குவப்பட்ட வயதாகும், ஆனால், திமுகவுக்கு வயது 75 ஆகிவிட்டது, அதனால் தள்ளாடி தவழ்ந்துதான் கட்சியை, ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அதிமுகவை எந்த காலத்தில் யாராலும் வீழ்த்த முடியாது, ஏனென்றால் இது மனிதப் புனிதர் எம்ஜிஆர் போட்ட விதையாகும்.
எம்ஜிஆர் இயக்கத்தை அருகம்புல் போல உருவாக்கினார், அதனை தொடர்ந்து ஜெயலலிதா ஆலமரமாக உருவாக்கிய இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி கண் இமைகள்போல் காத்து வருகிறார். இந்த இயக்கத்தை கருணாநிதியால் மட்டுமல்ல, ஸ்டாலினால் கூட அழிக்க முடியவில்லை.
அப்படியென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் எப்படி திமுக வெற்றி பெற்றது என்று கேட்பீர்கள்? எல்லாம் திமுக செய்த சதிகளால்தான். எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவான முடிவை அறிவித்தார். ஆனால், பாஜக-வுக்கும் அதிமுக-வுக்கும் கள்ள உறவு என்று திமுக பொய்ப்பிரசாரம் செய்தனர். குறிப்பாக, சிறுபான்மை மக்களிடத்தில் எடுத்து சென்றார்கள் .
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுந்த ஓட்டுகள் திமுகவிற்கு விழவில்லை. ராகுலா? மோடியா என்பதற்கு கிடைத்த ஓட்டாகும். தமிழகம் திராவிட மண், இங்கு பாஜக எந்த காலத்திலும் கால் ஊன்ற முடியாது. சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினா? எடப்பாடியாரா என்ற நிலை இருக்கும். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு வேலை இருக்காது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று மக்கள் நினைத்துள்ளனர்.
ஜெயலலிதா பல திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அதேபோல், எடப்பாடி பழனிசாமி 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்து அரசு மாணவர்கள் பயன்பெறவைத்து அதற்கான நிதியைக்கூட அரசு தரப்பில் வழங்கினார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்.
``கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.."
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்துப் செய்யப்பட்டது. ஆனால், தற்போது எந்த பணியும் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை.
இன்றைக்கு மின்சார கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவைகள் உயர்ந்து விட்டது. ரேஷன் கடையில் பருப்பு இல்லை, சமையலுக்கு எண்ணை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் பேருக்கு பொருள்கள் வழங்கவேண்டிய ரேஷன் கடைகளில் 100 பேருக்கு மட்டுமே பொருள்களை வழங்குகிறார்கள். ரேஷன் பொருள்கள் எல்லாம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
``இன்னும் 15 அமாவாசை தான்.."
அதிமுக தொண்டர்கள் இதுபோன்று ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்க மாட்டார்கள், ஏனென்றால் நாங்கள் உழைத்து பிழைக்க பிறந்த கூட்டம், இதைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா தற்போது எடப்பாடி பழனிசாமி வரை வழி நடத்தி வருகிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க திமுக ரெடியாக உள்ளது என கூறி வருகிறார்கள், 2011 ஆம் ஆண்டில் இதை கடைபிடித்துதான் தோல்வியை பெற்றார்கள். அதே நிலை தற்போது மீண்டும் வரும். எடப்பாடியார் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதில் பிரச்னை என்று கூறுகிறார்கள், எதற்கு பிரச்னை ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்டாலினோ ஏமாற்றம் இருக்காது மாற்றம் என்று கூறுகிறார். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கிக் கொள்ளுங்கள், இன்னும் 15 அமாவாசை தான் உங்களுக்கு உண்டு. அதனை தொடர்ந்து தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பௌர்ணமி ஆரம்பம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 234-ல் 230 தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும், அதற்கு கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் பாடுபடவேண்டும்" என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...